யாழ்ப்பாணம் சிறைச்சாலை

யாழ்ப்பாணம் சிறைச்சாலை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி மீது துன்புறுத்தல் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் (07) பார்வையிட சென்ற போதே, சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டு, அந்நூலகம் இன்று சனிக்கிழமை (8) காலை 9.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்நூலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால் சம்பிரதாயபூர்வமாக  யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் நூல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.ஹேரத், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பம் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தினர் இச்சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு ஆலோசனைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் வழங்கி வரும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.