யாழ்ப்பாணம் போதைப்பொருள் பாவனை

யாழ்ப்பாணம் போதைப்பொருள் பாவனை

20 கிலோ 175 கிராம் கஞ்சா போதை பொருட்களுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் கைது !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (02) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வவுனியா பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் இளைஞனிடம் இருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதை பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களையும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை !

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை புதன்கிழமை (03) புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் , பொலிஸ் நிலையத்தில் அவர்களைத் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் , போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவரைக் கைது செய்தனர்.

 

பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட ஐவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள் ளனர்.

 

அதேவேளை . நாவாந்துறை பகுதியில் முச்சக்கர வண்டியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை முச்சக்கர வண்டியுடன் தப்பியோடியவரை பொலிஸார் துரத்திய போது , முச்சக்கர வண்டியை , நாவாந்துறை சந்தை பகுதியில் கைவிட்டுத் தப்பி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை கைது செய்தனர்.

 

அவ்வேளை முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து 300 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டனர்.

 

அதனை அடுத்து சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார் , முச்சக்கர வண்டியையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – பெண் ஒருவர் கைது !

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெண்ணை கைது செய்யும் போது , அவரது உடைமையில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்கு ஒரு தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் இல்லை – யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

 

போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) பணம் கேட்டு, வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு, வீட்டார் பணம் கொடுக்காததால், தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

 

குறித்த குடுப்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால், குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால், அவரது மனைவி பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த பிரதான போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய புள்ளியான அங்கஜன் இராமநாதனின் தம்பி கைது..? – தகவலை மறைக்கும் ஊடகங்கள்!

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவரது பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

 

இவரிடமிருந்து குஷ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு புதிய வகையான போதைப்பொருளாகும். இன்னும் இலங்கையில் இந்த போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. அதனால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ராஜனின் மகன் சிலவேளை பிணையில் வர சந்தர்ப்பம் உள்ளதாக தெரியவருகின்றது.

 

இவர் கைது செய்யப்பட்டு 3 நாட்களாகியும் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தவொரு பத்திரிகையும் இவனது கைது தொடர்பாக செய்தி வெளியிடவில்லை என்பதிலிருந்து ராஜனின் செல்வாக்கு எந்த அளவில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ராஜனுக்கு சொந்தமாக யாழில் பல எரிபொருள் நிலையங்களும் பல பிரபல வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண முக்கிய அரச அதிகாரிகளை தென்பகுதி அரசியல்வாதிகளின் துணையுடன் இடம்மாற்றம் செய்வதில் ராஜன்  செயற்பட்டு வந்துள்ளதையும் பலர் குறிப்பிட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் ஏனைய சட்டவிரேதாத நடவடிக்கைகளுக்காக தனக்கு தேவையானவர்களை யாழ்ப்பாணத்தில் அதிகாரிகளாக வைத்திருப்பதற்கு ராஜன் முயன்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கை பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனது பணபலத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பல அதிகாரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து ராஜன் அகற்றியமை குறிப்பிடத்தக்கது. ராஜனின் செல்வாக்கில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முக்கிய அரச அதிகாரி ஒருவரின் மகனும் போதைப்பொருள் பாவித்து பிரபல பாடசாலையிலிருந்து துரத்தப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ராஜன் யாழ்ப்பாணத்தின் பிரபல அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜனின் அப்பா இராமநாதனின் தம்பியாவான். ராஜனுக்கும் அங்கஜனின் அப்பா மற்றும் அங்கஜனுக்கும் இடையில் கடந்த ஓரிரு வருடங்களாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் கார்கில்ஸ் கட்டடத்திற்கு அருகில் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக பலரும் அங்கஜனை குற்றம் சாட்டியிருந்த போது அந்த எரிபொருள் நிலையம் தன்னுடையது இல்லை என அங்கஜன் பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

ராஜன் தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது மகனை யாழ் பல்கலைக்கழக உயர் பீடமான பல்கலைக்கழக பேரவைக்கு உறுப்பினராக போட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் விற்பனையாளர்கள் எவ்வாறு உயர்பீடங்களில் கௌரவமான தோற்றத்தில் காணப்படுகின்றார்கள் என்பதையே இது காட்டி நிற்பதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

ஹெரோயின் மற்றும் மாவா போதைப்பொருளுடன் யாழில் மூன்று இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை பகுதியிலேயே  20, 21,23 வயதுடைய மூவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் ஹெரோயின் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதிகரித்த போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் அதிகரித்த எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாகக் கூடிக் கொண்டே போகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். அதனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

 

சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால், அதனை பாவிக்கும் மற்றவருக்கும் தொற்றக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.

 

இலங்கையில் தற்போது 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.

அதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழில் சுமார் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது !

யாழில் சுமார் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் எடுத்துக் கொண்ட அர்ச்சகர் உயிரிழப்பு !

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் – நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளார்.

ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய 15 இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் (07) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலியங்காடு, கோப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.