யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘மொபைல் வீடியோ கேம்’க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்துவந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (15) தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புஷ்பராஜா எழில்நாத் (22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெற்றோருக்கு ஒரே மகனான இவர், வீட்டில் யாரும் இல்லாது தனிமையில் இருந்தபோது இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரிய வருகிறது.
இந்த மாணவர் மொபைல் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.
அதன் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வெவ்வேறு பல்கலைகழக மாணவர்கள் கடந்த மாதம் தற்கொலை செய்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது.