முல்லைத்தீவு மீனவர்கள்

முல்லைத்தீவு மீனவர்கள்

சர்வதேச மீனவர் தினம் – ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிய முல்லைத்தீவு மீனவர்கள் !

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை(21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மீனவர் தினமாகிய கார்த்திகை 21ஆம் திகதியான இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரிய தபாலட்டைகள் முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

மீனவர் தினத்தில் இலங்கை முழுவதுமாக விசேடமாக முல்லைத்தீவு மாவட்டம் இந்திய மீனவர்களுடைய இழுவை படகுகளினுடைய அத்துமீறல்களும், முல்லைத்தீவு கடற்பரப்பில் காணப்படுகின்ற கடற் திரவியங்கள் அனைத்தும் இந்திய இழுவை படகுகள் மூலமாக அபகரித்து செல்லுகின்ற துர்ப்பாக்கிய நிலை அதிகமாக காணப்படுகின்றது.

 

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று பாரிய நட்டத்துடனே தமது வாழ்வினை கழித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையினுடைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவிற்கு முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களினால் பெயர், முகவரி பொறிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட தபாலட்டையினை அனுப்பி வைக்கும் முகமாக இன்றையதினம் 500க்கும் மேற்பட்ட தபாலட்டைகள் முல்லைத்தீவில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரியே குறித்த தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரிய முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும் கடற்கரையினையும், இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பகுதி மக்களினால் வேலித் தடைகளை அகற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று மீனவர்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை விளைத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே இதற்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் பிரதேச செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது குறித்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு பெற்றுத்தரப்படும் என வாக்குறுதி அளக்கப்பட்ட நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தீர்வு கிடைக்காவிட்டால் இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.