மார்ஷல் சரத் பொன்சேகா

மார்ஷல் சரத் பொன்சேகா

“நாட்டில் இராணுவப் பயிற்சி வழங்குவதற்காக தற்போதைய அரசுக்கு  7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா? ”- பாராளுமன்றில் பொன்சேகா கேள்வி !

இலங்கையில் 18 வயதுக்குக் கூடிய அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்காக தற்போதைய அரசுக்கு  7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

18 வயதுக்குக் கூடிய அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்திருந்தார். இவ்வாறு பயிற்சி வழங்கப்படுவோர் 18 – 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வைத்துக்கொண்டாலும், இந்த வயதெல்லைக்குள் மூன்று அல்லது நான்கு மில்லியன் பேர் இருப்பார்கள்.

அத்துடன், இவர்களுக்கு ஆறு மாத கால பயிற்சி என்றாலும் கூட ஒரு நபருக்கு ஆறு மாதங்களுக்கு ஏழரை இலட்சம் ரூபாய்கள் செலவாகும்.

ஒரு இலட்சம் பேருக்குப் பயிற்சிகளை வழங்குவதென்றால் 75 பில்லியன் ரூபாய் செலவாகும். இந்நிலையில், தற்போதைய அரசுக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா?

இவ்வாறான பொய்யான காரணிகளைக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்.

இதேவேளை, எந்தவொரு சர்வதேச நாடும் எமது நாட்டில் சுயாதீனத்தில் தலையிட அனுமதிக்க முடியாது என அரசு வீர வசனங்களைப் பேசிக்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வெளிநாட்டுக்குக் கொடுத்து மண்டியிடும் நிலைமை உருவாகப் போகின்றது ” என்றார்