முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கை – ரஷ்ய உறவு தொடர்பில் அதிர்ச்சியடைவதாக மைத்திரிபால ட்வீட் !

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைந்து வரும் அபாயகரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் இட்டுள்ள பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர்,

“எனது ஆட்சிக் காலத்தில் உங்களுடனான அந்த வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நமது ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவை அச்சுறுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இன்று நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் வலுவான பிணைப்பு நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அனைத்து தலைவர்களும் பதவி விலக வேண்டும்.”- முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் நாட்டில் இதுபோன்று எவ்விதமான சூழ்நிலையும் இருக்கவில்லை எனவும் தனது ஆட்சியின் பின்னர் மிகவும் நல்லதொரு நாட்டை ராஜபக்ஷர்கள் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதே தமது நம்பிக்கை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

“அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஒரு துயரமான கதியை மக்கள் எதிர்கொண்டதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் அவர் தெரிவித்த போது,

எனது ஆட்சிக்கு பிறகு பிரச்சனைகள் இல்லாத அழகான நாட்டைக் நான் கையளித்தேன். மக்கள் உணவருந்தி மகிழ்ச்சியாக இருந்தார்கள், விவசாயிகள் நன்றாக விவசாயம் செய்தார்கள், என் காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கவில்லை, ஆனால் இந்நாட்டு குடிமக்களின் அன்றாட வாழ்க்கை இன்று இருக்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கவில்லை.

அரசாங்கத்தை குற்றம் சாட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காப்பாற்ற, சிதைந்து கொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு சந்தர்ப்பமாகும். இன்று என்னை அவதூறாக பேசுகின்றனர், இழிவு படுத்துகின்றனர். ஏறக்குறைய 54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.

இன்று நம் நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன, விவசாயிகள் கண்ணீரில் வாழ்கிறார்கள், நான் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். பொலன்னறுவை மக்களிடம் வாக்குகளைப் பெற்ற மூன்று அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னைத் தவிர. அவர்களில் ஒருவரேனும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வௌியிலோ விவசாய சமூகத்தின் அவல நிலையைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆமாம் சார். ஆமாம் சார். அவ்வளவுதான்.”

“வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு.” – மைத்திரிபால சிறிசேன

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில்  நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சி. எமது கட்சியில் சிறியவர், பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை. எங்களது சுதந்திரக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது. வரலாற்றில் ஒரு முக்கியமான விடயமாகும். அதற்கு நான் அனைத்து உடுப்பிட்டித் தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தோடு எதிர்வரும் காலத்தில் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போதும் எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கு அதிகளவில் மக்கள் ஆதரவளிக்க வேண்டும். எமக்கு ஆதரவு அளித்தால் நல்ல நிலைக்கு எமது கட்சியை முன்நோக்கிக் கொண்டு செல்வோம்.

நாட்டில் தற்போது மக்கள் அதிகளவு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார்கள். எரிவாயு, பசளை, அத்தியாவசியப் பொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்கின்றார்கள். அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வட பகுதியில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். காணி விடுவிப்பு மற்றும் வீதி புனரமைப்பு போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளை எனது ஐந்து வருட ஆட்சியில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுத்திருந்தேன்” – என்றார்.

“எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன்.வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் என்னிடம்  இல்லை.” – வவுனியாவில் மைத்திரிபால !

“எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன்.வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் என்னிடம்  இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“வன்னி மாவட்டத்துடன் நான் சம்பந்தமுள்ளவனாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்பாசனம், விவசாயம் என பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன் போது வன்னி பிரதேசத்திற்கு வந்து பல சேவைகளை செய்துள்ளேன்.

2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினீர்கள். நான் ஜனாதிபதியாக இருந்த போதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன். ஜனாதிபதியாக இருந்த போது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பினை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளை செய்ய முடிந்தது. சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளை பெற்று பொலன்னறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.

எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை.விவசாயத்திற்கு தேவையான பெருட்களுக்கு தட்டுபாடு இருக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

“அரசிலிருந்து வெளியேற நாம் தயங்க மாட்டோம்.” – நாமலுக்கு மைத்திரிபால சிறிசேன பதில் !

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்த அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.” என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்தார்.

‘அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்’ என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்துகொண்டு எமக்குச் சவால் விடும் சிறியவர்களும், பெரியவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துதான் அரசியலை ஆரம்பித்தார்கள். சுதந்திரக் கட்சிதான் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முகவரி கொடுத்தது. இதை மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றியடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதான காரணம். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.

இதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை புரிந்துகொள்ளும். அரசைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. எனினும், அரசு தவறான பாதையில் தொடர்ந்து பயணித்தால் பிரதான பங்காளிக் கட்சியான நாம் அதிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்” – என்றார்.

