மெத்யூஸ்

மெத்யூஸ்

முதல் நாளிலேயே மூன்று சாதனைகள் – அசத்தலுடன் தொடரை ஆரம்பித்த இலங்கை அணி !

டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரையொட்டி நடைபெற்று வரும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் மூன்று கிரிக்கெட் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நியூசிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் அரைசதத்தை பதிவுசெய்த வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் இன்று தன்வசப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 5980 ஓட்டங்களை பதிவு செய்து கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் நுழைந்தார்.

இது இதுவரை இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச மொத்த ஓட்டமாகும்.

இந்த இரண்டு சாதனைகளைத் தவிர, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7000 ஓட்டங்களைக் கடந்தார்.

இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெத்யூஸ், 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கையின் இந்த சாதனைகளுக்கு மத்தியில், 39 ஓட்டங்களைப் பெற்றிருந்த தினேஷ் சந்திமாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்துக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை டிம் சவுதி தன்வசப்படுத்தினார்.