யாழ்ப்பாண பல்கலைகழகம்

யாழ்ப்பாண பல்கலைகழகம்

யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமனம் !

யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக நான்கு விண்ணப்பங்கள் !

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கிணங்க, நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூவரும், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்கின்ற – பதவிக்கால நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கின்ற பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் அதே பதவிக்காக விண்ணப்பித்துள்ளார்.

அவரை தவிர, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் இருவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோரே ஆவர்.

அத்துடன், கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா விண்ணப்பித்துள்ளார்.

தற்போதைய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனால், புதிய துணைவேந்தரை நியமிக்கும் நோக்கில் பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்திருந்தது.

அறிவிக்கப்பட்டிருந்த இந்த கால இடைவெளியிலேயே இந்த நான்கு விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஜூலை மாதத்தின் முற்பகுதியில் நடத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையிலேயே தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்புள்ளிகளின் அடிப்படையில்  முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதனையடுத்து, பல்கலைக்கழக சட்டத்தின்படி, ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை தெரிவுசெய்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக  துணைவேந்தராக ஜனாதிபதி நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடையே முரண்பாடு – 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் – கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது.

இதனால் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான பூர்வாங்க விசாரணைகள் இன்று (04) இடம்பெற்றது. விசாரணைகளின் முடிவில் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் முறையான விசாரணைகள் முடிவுறும் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மாணவர் வதிவிடம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிமுறைகளுக்கமைவாக இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

இதேநேரம், மோதல் சம்பவத்தையடுத்து முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

போதைபொருள் பாவித்த யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் – உறுதிப்படுத்தியது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை !

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கந்தர்மடம், பழம் றோட்டுப் பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டமை மற்றும், போதை மாத்திரை வெற்று உறைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டுப் பின்னர் பல்கலைக்கழக அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களில், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில மாணவர்களை உளவளத் துணை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும்

“இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களின் சிபார்சின் அடிப்படையில், போதைக்கு அடிமையாகி இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் மாணவர்களைத் தேவையான உளவளத் துணைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களும் நேரடியாக அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் எடுக்கும் எந்தச் சட்ட நடவடிக்கைளிலும் பல்கலைக்கழகம் குறுக்கிடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இன்று பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால், அவர்கள் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும், மாணவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட மாணவர்கள் இன்று நண்பகல் பரீட்சை முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் மாத்திரமே போதை மாத்திரை உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வைத்தியசாலை வட்டாரங்கள், இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தன.

17 யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போதைப்பொருளுடன் கைது – மாணவர்களை விடுவித்த பீடாதிபதி !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த சந்தேகத்தில் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்கொல்லி போதைப்பொருளை விற்பனை செய்யும் நபர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய நேற்று மாலை மாணவர்கள் தங்கியிருந்த விடுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மணத்தறை வீதியிலுள்ள தனியார் விடுதியில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ளனர்.

குறித்த 17 மாணவர்களில் 15 சிங்கள மாணவர்களும், 2 தமிழ் மாணவர்களும் உள்ளடங்குவர்.

இது தொடர்பில் விஞ்ஞானபீட பீடாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், கைதான மாணவர்களுக்கு பரீட்சை நடைபெற்று வருவதாக பீடாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக ரீதியான நடவடிக்கையை எடுக்குமாறும், மாணவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பில் ஆராயுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு !

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று  (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது.

தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, பேராசிரியர் அ. சண்முகதாஸ் மாநாட்டின் திறப்புரையை வழங்கி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

மாநாட்டின் போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங்கப்பட்டது.  பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை, பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை, பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை, பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, பண்டிதர் ம.ந. கடம்பேஸ்வரன், பண்டிதர் வீ. பரந்தாமன், பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு ஆகிய ஏழு புலமையாளர்களே கௌரவிக்கப்பட்டனர்.

இன்று 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், நாளை 17 ஆம் திகதி புதன்கிழமையும் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மநாட்டில் சுமார் 61 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.