யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது – யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் கட்டளை !

த.வி.பு உறுப்பினர் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.

 

தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்று (21) கொழும்பிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து, யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

 

இதில், தியாகதீபம் திலீபன் நினைவுநாள் அனுட்டிப்பு வன்முறை வடிவம் எடுப்பதால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

அத்துடன், வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து வீடியோ படம் பிடித்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசி பறிக்கப்பட்டு, காட்சிகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்தனர்.

 

நினைவுநாள் அனுஷ்டிப்பு வன்முறை வடிவமெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எதற்காக நினைவுநாளை தடைவிதிக்க வேண்டும், பொலிஸார் நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா என நீதிபதி வினவியபோது, பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறை பரவலை தடுக்க நினைவு நாள் அனுஷ்டிப்பை தடை செய்ய வேண்டுமென கோரினர்.

 

இந்த மனு தொடர்பில் இன்று (22) மதியம் 1.30 மணிக்கு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என கட்டளை பிறப்பித்து நீதிமன்றம் அறிவித்தது.