மலையக தமிழர்

மலையக தமிழர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் என நுவரெலியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

 

நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

 

”நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும்.

 

அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள் இருக்கும் காணிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டு அந்தக் காணிகளை அரசாங்கம் மீள சுவீகரிக்கும்.அதுமாத்திரமல்ல மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்.

 

வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உதவியளிக்கும். மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் மாநாடொன்று கூட்டப்படும்.

 

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.

மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து !

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

 

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று (11) முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆரம்பமாகவே 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்பில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியா சார்பில் கையொப்பமிட்டார்.

 

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலேயே மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசால் மலையகத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

பாரத பிரதமர் மோடி, மலையகம் வந்திருந்தவேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

 

முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபா உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 28 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“நீண்ட கால முயற்சிகளின் பின் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” – மனோ கணேசன்

“நீண்ட கால முயற்சிகளின் பின்னணியில் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாட்டுத் தூதுவர்களுடனும், அந்தந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்துபோகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள் காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பல நாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் நாம் எதிர்வரும் வாரங்களில் பேசவுள்ளோம்.

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் மத்தியிலான பெருந்தோட்ட பிரிவினரின் மிகவும் பின்தங்கிய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பான எமது தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இன்று பலனளிக்க ஆரம்பித்துள்ளன. இது மகிழ்ச்சியை தரும் ஒரு வளர்ச்சி மைல்கல்லாகும்.

நம்மை ஆளும், ஆண்ட அரசாங்கங்கள் எம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தும்போது, நாம் அயலவரை நாடி எமது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வது மிகவும் இயல்பானதாகும்.

இதில் தவறில்லை. இருந்தால், அரசாங்கத்திடமே தவறு இருக்கிறது. இதுபற்றிய தெளிவு என்னிடம் நிறையவே இருக்கிறது. ஆகவே, எந்த இனவாதிகளும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

எந்தவொரு முயற்சியும் ஒரே இரவில் பலன் தரப்போவதில்லை. படிப்படியான இடைவிடாத முயற்சிகளின் பின்னரே பலன் கிடைக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எம்மை நோக்கிய இந்த சர்வதேச கவனத்தை எமது மக்களுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளாக மாற்ற, நாம் நன்கு திட்டமிட்டுள்ளோம். அதன் விபரங்களை அடுத்துவரும் நாட்களில் நாடு அறிந்துகொள்ளும் என கூட்டணி தலைவர் என்ற முறையில் இப்போதே கூறிவைக்கிறேன்.

நாம் சர்வதேச அரசுமுறை பிரதிநிதிகள், தூதுவர்கள் ஆகியோருடனும், யூ.எஸ்.எய்ட், உலக வங்கி உட்பட்ட இலங்கையின் அபிவிருத்தி பங்காளி நிறுவனங்களுடனும் பேசுகிறோம்.

‘இலங்கைக்கு நீங்கள் தரும் நன்கொடைகள், உதவிகள், கடன்கள் இலங்கையில் மிகவும்  பின்தங்கிய எமது மக்கள் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்’ என நாம் வலிந்து வலியுறுத்துகிறோம்.

இன்று அரசு முன்னெடுக்கவுள்ள ‘அஸ்வெசும ஆறுதல்’ என்ற நாளாந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் நாம் எடுத்த முன்நகர் நடவடிக்கை இன்று உலக வங்கியினதும், அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை பெற்றுள்ளது.

‘அஸ்வெசும ஆறுதல்’ திட்டம் தொடர்பாக உலக வங்கியுடனான எமது அடுத்தகட்ட காத்திரமான பேச்சுகள் அடுத்துவரும் சில நாட்களில் நடைபெறும்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் போதும் கணிசமாக பணி செய்தோம். இன்று அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக நாம் அங்கம் வகிக்கும் எமது அரசு மீண்டும் உருவாகும் வரை சும்மாவே இருக்கவும் மாட்டோம்.

எதிரணியில் இருந்தபடி பணி செய்கிறோம். எமது இந்த கொள்கையை கவனத்தில் எடுக்க நமது மக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் வேண்டுகிறேன் என்றார்.