யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வாள்வெட்டு

பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த சாரதி மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

பேருந்து சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்றைய தினம் திங்கட்கிழமை வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

 

கொழும்புத்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த வேளை மணியந்தோட்டம் பகுதியில் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த வாரம் யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் 04 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டு , தொந்தரவு செய்துள்ளனர்.

 

இதனை அவதனித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் , அன்றைய தினம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் கும்பலை சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தை மறித்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று யாழ்ப்பாணத்தில் வன்முறை செயல் – மூவர் கைது !

வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களைப் பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், வீடுகளுக்கு தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்களை நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள்கள் மற்றும் நான்கு பெற்றோல் குண்டுகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலுடன் சேர்ந்து இயங்கிய நபர் ஒருவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் வசித்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள நபர்கள் இந்தியாவில் உள்ள நபருக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் தாக்குதல் சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் கைதுசெய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு ஆகியோர் உள்ளனர் – சிறீதரன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத 9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை சுழற்றிக் கொண்டு செல்வது எனது வீட்டின் கண்காணிப்பு கெமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது வெளிப்படுத்துகின்றது.

யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மோட்டார் சைக்கிளில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

அதே பாணியில், உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இராணுவத்தினரோ, கடற்படையினரோ, விமானப்படையினரோ, பொலிஸாராரோ, அல்லது உளவுப்பிரிவினரோ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் உள்ளது. எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்து உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்.

இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் கைதான வன்முறைக்கும்பலின் முக்கியமான நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை, வாகனங்களுக்கு தீ வைத்தமை, நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து  சொகுசு கார் , மோட்டார் சைக்கிள்,  2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் , கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

ஐந்து வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் கைது !

யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும்  ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அணியினர் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நவாலி பகுதியை சேர்ந்த இளைஞனை சந்தேகத்தில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர் .

அதன் போது குறித்த மோட்டார் சைக்கிளுக்கு வாகன பதிவு மேற்கொள்ளப்படாது , பதிவின்றி மோட்டார் சைக்கிள் காணப்பட்டமையால் , இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இளைஞனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

 

23 வயது இளைஞன் கொடூரமான முறையில் கொலை – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்தாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முன்பகை காரணமாக நேற்றைய தினம் இரவு மது போதையில் சிலருடன் வாய்த்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் – கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர் !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வெளிநாட்டில் வசித்து வரும் நபர் ஒருவரின் வீட்டில் இருந்தே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

யாழில். இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இளைஞன் ஒருவர் சுன்னாகம் ஈவினை பகுதியில் மறைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் வசித்து வரும் நபரின் வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து , அந்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார் , மூன்று கஜேந்திரா வாள்கள் , நான்கு வாள்கள் , முகத்தினை மறைக்கும் துணிகள் , ஜக்கெட் , தலைக்கவசம் என்பவற்றை மீட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கும் , கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு குறித்த இளைஞன் யாழில் கூலி படையாக இயங்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரின் தொலைபேசி தொடர்புகள் மற்றும் வங்கி கணக்கு விபரம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் !

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் யாழ்.தொல்புரம் மத்தியில் நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைகளுக்காக  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில்  வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுக்திய பொலிஸ் கைது நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் – வாள்வெட்டுக்கு துணைபோகின்றனரா வடக்கின் அரசியல்வாதிகளும் – பொலிஸாரும்..?

அண்மைய நாட்களில் தினசரி 1000க்கும் குறையாத கைது நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் தினசரி இடம்பறெ்று வருவதுடன் வடக்கின் பல பகுதிகளிலும் யுக்திய எனும் போதைப்பொருள் ஒழிப்பின் ஒரு கட்டமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகின்றது. இதனால் 24 நேரத்திலும் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியான ஒரு இறுக்கமான பொலிஸ் கெடுபிடி கால கட்டத்தில் கூட யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களும் – கட்டப்பஞ்சாயத்துக்களும் – போதைப்பொருள் கடத்தல் நகர்வுகளும் குறைவில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

 

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

 

 

 

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !‘

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.