மாவீரர் தினம்

மாவீரர் தினம்

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் கைது !

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில்  இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூறுவதில் எந்த தவறும் இல்லை.” – எதிர்க்கட்சி

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிரணியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமன்றி 2005 இல் வந்த அரசாங்கம், 2010 இல் வந்த அரசாங்கம் என அனைத்து அரசாங்கங்களும், சர்வதேசத்துடன் பகைமையையே வளர்த்துக் கொண்டன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2012 முதல் 2015 வரையான காலப்பகுதியில் எமது நாட்டுக்கு எதிராக மூன்று பிரேரணைகள் ஐ.நா.வில் நினைவேற்றப்பட்டன.

2015 இல் அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால், நாம் பொருளாதாரத் தடைக்கு முகம் கொடுத்திருப்போம். இதனால்தான் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, அன்று ஜனாதிபதித் தேர்தலை வைத்தார். பின்னர் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், மஹிந்த ராஜபக்ஷவையும் காப்பாற்றிக் கொண்டே 4 அரை வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தோம். சர்வதேசத்துடனும் ஒன்றித்து பயணித்தோம்.

இன்று மீட்டும் இந்த அரசாங்கம் பழைய போக்கையை கடைப்பிடித்து வருகிறது. சர்வதேசம் இன்று மீண்டும் எமது நாடு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. இதில் பிரதானமாக நாட்டின் சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கைகளில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனத்தன்மையை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 19 ஐ இல்லாதொழித்து 20 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தமையினால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் அக்கரைச் செலுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாம் ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேசியக் கீதத்தைக்கூட தமிழில் இசைத்தோம். இதனாலேயே நாம் சர்வதேசத்தினால் பாராட்டப்பட்டோம். சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படும் ஒரு அரசாங்கத்திற்கு எந்தக் காரணம் கொண்டும் சர்வதேசத்தின் ஆதரவு கிடைக்காது என்பதை இந்த அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு, ஊடக சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூற தடை செய்யப்பட்டுள்ளமைக்கும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும். இதற்கெல்லாம் அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும்.

அதேநேரம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும் சர்வதேசம் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. அவர்களின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகவே காணப்படுகின்றன.

அரசாங்கத்தினால் இவற்றை நிறைவேற்ற முடியும். இதுதொடர்பாக அரசாங்கம் திருத்தங்களையேனும் கொண்டுவந்தால் நாம் முழுமையான ஆதரவினை வழங்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் சாப்பாடு இல்லை. தண்ணீர் இல்லை.வீடு இல்லை. இவற்றைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளை மறந்து விடுங்கள்.” – வவுனியாவில் ஞானசாரதேரர் !

“நாட்டில் சாப்பாடு இல்லை. தண்ணீர் இல்லை.வீடு இல்லை. இவற்றைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளை மறந்து விடுங்கள்.” என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினால் மக்கள் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுமுன்தினம்  வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தார்கள். செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பில் இங்கு தெளிவுபடுத்தினார்.

வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் செயணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவிக்கையில்,

இந்தக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கை, பௌத்த விகாரரைகளை அமைப்பது, எமது மத வழிபாடுகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை, மாவீரர் தினம் தொடர்பில் எமது உரிமை  கள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் பேசியிருந்தேன்.

அப்போது அவரிடம் இருந்து வந்த பதிலில் அரசியல் கைதிகள் தொடர்பாக உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பேசியுள்ளார். மிக விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடமும் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இருந்துள்ளார்கள். மகாவம்சத்தில் தமிழ் பௌத்த துறவிகள் இருந்தமைக்கான ஆதாரம் உண்டு. தமிழ் மக்களின் வழிபாட்டுக்கான உரிமை மறுக்கப்படும் இடங்களை பார்வையிடுவதாக தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் கதிர்காமம் போன்று இரு மதத்தினரும் வழிபடக் கூடிய நிலை வருவதனை தான் விருப்புவதாக தெரிவித்தார். நாம் இணைந்து வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மாவீரர் தினம் தொடர்பில் கேட்டிருந்தேன். பல்வேறு காலங்களிலும் மரணித்த மாவீரர்களை நினைவு கூர உரிமை உள்ளது எனத் தெரிவித்தேன். இந்த விடயம் தொடர்பில் தான் முழுமையாக பதில் செல்ல முடியாது எனவும், இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தவறு. அதற்கு அனுமதிக்க முடியாது. உங்களுடைய வலிகள், பிரச்சினைகளை புரிந்திருந்தாலும் இதற்கான பதிலை வழங்கக் கூடிய நிலையில் இல்லை. எங்களுடன் சேர்ந்து இவற்றை மறந்து நீங்கள் பயணிக்க வேண்டும் எனக் கூறினார்.

இதைவிட பிரச்சினையான பல விடயங்கள் இருக்கின்றன. சாப்பாடு இல்லை, வீடு இல்லை, தண்ணீர் இல்லை இவை பற்றி நாம் பார்ப்போம் எனத் தெரிவித்தார்.

“அடக்கினால் மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்.” – தமிழ் மக்களை உசுப்பேற்றும் அடைக்கலநாதன் !

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் வைத்து வீரவசனங்களை முழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டது, போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு  கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம்  தடுக்கின்றது. இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மக்களின் உண்மையான பிரச்சினைகளை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எந்தளவு தூரம் அடையாளம் கண்டு அவற்றை தீர்க்கமுற்படுகின்றனர் என்பது இன்றுவரை புரியதா புதிரே.

உண்மையிலேயே தமிழ்தேசியம் பேசும்  அரசியல்வாதிகள் இனம்சார்ந்த ஆரோக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தாது மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அதன்மூலம் ஓட்டுக்களை சுவீகரிக்கும் அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களை பற்றி சிந்திப்போராயின் இவர்கள் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே ஏதாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தயிருப்பார்கள். இவை அனைத்தையம் விட்டுவிட்டு இன்று ராஜபக்ஷக்கள் எதிர்ப்பை கையிலெடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழிப்படையாதவரை இந்த போலித்தேசியவாதிகள் உழைக்கத்தான் போகிறார்கள்.

மாவீரர் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோரவுள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் !

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோர உள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது. இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த தடை உத்தரவுகள் நாளையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற உள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு காவல்துறையினரினால் 12 பேர் மற்றும் அவர்களோடு இணைந்த குழுவினருக்கும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு பலதரப்பட்டவர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.