முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி – ஏழு மனித எச்சங்கள் அடையாளம் !

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 7ஆவது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் போராளிகளுக்கு வழங்கப்படுகின்ற இலக்கத் தகடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மூன்று உடலங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஏழாம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு மீள இடம்பெறும் – முல்லைத்தீவு நீதிமன்றம்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு விஜயரத்தினம் சரவணன் மே.16 முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (16) இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

 

அத்தோடு, இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.ஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

 

மேலும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனிதச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

 

அந்தவகையில், அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என்கிறார் பேராசிரியர் ராஜ் சோமதேவ!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபனால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.

 

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

 

இருப்பினும் அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படும் அபாயம்..?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள் , நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும் வெளிப்படைத்தன்மையை மக்களோடு பேணுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விடயத்தை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும் – கனடா வலியுறுத்தல்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பான விடயத்தை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானம் மற்றும் சுதந்திரத்தை பேணுவது குறித்து கனடா, தொடர்ந்தும் கவனம் செலுத்தும் எனவும் ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கருத்து சுதந்திரம், பொருளாதாரம், சமூக வலுவூட்டல், கலாசார உரிமைகள் என்பன சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், நல்லிணக்கத்தின் ஊடாகவும், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாகவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடக்குமுறைகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதை ஏற்க முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொக்குத்தொடுவாயில் த.வி.புலிகளின் பெண் போராளிகளின் எச்சங்கள்..? – தகவலை மறைக்கும் ஆய்வுக்குழு..?

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் தடையப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன.

மூன்றாம் நாள் அகழ்வில் தமிழீழ விடுதலை புலிகளின் பெண் போராளிகள் உடையது என சந்தேகிக்கப்படும் உடல் எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்கப்பட்டதுடன் குறித்த உடல்களுடன் காணப்பட்ட ஆடைகளில் சில இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்றையதினம் நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாள இலக்கத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

இருந்த போதிலும் இது தொடர்பில் அதிகார பூர்வமாக தகவல் வெளியிட இன்று பொறுப்பாக இருந்த யாழ் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அகழ்விற்கு பிரதானமாக செயற்படுகின்ற சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா இன்று விடுமுறையில் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இன்றும் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்திடம் சரணடைந்த நம் பிள்ளைகளின் சடலங்களே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் – துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

 

இரண்டாம் நாளான நேற்றைய தினம் (07.09.2023) அகழ்வு பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது நேற்று முந்தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

குறித்த இடத்திற்குள் செல்ல முடியாது. இருந்தாலும் ஒரு தடவை அருகிலே நின்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. நாங்கள் அவதானித்த வகையில் பெண்ணினுடைய சடலங்கள் உறுதிபடுத்த கூடியதாக தென்படுகின்றது.

அதே நேரம் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ கூறியது போல் துப்பாக்கி குண்டு உடையில் துளைத்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. ரொபி கடதாசி ஒன்றும் அதில் பகுப்பாய்விற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

 

இதனை விட நாங்கள் அவதானித்த வகையில் கண்ணுக்கு கட்டும் துணி கூட எடுத்ததை காணமுடிந்தது.

இதிலிருந்து யோசிக்க கூடியதாக உள்ளது என்னவெனில் பல சடலங்கள் இதில் தென்படலாம் என்பது இதில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.

ஏற்கனவே நான் கூறியது போல் 2009 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் சரணடைந்த விடுதலை புலிகளை கொண்டுவந்து கண்ணை கட்டி துப்பாக்கியால் சுட்டு அல்லது சித்திரவதை செய்து இவ்வாறு புதைத்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த வகையில் காணக்கூடியதாக உள்ளது என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று மாலை முதல் மீண்டும் !

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர்(05) மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31) தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் செவ்வாய்கிழமை (5) 03.00 மணியளவில் குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அகழ்வுப்பணி தொடர்பான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் செவ்வாய்கிழமை (5) காலை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று மாலை 03.00மணிக்கு இந்தவழக்கு தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டவர்களும் குறித்த இடத்திற்கு வருகைதந்து, அங்கு ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது – என்றார்.

மேலும் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில், அகழ்வாய்வுகளுக்கான பாதுகாப்பு நிலையங்கள் மற்றும், மலசலகூடம் என்பன அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.