மஹிந்த ராஜபக்ச

மஹிந்த ராஜபக்ச

ராஜபக்சக்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு!

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி   எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு திங்கட்கிழமை (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில், குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வார இறுதி பத்திரிகைக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியில் தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவரும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலை வணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும்.” – மனோ காட்டம் !

நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து கொட்டிய, இவர்கள், இன்று, புதுடெல்லிக்கு போய் கைகட்டி நிற்கிறார்கள். இந்த இந்திய கடனுதவி கிடைத்திராவிட்டால், இந்த சித்திரை சிங்கள – தமிழ் புது வருடம், ராஜபக்ச அரசுக்கு கடைசி வருடமாகி இருக்கும். புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமையும் சிரிப்பாய் சிரித்திருக்கும்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியுடன் உரையாடி பழைய கடன்களை மறுசீரமைக்க முயல்கிறார்கள். அதைதான் செய்ய வேண்டும். வேறு வழியில்லை. இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கி, பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து, வீணடித்து ஏற்றி வைத்துள்ள கடன் சுமையை, திருப்பி செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்காவிட்டால், இலங்கை அதோகதிதான்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கரிசனையில் எடுக்காமல் இலங்கையின் இன்றைய அரசு அராஜகமாக செயற்பட்டது. இந்நிலைமை நீடித்து இருந்தால், இங்கும் ஒரு உக்ரைன் நிலைமை ஏற்பட்டு இருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று இலங்கை – இலங்கை உறவுகள் ஒப்பீட்டளவில் சீரமைக்கப்பட்ட காரணத்தால் இந்நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

பொருளாதார சீரழிவு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றை இந்தியாவின் உதவியுடன் பாதுகாக்க முயலும் அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தங்களையும் நேர்மையுடன் அனுசரிக்க வேண்டும். 1964ன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா ஒப்பந்தம்,1987ன் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அமுலாக்கல்கள் தொடர்பில் இலங்கை அரசு பதில் கூற வேண்டியுள்ளது. இவற்றை கண்காணிக்கும் கடப்பாடு இந்திய அரசுக்கும் இருக்கிறது.

அதேவேளை, இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் வாங்கி, பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து வீணடித்த கடன் சுமையை, திருப்பி செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்க, சர்வதேச நாணய நிதியை நமது அரசாங்கம் நாடுகிறது. சர்வதேச நாணய நிதியை பற்றி இலங்கையில் பாரம்பரியமாக நல்லெண்ணம் கிடையாது. எனினும் இன்று கடன் சுமையை மறு சீரமைக்க வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

இந்தியாவிடம் புதிய கடன் வாங்கி அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதை போன்று சர்வதேச நாணய நிதியிடம், பொருள் வாங்க கடன் பெற முடியாது. இதுபற்றி இன்று இலங்கை அரசுக்கு உள்ளேயே தெளிவில்லை. சர்வதேச நாணய நிதியை நாடுவது ஏற்கனவே வாங்கிய கடன்களை, கால அவகாசம் பெற்று எப்போது, எப்படி திருப்பி செலுத்துவது என்ற மறுசீரமைப்புக்காக என்பதை மறக்க கூடாது.

அதேவேளை சர்வதேச நாணய நிதி, ஐரோப்பிய யூனியனின் ஜிஎஸ்பி ப்ளஸ் போன்ற நிறுவன செயற்பாடுகளுக்கு பின் நிற்கும் மேற்கத்தைய நாடுகள், இந்நாட்டில் இன்றுள்ள 20ம் திருத்தம் அகற்றப்பட்டு, அதை பழைய அசல் ஷரத்துகளுடன் 19ம் திருத்தம் பிரதியீடு செய்ய வேண்டும் என இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். ஒரு காலத்தில் 20ம் திருத்தம் மூலம் உருவான சர்வதிகார ஜனாதிபதியை வரவேற்ற இலங்கை மக்கள், இன்று 20 போய் 19 மீண்டும் வருமானால் அதை வாழ்த்தி வரவேற்பார்கள். ஆகவே அதற்கான நிபந்தனை விதிக்கப்பட வேண்டும்

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும்” – கிழக்கு முனைய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மஹிந்த ராஜபக்ச !

துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சு ஒன்று நடைபெற்றுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று தொடர்ந்த நிலையில், அது அரசுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, துறைமுகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று முக்கிய பேச்சில் ஈடுபட்டுவுள்ளனர்.

இதன்போது “கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (01) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்தது.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே,

குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். பிரதமர் எமக்கு வழங்கிய உறுதிமொழி நாளைய தினம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம். குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரையில் நாம் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நாளைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியான பின்னர் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படும். குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் வேறு விடயங்கள் இருந்தால் எமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடமாட்டோம்´. என தெரிவித்ததுள்ளார்.