மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை

மயிலத்தடு மேய்ச்சல் தரை பிரச்சினை – 80க்கும் அதிகமான கால்நடைகள் கொலை – கண்டுகொள்ளாத அரசாங்கமும் அதிகாரிகளும் !

தமது போராட்டம் கடந்த 82 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இது வரை 80 க்கும் மேற்பட்ட பசுக்களை தாம் பறிகொடுத்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர்.

தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கடந்த 82 நாட்களாக பண்ணையாளர்கள் தொடர்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

அந்தவகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச சார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது.

 

சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும் அதனை செய்படுத்த பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லை. அதுமட்டுமில்லாது எமது கால்நடைகள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டாளும் அவர்கள் எமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

 

இதன்காரணமாக பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதால் மனநோயிக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

“மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை பொலிஸார் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை.” – சாணக்கியன் குற்றச்சாட்டு !

மட்டக்களப்பு மயிலத்தமடு  மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில்  ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைகளை பொலிஸார் செயற்படுத்தவில்லை. நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில் எவரிடம் இது  தொடர்பில்  முறையிடுவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  இன்று (18) புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை.  பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சரும் நாட்டில் இல்லை. அத்துடன் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள  சேவைகால நீடிப்பும் சட்டவிரோதமானது. பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட  பதவி நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையால் நீக்க முடியாது என்று இன்னொரு தரப்பு கூறுகிறது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி  தலைமையில் விசேட கூட்டமொன்று  இடம்பெற்றது. மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை  பொலிஸார்  இன்று வரையில் பொலிஸாரால் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் மூவர் தொடர்பிலும் பிரச்சினை இருந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக கலந்துரையாடி அதற்கு தீர்வு காண வேண்டும். பொலிஸ்மா அதிபர் இல்லாத நேரத்தில் நாங்கள் பிரச்சினைகளை யாரிடம் கூறுவது.

மட்டக்களப்பில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி கூறியதை யார் செயற்படுத்தப் போகின்றார். அது தொடர்பில் யாரை கேட்பது. நாட்டில் சட்டத்தை செயற்படுத்துவதற்கு யார் பொலிஸ்மா அதிபராக இருக்கின்றார். என்பதை குறிப்பிட  வேண்டும்.

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவம்  மீண்டும் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது.இது தொடர்பில் ஆளும் கட்சியில் பொறுப்புடன்  ஒருவர்  பதிலளிக்க வேண்டும் என்று  கேட்கின்றேன் என்றார்.

இதன்போது  எழுந்து பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன எதனை கேட்பதென்பதனை குழப்பிக்கொண்டே  அவர் கேட்கிறார். ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்தப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி இவர்களையும், அதிகாரிகளையும் அழைத்து சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதுடன்,  அது தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அது தொடர்பில் சீனா செல்ல முன்னர் என்னிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆகவே  அந்தப் பிரச்சினையை அத்துடன் நீக்கிக்கொள்ளுங்கள். ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சர், அவர் எங்கு இருந்தாலும் தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என்றார்.

இதனை  தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த சுயாதீன உறுப்பினர்  நிமல் லான்சா, இந்த சபையில் ஜனாதிபதி இல்லாத நேரத்திலேயே இவ்வாறு பேசுகின்றார். இவ்வாறு கருத்து முன்வைக்க முடியாது என்றார்.

இவ்வேளையில் சாணக்கியன்  குறுக்கிட்டு கருத்து தெரிவிக்க முயன்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்  இவரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை கோருகின்றேன் என்றார்.

தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர்  நிமல் லான்சா ,

நான் சபாநாயகரிடமே பேச சந்தர்ப்பம் கேட்டேன். நான் சுமந்திரனிடம் கேட்கவில்லை, சாணக்கியனிடம் கேட்கவில்லை. தமிழ், ஆங்கிலம், சிங்களம் எதுவும் உங்களுக்கு தெரியாதா ? சபையில் இல்லாத ஒருவர் பற்றி இங்கே கூறுவது தவறே. இதனால் அந்த கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள்.

ஜனாதிபதி பிரச்சினையொன்று தொடர்பில் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இல்லையென்றால் அவர் வந்த பின்னர் சந்தித்து கதையுங்கள்.

இப்போது ஜனாதிபதி சீனாவுக்கு முக்கிய விடயமாகவே சீனாவுக்கு சென்றுள்ளார். அவர் இந்த சபையில் இல்லாத நேரத்தில் அவர் பற்றி கூறியவற்றை நீக்கிவிடுங்கள் என்றார்.