மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” – மஹிந்த ராஜபக்ஷ

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை எமது பாரிய பலமாகும்.எமது நம்பிக்கையை மக்கள் பாதுகாத்துள்ளார்கள்.பாரிய சவால்களுக்கு மத்தியில் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பது பலவிடயங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் விமர்சனங்கள், தவறான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளோம்.போலியான குற்றச்சாட்டுகள்,சேறு பூசல்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்தோம்.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நான் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் ஒருசில அரச தலைவர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.ஒருசிலர் பிரபாகரனுக்கு ஆயுதம் வழங்கி புலிகளின் போராட்டத்தை தூண்டி விட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ்,சி;ங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை ஏற்படுத்தினேன்.பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். இவ்வாறான பின்னணியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மாற்றத்தை  எதிர்பார்த்தார்கள். நான் அதற்கும் இடமளித்தேன்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எமது பொருளாதார கொள்கைக்கு முரணாக செயற்பட்டது.தவறான தீர்மானங்கள்,காட்டிக் கொடுப்புகள் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தின. 2015 ஆம் ஆண்டு அரசாங்கமே வரையறையற்ற வகையில் வெளிநாட்டு கடன்களை பெற்று நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது.

2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனப்படுத்தப்பட்ட நிதி நிலைமையை நாங்கள் பொறுப்பேற்றோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம்.பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டு அரகலய என்பதொன்றை தோற்றுவித்தார்கள்.

ஜனாதிபதியின் ஆடையை அணிந்துக் கொள்ள இன்று பலர் தயாராகவுள்ளார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல், தப்பிச் சென்றவர்களிடம் மக்கள் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.

ஒருசிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களை தவறான வழிநடத்துகிறார்கள்.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைய அவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

எமது கைகளில் இரத்தக் கறையில்லை.புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.எமது பயணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

“ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது.” – மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை !

தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம்” – புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

“எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

“பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்கின்றோம்.

ஐந்து வருட காலமாக தடைப்பட்டிருந்த நாட்டின் மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாயிற்று. மக்களுக்கு அதனை கண்டு மகிழ்ச்சியடைய முடியும். கொவிட்-19 வைரஸின் சவாலுக்கு உலக நாடுகள் போன்றே நாமும் முகங்கொடுத்து வருகின்றோம்.

வைரஸின் தாக்கத்தை குறைப்பதற்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு மிகுந்த சேவை அளப்பரியது. கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்தி வருகிறது.சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் ஒழுக்கம் மிகுந்த பொதுமக்களின், அரசாங்கத்திற்கான ஆதரவும் அளப்பரியதாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும். உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அரச பொருளாதார கொள்கை திட்டத்தினூடாக நாட்டிற்குள் புதிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி புரட்சி ஏற்படும் என்பது உறுதி. அதன் மூலம் உங்களதும், நாட்டினதும் எதிர்காலம் சாதகமான முறையில் வளர்ச்சியடையும் ஒரு சுபீட்சமான தேசம் உருவாகும். மிகக் குறுகிய விடயங்கள் காரணமாக நாம் இனிமேலும் வேறுபாடுகளுடன் காணப்படக் கூடாது.

எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

மலர்ந்துள்ள இவ்வருடம் அனைவருக்கும் சபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” – சர்வதேச மனித உரிமைகள் தின அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ !

“நாம் ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

1950 டிசெம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317 வது கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423 பிரிவுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசெம்பர் 10 ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன.

அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமை கொள்கைகளை 1955 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. நிலைபேறான அபிவிருத்தி கொள்கையில் மனித உரிமை கொள்கை முன்னுரிமையில் உள்ளது. மனித உரிமை கொள்கையில் ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தவாறு அரசு செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். அரசு என்ற வகையில் நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும். ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம். கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயல்படும்.

சுபீட்சமான எதிர்காலம் என்ற கொள்கையின் கீழ் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த ராஜபக்ஷ !

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (08.08.2020) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் இன்று முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை (5,27,364) பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானது மட்டுமன்றி இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவை திட்டமிடப்படவுள்ளததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.