யானை – மனித மோதல்

யானை – மனித மோதல்

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை விரைவில் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,

 

இந்நாட்டின் 80 சதவீத நிலம் அரசுக்குரியது. 20 சதவீத நிலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சனத்தொகை அதிகரிப்பால் மக்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசன செயற்பாடுகளின்போது யானைகளின் வாழ்விடங்கள், அவை பயணிக்கும் பாதைகள் பாதிக்கப்படுகின்றன. இதுவே யானை – மனித மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

 

அமைச்சு என்ற ரீதியில் இந்த யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யானை-மனித மோதலுக்கான குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை காண அமைச்சு பல செயலமர்வுகளை நடத்தியுள்ளது.

 

அதன்படி, கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரு கொள்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்தக் கொள்கையை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் மூலம் யானை மனித மோதலைத் தீர்க்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

எதிர்கால சந்ததியினருக்காக வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதுடன், வன வளங்களை செயற்றிறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்த சுற்றுலாத்துறையின் மூலம் அந்தப் பகுதி மக்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும், பாரிய அளவிலான நிர்மானங்கள் இல்லாமல் சூழல்நேய சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான அந்நியச் செலாவணியைப் பெற வன வளங்களைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் யானை – மனித மோதலினால் 800 யானைகள் கடந்த இரண்டு வருடங்களில் பலி !

நாட்டில் யானை – மனித மோதலினால் ஏற்படும் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் பாரிய அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம்  யானைகளினால் 146 கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதனை, அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, 2021 ஆம் ஆண்டில் குறைந்தது 375  யானைகளும், 2022 இல் 439  யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. மின்சார பொறிகள், பட்டாசுகள் வெடிக்கும் கருவி, கூரான பலகைகள் மற்றும் விஷம் வைத்தல் ஆகியவற்றினால் காட்டு யானைகள் கொல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல யானைகள் புகையிரதத்தில் சிக்கியும், பாதுகாப்பற்ற கிணறுகளில் வீழ்ந்தும் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016க்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செலவு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக  அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, மின்சார வேலிகள் அமைத்தல்,  யானைகளை விரட்டும் வகையில் அதிரடி சோதனை நடத்துதல், பட்டாசுகளை வழங்குதல் போன்றவற்றுக்கு வருடத்துக்கு அரசாங்கத்தினால்  சுமார்  200 மில்லியன் பணம் செலவழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.