மாகாணசபை தேர்தல்

மாகாணசபை தேர்தல்

“மாகாணசபை தேர்தலில் சிங்கள மக்களின் வாக்களிப்பு இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.” – எஸ்.சிறிதரன்

“மாகாணசபை தேர்தலில் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கட்டாயம் வாக்களிப்பார்கள். அந்த வாக்களிப்பு என்பது இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (12.04.2021) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவது சம்பந்தமாக எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எந்த முறையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தால் நாங்கள் அந்த மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

குறிப்பாக மாகாண சபை என்பது வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாகவே கொண்டு வரப்பட்டது. அந்த அடிப்படையில் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அது என்ன முறையில் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அப்பால், விரைவாகவும் வேகமாகவும் அந்த மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். அத்தேர்தலை நடாத்தி உடனடியாக மாகாண சபைகளில் அதிகார பரவலாக்கல், அதன் ஊடான மக்கள் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

19ஆம் திகதி தீர்மானிக்கின்ற திகதியென்பது பலமுறை அவர்களால் சொல்லப்பட்ட செய்திகள். இன்னுமின்னும் அதன் காலம் இழுத்தடிக்கப்படலாம். காலத்தை இழுத்தடிக்கப்படாமல் உடனடியாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

விரக்தி அடைந்திருக்கின்ற சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கட்டாயம் வாக்களிப்பார்கள். அந்த வாக்களிப்பு என்பது இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.

அடுத்து அவர்களின் அரசியல் பாரம்பரியம் அல்லது பரம்பரை அரசியல் என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற பயத்தின் காரணமாகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்த பின்னடிக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்.” – அமைச்சர் நாமல் ராஜபக்ச

“அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்தும் நோக்கத்துடன் உள்ளது.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு நான் ஆதரவை வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்
எதிர்கட்சியினர் மாகணசபை தேர்தல் முறை குறித்து ஏதாவது எதிர்ப்பினை வெளியிட்டால் அவர்கள் அதற்கான மாற்றுவழிகளை முன்வைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது” – பேராசிரியர் சரித ஹேரத்

“இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் குறைகளை மறைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

மாகாண சபைத் தேர்தல் முறைமையை நீக்கி புதிய தேர்தல் முறைமையை கடந்த அரசு அறிமுகப்படுத்தியது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் அப்போதைய அரசு தோல்வியடைந்ததால் மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை.

கடந்த அரசு எல்லை நிர்ணய அறிக்கையைக்கொண்டு வந்து அதை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வேண்டுமென்றே தோற்கடித்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தித் தேர்தலைக்   காலவரையறையின்றி பிற்போட்டுள்ளது.

நல்லாட்சி அரசு தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மாத்திரமல்ல மக்களின் ஜனநாயக உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை கடந்த அரசின் உறுப்பினர்களுக்குக் கிடையாது.

ஐக்கியக் தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முறையற்ற செயற்பாடுகள் அனைத்துக்கும் மூல காரணமாகும்.

மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் என்பது தற்போதைய அரசின் நோக்கமல்ல. தேர்தலைப் பழைய முறையிலும், புதிய முறையிலும் நடத்த முடியாத நெருக்கடி நிலை காணப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது  அரசின் பொறுப்பாகும். ஆனால், இந்தியாவின் அவசரத்துக்காக தேர்தலை விரைவாக நடத்த முடியாது. தேர்தல் திருத்த முறைமை குறித்து அரசு உரிய கவனம் செலுத்தியுள்ளது ” என்றார்.

“மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம்” – சரத் பொன்சேகா

“மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(01.010.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ,

“அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டக் காரணம் என குற்றம் சாட்டினார். அத்துடன் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கம் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்,கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், அரசாங்கத்தின் இயலாமை காரணமாக அதனை கட்டுப்படுத்த முடியாது போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம் எனவும் மாகாண சபைக்கு புதிய முகங்களையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை “ – டக்ளஸ் தேவானந்தா

“அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை “ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகத்திற்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மாகாண சபைகளின் ஊடான அதிகாரப் பகிர்வை முழுமையாக அமுல்ப்படுத்துவதனை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கி நகர முடியும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நான் சொல்வது, சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதுடன் உருவாகியிருக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதெல்லாம் கடந்த நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும் அவர்களுக்கு முட்டுக் கொண்டுத்துக் கொண்டிருந்தவர்களும் செய்திருக்க வேண்டிய வேலை. மாகாண சபைகள் செயலிழந்து போக தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம்.

அதிகாரங்கள் தேவை என்று கூப்பாடு போடுகின்றவர்கள், கடந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுடிருந்தபோது நினைத்திருந்தால், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் ஒன்றை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட்டு பழைய விகிதாரசார தேர்தல் முறையூடாக நடத்தியிருக்க முடியும். ஆனால் அக்கறையின்மையினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

எனினும், இந்த அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை எனவும் தெரிவித்தார் அமைச்சர்.