முன்னாள் போராளிகள்

முன்னாள் போராளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

 

சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நிமலனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2007 மே 28 ஆம் திகதி இரத்மலானையில் விசேட அதிரடிப்படையினர் சென்ற ட்ரக் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியமை குறித்தும் விசாரணை இடம்பெறுகின்றது.

மேலும் 2009 பெப்ரவரி 7 இல் குருநாகலில் அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தமை குறித்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

2009 மார்ச் 13 ஆம் திகதி அக்குரஸ்ஸ தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் உட்பட 46 பேரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாகவும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுகின்றன.

அத்துடன், 2009 ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பாகவும் தங்கவேலு நிமலனுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

“முன்னரைப் போல இனியும் பிழையான வழியில் செல்லாது சரியான பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள்.” – முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதி அட்வைஸ் !

“முன்னரைப் போல இனியும் பிழையான  வழியில்  செல்லாது சரியான  பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள்.” என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவுரை கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

அண்மையில் அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த   முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் இன்று சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும். உங்கள் விடுதலையைப் பற்றி  பார்க்கிறார்கள், அவதானிக்கிறார்கள் எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக செயற்பட வேண்டும். அதாவது முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது  சரியான பாதை நோக்கி  செல்லுங்கள் பழையவற்றை மறைந்து நல்லதை சிந்தித்து சமூகத்தில் உள்ளோர் உங்களை நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்

இராணுவம் என்ற ரீதியில் நாங்கள் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம். அதாவது வீடு கட்டித் தருவது என்றாலும் சரி  வேறு ஏதாவது உதவி என்றாலும்  நாங்கள் அதை செய்யத் தயாராக உள்ளோம் ஏனென்றால் அது எமது கடமையாகும் .

குறிப்பாக நீங்கள் முன்னாள் போராளிகள், நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். நாங்கள் அதையெல்லாம் மறந்து இராணுவத்தினர் ஆகிய நாம் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம். அதாவது உங்களை எமது  சகோதரர்களாக   பார்க்கின்றோம். எனவே நீங்களும் அதேபோல்  நேரான பாதையில் பயணியுங்கள் உங்களது விடுதலை அனைவராலும் பார்க்கப்படுகின்ற விடயம் ஆகும். எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக இருந்து செயற்படுவதன் மூலம் ஏனைய உங்களைப் போன்றவர்களையும் விடுவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.