யாழ்ப்பாணம் – போதைப்பொருள்

யாழ்ப்பாணம் – போதைப்பொருள்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையம் முற்றுகை – தம்பதியினர் தலைமறைவு !

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வீட்டின் அறையை தம்பதி ஒன்று வாடகைக்கு கொடுத்ததாகவும், அந்த அறையில் தம்பதியினர் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அறையில் தங்கியிருந்த தம்பதியினரில், கணவன் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தநிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை எனவும் , திருந்தி வாழ்வதாகவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தெரிவித்து வந்துள்ளார்.

அவரது மனைவி யாழில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாக கடமையாற்றி வருகிறார். மனைவி ஊடாகவே ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ஆய்வு கூட பொருட்களை பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

அதேவேளை கணவன் – மனைவி இருவரும் இணைந்து தான் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனரா அல்லது ஒருவர் உற்பத்தியில் ஈடுபட மற்றவர் உடந்தையாக செயற்பட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது தம்பதியினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கம் போதைப்பொருள் பாவனை – நுரையீரல் மற்றும் இருதயநோயாளர்களாக உருவெடுக்கும் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் !

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில அவர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டது.

அதேவேளை சுவாசிக்க முடியாமல் சிரமத்துடன், கடும் காய்ச்ச்சலுடனும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் இளையோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களும் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்பவர்கள்.  இவ்வாறாக தினமும் சராசரியாக மூவர் வைத்தியசாலைக்கு சிகிசிச்சைக்கு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஒரு வருட காலத்தில், யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த மாவட்டக்குழு – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான கூட்டத்தில் முடிவு !

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தினார்.

இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

போதைப் பொருள் பாவனை என்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தினையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றமையினால், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் உணர்வு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும்,  இக்கலந்துரையாடலில், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தல், முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவது உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சுகாதார தரப்பினர் உட்பட்ட அரச அதிகாரிகள் மற்றுமா பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் கடத்தலுக்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது !

போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு செல்வதற்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 

இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் 15 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊசி போதைப்பொருள் பாவித்த இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி பலி – யாழில் சம்பவம் !

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.