மைத்திரி சிறிசேன

மைத்திரி சிறிசேன

“இலங்கைக்கு புதிய ஆட்சி ஒன்று தேவை.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் தற்போதைய குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டை தேர்தல் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்மொழியப்பட்ட விதி இதுவரை இருந்த பாரம்பரிய அரசாங்க வடிவங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். நாடு இதுவரை இல்லாத பாரிய நெருக்கடிக்குள் தள்ளபட்டுள்ளது. தற்போது உணவுப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு மாதங்களில் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.

எந்தவொரு கட்சியும் தனித்து அரசாங்கத்தை அமைக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் வாக்குகளை வழங்குவதற்கு 12 அரசியல் கட்சிகள் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இன்று சமூக, அரசியல் மற்றும் சர்வதேச துறைகளில் நெருக்கடியை காண்கின்றோம். மேலும் சர்வதேச உறவுகளை நிர்வகிப்பதில் பரிதாபகரமான தோல்வி உள்ளது. ஊழல் மோசடிகள் காரணமாக சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த எவரும் அதைக் காப்பாற்ற வரமாட்டார்கள்.

அண்மையில், மேற்கத்திய தூதரகத்தின் தூதுவர் ஒருவர் தனது இல்லத்திற்கு வந்து தன்னைச் சந்தித்ததார். ஐ.நா அமைப்பு மற்றும் உலக வங்கி மூலம் மேற்கத்திய நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்கள் உதவிகளை வழங்கும். இடதுசாரி சாய்வு, முற்போக்கு சக்திகள் உள்ளடக்கிய அரசியல் உருவாக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? ” – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி !

பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? என்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (4.04.2021) ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியின் பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் பயங்ரவாதம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூறுகிறோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா” – மைத்திரி சிறிசேன புகழ்ச்சி !

“400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 122 ஆவது ஜனன தினம் நேற்று(08.01.2021) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க நாட்டில் புதியதொரு யுகத்தை உருவாக்கிய தலைவர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். சுமார் 400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டி நாட்டு மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுத்ததில் அவர் முக்கிய பங்கினை வகிக்கின்றார்.

1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க அரசாங்கத்தை மக்கள் தமது அரசாங்கம் என்று கருதினர். 3 வருடங்கள் குறுகிய காலத்திற்குள் அவர் பல சேவைகளை ஆற்றியுள்ளமையின் காரணமாகவே இன்றும் மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர்.

அவர் தலைமையிலான முற்போக்கான அரசியல் கட்சி நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. மனிதனொருவனின் பிரதான கடமை பிரிதொரு மனிதனுக்கு சேவையாற்றுவது என்பதே அவரது கொள்கையாகும். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்கவின் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையிலேயே சர்வதேசம் இலங்கையின் மீது அவதானம் செலுத்தியது.

இவரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சிறிமாவோ பண்டாரநாயக்கவும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். அவரது முற்போக்கான அரசியல் முன்னெடுப்புக்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் மாத்திரமின்றி முற்போக்கு சிந்தனையுடைய அனைவராலும் தொடர்ந்தும் பின்பற்றப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது “தற்போதும் நான் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்அதனை ஒரு வருடத்திற்கு முன்னரே நான் கூறினேன். தற்போது கட்சியின் தலைவராக இருப்பவர் சட்டவிரோதமாகவே உள்ளார்.” எனவும் அவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.