மு. சந்திரகுமார்

மு. சந்திரகுமார்

பொலிசாரும் , தொல்லியல் திணைக்களமுமே இலங்கையில் இனவாத பிரச்சினைகளை தூண்டுகிறார்கள் -மு. சந்திரகுமார்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் பற்றி சர்வதேச தரப்புக்கள் உட்பட உள்நாட்டிலும் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் துரதிஸ்டவசமாக நாட்டின் தொல்லியல் மற்றும் பொலீஸ் திணை்களங்கள் அவற்றுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுவருகின்றமை கவலைக்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். சமத்துவக் கட்சியின் பொது செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சிவராத்தி தினத்தில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலீஸார் மேற்கொண்டு அடாவடித்தனமான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் அவர் வெளியிட்ட  அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சிவராத்திரி நிகழ்வு  சைவ மக்களின் மிக  முக்கிய நிகழ்வாகும், இந்த நாளில் மிகவும் பக்தி பூர்வமாக சிவ வழிபாட்டினை மேற்கொள்வதற்காக தங்களது பூர்வீக ஆலயத்திற்கு சென்ற தமிழ் மக்கள் மீதும் அங்கு பூசை வழிபாடுகளி்ல் ஈடுப்பட்டவர்கள் மீதும் பொலீஸார் காட்டுமிராண்டித்தனமாக

நடந்துகொண்டுள்ளனர். பொலீஸாரின்  செயற்பாடுகள் பௌத்த சிங்கள மேலாதிக மனநிலையின் வெளிப்பாடாகவே இருந்தது. புனித தலம் ஒன்றில் சப்பாத்து கால்களுடன் வெறுக்கத்தக்க வகையில் பொலீஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

நாட்டு மக்களிடையே  இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சட்டத்தின் வழி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடப்பாடுடைய பொலீஸ் திணைக்களம்  தமிழ் மக்கள் விடயத்தில் அதற்கு மாறாக செயற்படுகிறது. இலங்கையை பொறுத்தவரை பொலீஸ் மற்றும் தொல்லியல் திணைக்களங்கள் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் நடந்து சம்பவங்கள் போன்று இனியொரு சம்பவம் இடம்பெறாத  நிலை உருவாக்கப்படல் வேண்டும்.அரச நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சந்திரகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரீ.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் நீதித்துறை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை இல்லாதாக்கியுள்ளது.”- மு. சந்திரகுமார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ள செய்தி இலங்கையின் நீதி துறைக்கு கழுவு முடியாத கறையாக  படிந்துள்ளது. நீதித்துறை  மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து  உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன.

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும். அண்மையில் தனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்துள்ள அவர் தான் நீதிபதி பதவியினை இராஜினாம் செய்துள்ளார்.

இந்த நிலைமை இலங்கை நீதித்துறைக்கு மிகப்பெரும் அவமானம் என்பதோடு, தமிழ் மக்கள் இலங்கையின் நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை இழக்கும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் சம்பவமாகவும் காணப்படுகிறது.

எனவே, இவ்வாறான நிலைமைகள் இனியும் நாட்டில் இடம்பெறாத வகையில் நீதித்துறையின் சுயாதீனம்  பாதுகாக்கப்படுவதோடு, நீதிதுறை பணியாளர்களின் சுதந்திரமான பணிகளுக்கும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் உருவாக்கப்படல் வேண்டும். தவறின்  நாடு மேலும் மேலும் நெருக்கடியான சூழல் நிலைக்குள் தள்ளப்படுவதோடு, எக்காலத்தில் நிலையான சமாதானமும், இனங்களுக்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படாது போய்விடும் என முன்னாள் நாடாளுடன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

“ கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது.” – மு. சந்திரகுமார்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்படும் போது  பொலிஸார்  நடந்துகொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்குரியது என முன்னாள் பாராளுமன்ற சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

செல்வராசா கஜேந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட  ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அவர்  இந்த நாட்டின் ஓர் உயர்ந்த சபையின் கௌரவ உறுப்பினர் அவரை தெருவில் ஒன்று கூடிய சில ரௌடிகள்  சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரின் முன்னிலையில் தாக்குவது என்பது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.

தமிழ் மக்களின்  பிரதிநிதி ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமை எப்படியிருக்கும்?  வன்முறைகளை தடுத்து சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பொலிஸார் அந்த இடத்தில்   எந்த நடவடிக்கையும்  எடுக்காது இருந்தது என்பது தமிழ் மக்கள் விடயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை அப்பட்டமாக காட்டி நிற்கிறது.

இதுதான் இந்த நாட்டின் நிலைமை, தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் என்பது ஒரு நல்ல உதாரணம் எனத் தெரிவித்த அவர் நினைவேந்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேற்கொள்ளவிடாது வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமன்றி மக்கள் பிரதிநிதி ஒருவரை வீதியில் விரட்டி விரட்டி தாக்குபவர்கள் மீதும் அந்த தாக்குதல் சம்வத்தை கட்டுப்படுத்தாது நின்ற பொலிஸார் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

‘பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கே இலாபம்.” – மு. சந்திரகுமார்

“மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் தேவையற்ற ஒன்றே.” என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (12) வேரவில் பகுதியில் பத்தாவது நாளாக பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ந்தும் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற  பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருளான சுண்ணக்கல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவுற்றுள்ளது. 

குறித்த நிறுவனமொன்றினால் கடற்கரை கிராமங்களான மேற்சொன்ன கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழம் வரை சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது மிகப்பெரும் ஆபத்தை விரைவில், கிராஞ்சி, வலைப்பாடு கிராம மக்களுக்கு உடனடியாகவும் ஏனைய அயல் கிராம மக்களுக்கு படிப்படியாகவும் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது. பொதுமக்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறவேண்டிய நிலைமை உருவாகும்.

ஏனெனில், கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து குறித்த பிரதேசத்தில் உள்ள நன்னீர் உவர் நீராக மாற்றமடையும். பின்னர் நிலம் உவராக மாறும். இதன்போது மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை உருவாக்கும். மேலும் தற்போது கிராஞ்சி குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரை மூலமாக கொண்டே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.  மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் தேவையற்ற ஒன்றே. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள்  நன்மை பெறுவார்களே தவிர  அந்த மக்கள் வாழ்விழந்து போவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.