“இலங்கைக்கு புதிய ஆட்சி ஒன்று தேவை.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் தற்போதைய குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டை தேர்தல் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்மொழியப்பட்ட விதி இதுவரை இருந்த பாரம்பரிய அரசாங்க வடிவங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். நாடு இதுவரை இல்லாத பாரிய நெருக்கடிக்குள் தள்ளபட்டுள்ளது. தற்போது உணவுப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு மாதங்களில் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.

எந்தவொரு கட்சியும் தனித்து அரசாங்கத்தை அமைக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் வாக்குகளை வழங்குவதற்கு 12 அரசியல் கட்சிகள் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இன்று சமூக, அரசியல் மற்றும் சர்வதேச துறைகளில் நெருக்கடியை காண்கின்றோம். மேலும் சர்வதேச உறவுகளை நிர்வகிப்பதில் பரிதாபகரமான தோல்வி உள்ளது. ஊழல் மோசடிகள் காரணமாக சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த எவரும் அதைக் காப்பாற்ற வரமாட்டார்கள்.

அண்மையில், மேற்கத்திய தூதரகத்தின் தூதுவர் ஒருவர் தனது இல்லத்திற்கு வந்து தன்னைச் சந்தித்ததார். ஐ.நா அமைப்பு மற்றும் உலக வங்கி மூலம் மேற்கத்திய நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்கள் உதவிகளை வழங்கும். இடதுசாரி சாய்வு, முற்போக்கு சக்திகள் உள்ளடக்கிய அரசியல் உருவாக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

வயல் வரம்பில் நடக்கத் தெரியாதவர் விவசாய அமைச்சர் – மைத்திரி காட்டம்

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை தொடர்பில் நான் கூறும் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.
பகமூன பிரதேசத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசினாலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதில்லை. விவசாயத்துறை அமைச்சர் வயலில் உள்ள வரம்புகளில் கூட செல்லத் தெரியாதவராவார். சில இராஜாங்க அமைச்சர்கள் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளால் என்னால் பொலன்னறுவை மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளது என்று கூறினேன். இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இராஜாங்க அமைச்சர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். எனினும் அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை. நான் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டேன். சேதன உரத்தினைப் பயன்படுத்தி விவசாயத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளை பழக்கப்படுத்த வேண்டும் என்றார்.

“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால்,  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றது” – ஏற்றுக்கொண்டார் மைத்திரிபால சிறிசேன

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயற்படவில்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால்,  தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஆம். அப்படியான பிரச்சினை இருக்கின்றது. அவர் கூறிய கருத்தில் பிழை இல்லை. எமக்கான கவனிப்பில் குறை உள்ளது.  ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் எதுவும் நடைபெறுவதில்லை.  உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளில் இருந்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. மற்றுமொரு தரப்பாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளன – என்றார்.

“ நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை. சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ எவையும் கிடைக்கவில்லை” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாணாசபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் சுதந்திரக்கட்சி பொதுஜனபெரமுனவுடன் இணைந்தே களமிறங்கியிருந்தது. பொதுஜனபெரமுனவின் வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்களவு காணப்பட்டது. எனினும் ஆட்சியமைத்தது முதல்  பெரமுன சுதந்திரக்கட்சியினை முன்னிலப்படுத்தாத போக்கே தொடர்ந்தது. இந்நிலையில் சுதந்திரக்கட்சியினர் பலரிடையேயும் அதிருப்தியான நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இதே நிலை தொடருமாயின் பெரமுனவிலிருந்து பிரிந்து தனித்தே தாம் மாகாணசபைத்தேர்தலில் களமிறங்க நேரிடும் என ன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலுமு் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இம்முறை எங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் எங்களிற்கு நெருக்கடி தருவார்கள் . எங்கள் வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படாவிட்டால்  பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம்.

பொதுதேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது, சிலமாவட்டங்களில் எங்கள் கட்சியினருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. களுத்துறை நுவரேலியாவில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை . கம்பஹாவில் வெற்றிபெறக்கூடிய எங்கள் வேட்பாளர்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது .

நாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர்.  தமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.  இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13வதுதிருத்தம் உருவானது.

நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா? என்பது குறித்து பார்க்கவேண்டும். மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன். 30 வருடங்களிற்கு பின்னரும் மாகாணசபை முறை வெற்றியாதோல்வியா? என்பதை நாங்கள் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

மாகாணசபைமுறைக்காக செலவிடப்படும் நிதி குறித்தும் கேள்விகள் எழுகின்றன. நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை. மாகாணசபைகளில் நாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் உரிய பலாபலன்கள் கிடைக்கவில்லை,சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ கிடைக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.