மோடி

மோடி

“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி.” – சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார் திருமாவளவன் !

“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,

“ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. “காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது” என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். “உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்? பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு, நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல்காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?.

நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து முஸ்லிம்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்; அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது” என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி  “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்? சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று கூறினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மோடியின் கட்சி ஆட்சி செய்யும் இந்திய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் 75 சதவீதமாக அதிகரிப்பு – “இஸ்ரேல் – காசா“ மோதலை முன்வைத்தும் பிரச்சினை !

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதமும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் பேச்சு 25 சதவீதமும் இதில் அடங்கும்.

கடந்த 2023-ல் மட்டும் இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘இந்தியா ஹேட் லேப்’ எனும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் இது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் 223 மற்றும் பிற்பாதியில் 413 என வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் தகவல்.

இதில் 498 சம்பவங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் இதன் பங்கு 75 சதவீதமாகும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதம் ஒட்டுமொத்தமாக பதிவாகி உள்ளது. ஜிஹாத் போன்றவற்றை முன்வைத்து 63 சதவீத சம்பவங்களும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் வகையிலான பேச்சு 25 சதவீதமும் பதிவாகியுள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் வெறுப்புப் பேச்சு அதிகரித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரா (118), உத்தர பிரதேசம் (104), மத்திய பிரதேசம் (65), ராஜஸ்தான் (64), ஹரியாணா (48), உத்தராகண்ட் (41), கர்நாடகா (40), குஜராத் (31), சத்தீஸ்கர் (21) மற்றும் பிஹார் (18) மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அரங்கேறும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளன.

பாஜக ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதை ஒப்பிட்டு பார்த்ததில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்தும் வெறுப்பை பரப்பும் பேச்சுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் 78 சதவீதம் அரங்கேறி உள்ளன. இதில் பாஜக பிரமுகர்கள்/பிரதிநிதிகளின் பங்கு 10.6 சதவீதம். அதுவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அக்கட்சியின் பிரமுகர்கள்/பிரதிநிதிகள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 27.6 சதவீதம் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பு ரீதியாக வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சங் பரிவார், கோ ரக்‌ஷா தளம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ நிதிஷ் ராணா, ஏஹெச்பி தலைவர் பிரவீன், வலதுசாரி ஆதரவாளர் கஜல் சிங்காலா, சுரேஷ் ஷவாங்கே, யதி நரசிங்கானந்த், காளிசரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகிய 8 பேர் வெறுப்பை பரப்பும் வகையில் பேசுவதில் முதல் 8 இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இஸ்ரேல் – காசா இடையிலான போர், நூ (ஹரியாணா) வன்முறை சம்பவம் போன்றவற்றை முன்வைத்தும் வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சை பரப்புவதில் புதியவர்களும் ஆர்வம் காட்டி வருவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்தின் முன்பு அடிபணிந்தது இந்திய அரசு – மீளப்பெறப்பட்ட வேளாண்சட்டங்கள் !

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குறித்த சட்டங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் சுமார் ஓராண்டு காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று(19) விசேட உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் விளங்கப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் மீளப்பெற முடிவு செய்துள்ளோம்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் மீளப் பெறுவதற்கான நடைமுறையை ஆரம்பிப்போம். எனவே, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” – இந்திய பிரதமர் நரேந்திர மோடி

“இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மோடி மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அவர்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

இலங்கையின் தமிழ் சகோதரர்கள், சகோதரிகளின் நலன்கள் அபிலாசைகளை இந்திய அரசாங்கம் என்றும் கருத்தில் எடுத்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்குள்ளது. இலங்கையில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாங்கள் இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்துவருகின்றோம்.

கடந்த காலங்களை விட எங்கள் அரசாங்கம் அதிகவளங்களை வழங்கியுள்ளது. இலங்கையின் வடகிழக்கில் இடம்பெயர்ந்தவர்களிற்கு 50,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கையின் மலையகத்தில் 40,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம். இலங்கைத் தமிழர்களின் சம உரிமை மற்றும் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறதென தெரிவித்துள்ளார்.