முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

“இரா.சம்பந்தன் அவதானமாக உள்ளதால் ரணில் விக்கிரமசிங்க அரசால் தமிழர்களை ஏமாற்ற முடியாது.” – சந்திரிகா குமாரதுங்க

தமிழ் மக்களின் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்காமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முனைந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் தீர்வுக்கான கலந்துரையாடலை முன்னெடுத்தால் அந்தக் கலந்துரையாடல் தோல்வியிலேயே நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது என்றும் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள் என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

“75 வருடத்தில் இலங்கையானது தோல்வியடைந்த நாடாகவே உள்ளது.”  – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

“1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 75 வருடத்தில் இலங்கையானது தோல்வியடைந்த நாடாகவே உள்ளது.”  என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

த ஹிந்துவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட காலமாகும் என்றார்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிவுக்குள்ளான பின்னரும், சுதந்திரத்தின் போது, ​​இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், 75 இல், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மட்டத்திலும் பரவலான ஊழல், இலங்கை அரசியலின் நற்செய்தியாக மாறியுள்ளதாகவும், நீதித்துறை, பொலிஸ் மற்றும் பொது சேவை உட்பட ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய தூண்களை கீழிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு ஐக்கிய பன்மைத்துவ அரசை உருவாக்க சுதந்திர இலங்கை பல்வேறு இன மற்றும் மத சமூகங்களை “ஒன்றாக இணைக்க” தவறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய அறக்கட்டளை மற்றும் சென்னை ஆசிய இதழியல் கல்லூரி இணைந்து நடத்திய ஒன்லைன் நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “எங்களுடைய அரசியல் விசுவாசங்களை ஒதுக்கிவிட்டு, இந்த இடத்தில் நாம் அனைவரும் சமூக ஆர்வலர்கள் என்பதை அங்கீகரிப்போம். இதை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

“இது ஒரு பயமுறுத்தும் சட்டமூலம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“இந்த விதத்தில் இன்று நாங்கள் இங்கு பேசுவது போல் சுதந்திரமாக பேச முடியாது. ஜனநாயகத்திற்கு இடமில்லை, அவர்கள் நம் அனைவரையும் கைது செய்வார்கள்” என்றரர்.

அரகலய இலங்கைக்கு ஒரு பெறுமதியான பாடத்தை கற்பித்ததாகவும்,”மக்கள் ஒன்றிணைந்து ஒரு மாற்றத்தை வலுவாகக் கோரினால், மாற்றத்தை அடைய முடியும்.”

“அப்படியானால், அது அரகலய அல்லது புரட்சி மூலம், நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் ஏற்பட்டுள்ளது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

நாட்டில் தற்போது வேலைசெய்யக்கூடிய அரசியல்வாதிகள் குறைந்த அளவிலேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் – 22 வருடங்களின் பின் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சட்டத்தரணிகளான அனிருத் சில்வா, கணேசராஜா, நீலகண்டன் சரவணன் ஆகியோரினால் இவ்வழக்கு நெறிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா தனது விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அம்மையாரின் அனுமதியுடனும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் சிபாரிசின் பேரில் எதுவித நிபந்தனைகளுமின்றி உடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது 22 வருட கால சிறைவாசத்திலிருந்து ஜனாதிபதி எதுவித நிபந்தனைகளுமின்றி என்னை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் அனுமதி வழங்கியதுடன் நீதி அமைச்சரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

நான் சிறையில் இருந்தபோதும் எனது ஆன்மீக கடமைகளை செய்வதற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் தனபால் ஆகியோரும் எனக்கு பேருதவியாக இருந்துள்ளதுடன் எனது விடுதலைக்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றைய இந்த விடுதலையை உறுதிப்படுத்தினார்கள்.

முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்கள், உணர்வாளர்கள் அனைவரும் எனது விடுதலைக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளனர். குறிப்பாக கனடா டொரொன்டோவில் உள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோய் சமாதானம், லண்டனைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர் ராஜன் ஆசீர்வாதம் போன்றவர்களுடன் ஏனையவர்களும் எனது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் அவ்வப்போது பேசி வந்தார்கள்.

எனது இந்த விடுதலைக்கு முழுமையான காரணம் சிறைத்துறை அதிகாரிகளும் சிறை தலைமை செயலகமுமாகும். ஜனாதிபதிக்கு எனது ஆவணங்கள் முழுமையாக பரிசீலித்து எனது விடுதலைக்கான ஒழுங்குகளை செய்து தந்தார். எனக்காக அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

“ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள்.” – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பகீர் !

