மு

மு

ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொ காலமானார்!

ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொன்னம்பலம்(மு. பொ) நேற்று அதிகாலை(07) கொழும்பில் காலமானார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.

1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.

அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

இந்நிலையில் அவருக்கு அண்மையில் ‘தமிழ் நிதி’ விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது.

‘மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று’ என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த சிரேஷ்ட சட்டத்தரணி மு.ரெமிடியஸ் காலமானார் !

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் இன்று காலமானார்.

கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்தில் காயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அமரர் மு.ரெமிடியஸ் அவர்கள் மனித உரிமை ஆர்வலர். தமிழர் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்ட போதெல்லாம் குரல் கொடுத்த ஒரு நபராவார்.

முக்கியமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் த.கணேசலிங்கம் அவர்களால் மலையகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி முத்தையா என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் பிள்ளையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக ஆஜராகி தொடர்ந்து வாதாடியவர் அமரர் ரெமிடியஸ். எனினும் குறித்த பாதிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதை  தொடர்ந்து அந்த வழக்கும் காணாமல் போயிற்று. குறித்த பெண்ணுக்கு எதிராகவும் பேராசிரியர் கணேசலிங்கத்துக்கு ஆதரவாகவும் அன்று வாதாடியவர் சட்டத்தரணி ந.ஸ்ரீ காந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.