மன்னார் வைத்தியசாலை

மன்னார் வைத்தியசாலை

மன்னாரில் வைத்தியர்களின் அசமந்த போக்கால் உயிரிழந்த தாய்க்கு நீதி கோரி மக்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (5) நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் வைத்தியசாலையினுள் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் மன்னார் காவல்நிலையத்தில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (05) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணைமனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.