“ராஜபக்சக்ளை அரகலய விரட்டியடித்தது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

தி ஹிந்துவிற்கு அவர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

இலங்கையின் நிதிப் பேரழிவு இரண்டு ராஜபக்ச ஆட்சிகளின் ஊழலின் விளைவு. அவர்களை அரகலய விரட்டியடித்தது மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ராஜபக்சக்களை நம்பியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போது நாம் திவாலாகி விட்டோம் என்பது ராஜபக்சவின் குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழலால் மட்டுமே. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக பூர்வீக அதிகாரங்களில் உள்ளவர்கள் என அனைவரையும் அவர்கள் மோசடி செய்பவர்களாக மாற்றினர். ஊழல் உச்சத்தில் இருந்து, எல்லா இடங்களிலும் பரவியது.

எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள்? தேர்தலுக்குச் சென்றாலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாதிரியான மோசடியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை மாற்றுவதற்கான ஒரே வழி ஒரு சமூக-அரசியல் எழுச்சி, ஒரு புரட்சி.

அரகலய உண்மையில் சிலிர்ப்பானது மற்றும் ஆக்கப்பூர்வமானது என்னவெனில், அவர்களிடம் ஒரு இலக்கு மற்றும் முன்னோக்கு இருந்தது. அவர்கள் வெறுமனே ராஜபக்சக்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறவில்லை. நேர்மையான அதிகாரிகள், தெளிவான நிர்வாகத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினர். அவர்கள் ஒரு 10- அம்ச திட்டத்தை வெளியிட்டனர், அந்த திட்டத்தின் இயல்பான போக்கு அற்புதமாக இருந்தது.

மேலும் சர்வதேச சமூகத்தை அடிப்படையாக கொண்ட கடினமான முடிவுகளை இலங்கை எடுக்கவேண்டிய நிலை காணப்படலாம். வெளிஉதவி குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்த நிலை காணப்படலாம். ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடையாததால் இந்தியா விலகியிருந்து காத்திருந்திருக்க கூடிய நிலை காணப்பட்ட போதிலும் இந்தியா எங்களுற்கு உதவ முன்வந்தது உதவிகளை வழங்கியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

ராஜபக்சக்கள் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன. ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள் – எப்படியிருந்தாலும் இந்த விடயங்கள் எனது தனிப்பட்ட அரசியல் முன்னுரிமைகளை பாதிப்பதில்லை,அவர்கள் நாட்டிற்கு செய்த விடயங்களிற்காக நான் அவர்களை வெறுக்கின்றேன்.

இதன் காரணமாக அரகலயவால் அவர்களை அமைதியான முறையில் துரத்த முடிந்தமை குறித்து நான் நிம்மதியடைந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஷாபி மீதான வெறுப்புணர்வு சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம்.”- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஊடக பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பொறாமை, வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஷாபி மீது உமிழப்பட்ட வெறுப்பிற்கு வைத்தியர் ஷாபி வழங்கியுள்ள பதிலிற்காக பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் வைத்தியர் ஷாபினை வணங்குகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முப்பது வருட யுத்தத்தினால் நான் ஒரு கண்ணை இழந்தேன்.” – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

“நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அது வெற்றியல்ல.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது- அது வெற்றியல்ல முப்பது வருடகால இனப்படுகொலையுத்தத்தில் நாங்கள் பெருமளவு விடயங்களை இழந்துள்ளோம்.

தென்பகுதி வடபகுதி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். நாங்கள் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என பிளவுபட்டோம். நான் ஒரு கண்ணை இழந்தேன் – யுத்தத்தினால் – மேலும் பல இழப்புகளை எதிர்கொண்டேன்.

யுத்தமுடிவை கொண்டாடும் இந்த தருணத்தில் குரோதத்திற்கு பதில் அன்பை வெளிப்படுத்துவோம். பழிவாங்குவதற்கு பதில் மன்னிப்போம். பிரிந்திருப்பதை விட இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாகயிருப்போம். எங்கள் இதயத்தில் தீமையை எழுப்புவதற்கு இறைவனை எழுப்புவோம்- இன்றைய நாளை உறுதிப்பாடு மற்றும் சமாதானத்திற்கான நாளாக மாற்றுவோம். உலகிற்கு அன்பை காண்பிப்போம்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

“மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது.”- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று ( சனிக்கிழமை ) தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறார்கள். மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது என்பதை அவர்கள் உணர வேண்டும்,” என்றும் கூறினார்.

பௌத்த பிக்குகள், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களின் வலுவான வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

 

இதே நேரம் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்குள் ராஜபக்ஷக்கள் உடன் பதவி விலக வேண்டும்.” – சந்திரிகா குமாரதுங்க விசனம் !

“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.” என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்ற பின்னர் சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரசு புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.

எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” – என்றார்.