யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

SK கிருஷ்ணாவுக்கு இப்போதைக்கு விடுதலையில்லை – அடக்கி வாசிக்கும் யூடியுப்பர்கள் !

 

வீடு ஒன்றினுள் வீட்டாரின் அனுமதியின்றி அத்துமீறி வீடியோ எடுக்க முற்பட்ட யாழ்ப்பாண யூடியூப்பர் SK கிருஷ்ணா, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் கைதாகியிருந்த கிளிநொச்சி யூடியுபரான DK கார்த்திக் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அண்மைய நாட்களில் உதவி செய்வதாக ஈழத்து யூடியுப் சேனல்களில் பதிவேற்றப்பட்ட பலருடைய வீடியோக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

யாழில் நீர் இழப்பால் இரு ஆசிரியர்கள் திடீர் மரணம் !

யாழில் நீர் இழப்பால் இரு ஆசிரியர்கள் திடீர் மரணம் !

 

மார்ச் 16 ஆம் திகதி 53 வயதான கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலய ஆசிரியை பிரியதர்ஷினி கனகரத்தினம் பாடசாலையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இதேமாதிரி மார்ச் 09 ஆம் திகதி

வடமராட்சி வதிரியைச் சேர்ந்த 47 வயதான நெல்லியடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் தணிகைவேள் என்பவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இம் மரணங்களுக்கு அதிக வெப்பத்தால் நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக யாழ்ப்போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் கற்பிக்கின்ற போதும் அதிக நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை தாண்டும் பொழுதே நீராகாரத்தை உட்கொள்ளுமாறு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி இருக்கையில் இலங்கையின் குறிப்பாக வடக்கின் வெப்பநிலைக்கு குடிதண்ணீர் நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும் குறிப்பாக பாடசாலைகளில் குடிநீருக்கான வசதிகள் பரவலாக அமைக்கப்பட்டிருப்பது மிக அவசியம்.

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று சமூகத்துடன் ஊடாடினார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றுக் காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு மதியம் சமூகமளித்த பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சுழிபுரம் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்

பணமோசடி செய்தவரை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மீது தாக்குதல் – யாழ்ப்பாணத்தில் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்தவர் மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்னர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ்  நாட்டிற்கு செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டதுடன், மீண்டும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பணத்தினை கொடுத்து ஏமாந்த நபரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை  சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி அவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.

அந்தவகையில், பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய்  காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெண்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற இளைஞர் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார்.

சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து உரையாடியிருந்தபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அதனை அவதானித்த அயலவர்கள் தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையம் முற்றுகை – தம்பதியினர் தலைமறைவு !

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வீட்டின் அறையை தம்பதி ஒன்று வாடகைக்கு கொடுத்ததாகவும், அந்த அறையில் தம்பதியினர் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அறையில் தங்கியிருந்த தம்பதியினரில், கணவன் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தநிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை எனவும் , திருந்தி வாழ்வதாகவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தெரிவித்து வந்துள்ளார்.

அவரது மனைவி யாழில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாக கடமையாற்றி வருகிறார். மனைவி ஊடாகவே ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ஆய்வு கூட பொருட்களை பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

அதேவேளை கணவன் – மனைவி இருவரும் இணைந்து தான் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனரா அல்லது ஒருவர் உற்பத்தியில் ஈடுபட மற்றவர் உடந்தையாக செயற்பட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது தம்பதியினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் வெளிநாட்டு மோகம் – கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஏழு கோடி ரூபாய் மோசடி !

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

 

இது குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை காட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பண மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !‘

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் இரண்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பாக சுமார் 250 வழக்குகள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பாக சுமார் 250 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை, கடத்திச் சென்றமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.