யாழ் பல்கலைக்கழக ஆண்கள் ஒன்றியம் – பெண்களின் நிர்வாணத்தை அரசியலாக்கும் யாழ் ஆண் மையவாதம்!
“இந்த மண் எங்களின் சொந்த மண், இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன். நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து நின்றது போதும் தமிழா“ என்ற புலிகளின் பாடல் வரிகளுடன் யாழ்ப்பாண பல்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்துக்கான 2025ஆம் ஆண்டுக்கான நிர்வாக குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வீதத்திற்கும் அதிகமான பெண் மாணவிகளைக் கொண்ட யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றிய நிர்வாகத் தெரிவில் வழமை போலவே இந்த ஆண்டிலும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியமானது பெண்களை நிர்வாக பொறுப்புக்களில் இருந்து நிராகரித்து வருவது வடக்கின் உயர் கல்வி நிலையமானது ஆணாதிக்க சிந்தனையை கொண்டுள்ளது என்பதன் வெளிப்பாடேயாகும். சமூகத்துக்கு எடுத்துக்காட்டாகச் செயற்பட வேண்டிய எதிர்காலத் தலைவர்கள் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு நோட்டீஸ் ஒட்டுபவர்களாகி அவர்களுடைய உதவாக்கரை யாழ் ஆண் ஆதிக்க சைவ வெள்ளாளச் சிந்தனையில் ஊறிப்போய் விட்டதையே இது வெளிப்படுத்துகின்றது.
தங்களுடைய சக மாணவிகள் சுரண்டலுக்கு உள்ளாவது பற்றி எவ்வித கரிசனையும் இல்லாது, பேராசிரியர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் வேலையையே இவர்கள் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்புமளவிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளனர். அவர்களுடைய ஒன்றியத்தில் பெண்கள் குரலிழந்துள்ளனர்.
மேலும் ஆங்காங்கே சில பீடங்களுக்குரிய ஒன்றியங்களில் பெண் மாணவிகள் சிலர் உள்வாங்கப்பட்டாலும் அவர்கள் சுயமாக இயங்குவதற்குரிய சூழல்கள் இருப்பதில்லை. அவர்கள் ஒன்றியத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் ஜால்ரா அடிப்பவர்களாகவும், ஊடக சந்திப்பில் பின்னணியில் அமரவைக்கப்பட்டு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்று காட்டவுமே பயன்படுத்தப்படுகின்றனர்.
ஈழத்தில் மேலெழுந்து வரும் ஆண் மையவாதத்துக்கு யாழ்ப்பல்கலைக்கழகும் சிறந்த சான்றாகிறது. ஏற்கனவே இலங்கையில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமானால் மாணவிகள் பாலியல் இலஞ்சம் வழங்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக வாளகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பாலியல் சுரண்டல் பற்றிய செய்திகளை சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் கூட பதிவு செய்கின்றார்கள்.
வடக்கை பொறுத்தவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அதுவும் கலைப்பீடத்தில் இக்குற்றச் சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் இதுவரை பல்கலைக்கழக மட்டத்தில் கூட எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா கூட இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட பாலியல் தொல்லைகள் கொடுக்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாறாக பல்கலைக்கழக மாணவிகளையே கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை பெண் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க பெண் விரிவுரையாளர்களும் தயாராக இல்லை. அவர்களும் கூட அதே ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வர முடிவதில்லை.
இப்படியான பல்கலைக்கழக சூழலில் புதிய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கூட ஆணாதிக்க சிந்தனையுடைய பேராசிரியர்களால் வழிநடத்தப்படும் அபத்தம் யாழ்.பல்கலைகழகத்தில் தொடர்கிறது.
சிங்களவர்கள் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை, எங்களுடைய சுயநிர்ணய உரிமையை வழங்க தயாராக இல்லை என குரல் கொடுக்கும் யாழ் பல்கலைக்கழகம். கணிசமானளவு சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் படிக்கும் யாழ்ப் பல்கலைகழகத்தின் எந்த மாணவர் நிர்வாக அமைப்பிற்குள்ளும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களையும் உள்வாங்க யாழ்ப்பாண பல்கலைகழகச் சமூகமானது தயாராக இல்லை. தம்மினத்திற்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கே உரிய பிரதிநித்துவம் கொடுக்க தயாராக இல்லாத யாழ்ப்பல்கலைக்கழக சமூகம் எப்படி ஏனைய இன, மத மாணவர்களை உள்வாங்கும் எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பல்வேறு இயக்களிலும் பெண்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். குறிப்பாக புலிகள் இயக்கத்தில் பெண்கள் தளபதிகளாகவும், தனிப் படையணிகளையே வழிநடத்தும் வீரமங்கைகளாக திகழ்ந்திருந்தனர். ஆணாதிக்க கற்பிதங்களை கேள்விக்குட்பத்திய பெண் புலிகள் எடுத்துக்காட்டாக விளங்கியிருந்தனர். ஆனால் இந்நிலமை போரின் பின் தலைகீழாக மாறியுள்ளது.
இதனை எழுத்தாளர் பா. ரவீந்திரன் பின்வருமாறு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். “ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக்காட்டிய புலிகள் அமைப்பிலிருந்த பெண்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை, பெண்மைக்கு ‘எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்யவே பின்நின்றார்கள். இதன்வழி வந்த இன்றைய எம்பி அர்ச்சுனா போன்ற கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை போய் பேசுகிற பேச்சுக்களில் யாழ்ப்பாண ஆண்மையவாத அறிவு கிழிந்து தொங்குகிறது” என எழுத்தாளர் ரவீந்தரனின் கூறுகிறார்.
எம்பி அர்ச்சுனா ஒரு சாமானிய பெண் சாளினியை பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று கூறியதும் சட்டத்தரணியும் மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான ஸ்சுவஸ்திகா அருளிங்கத்தை அரசியல் விபச்சாரி எனக் குறிப்பிட்டதும் யாழ்ப்பாண ஆணாதிக்க மொழி மற்றும் ஆணாதிக்க ஒழுக்கவாதத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. எம்பி அர்ச்சனா பெண்கள் தொடர்பில் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களை தமிழ்த்தேசியம் பேசும் ஏனைய தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட கண்டிக்கவில்லை. அவர்களும் அதே ஆண் மைய அரசியலையே முன்னெடுக்கின்றனர்.
தமிழரசுக் கட்சி உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளிலும் கூட பெண்களுக்கு போதிய இடம் வழங்கப்படவில்லை. கட்சி நிர்வாகத்திலும் கூட பெண்கள் பிரதிநிதித்துவம் உரிய முறையில் வழங்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 25 வீதம் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். அப்படியிருந்தும் எந்த தமிழ்த் தேசியக் கட்சிகளும் கிராம மட்டத்திலிருந்து பெண்களை
கட்சிக்குள் உள்வாங்கி அரசியலில் ஈடுபடுத்துவது இல்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் வேட்பு மனுக்களில் பெண்கள் பெயர்களை காணலாம். பெரும்பாலும் வேட்பு மனுக்களில் பெயர் குறிப்பிடப்படும்
பெணகள் பிரதான ஆண் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து கொடுக்கவே பயன்படுத்தப்படுகின்றனர்.
இறுதியாக யாழ்ப்பாண ஆணாதிக்க மையவாதம் முகநூலில் போலிக் கணக்குகளைத் திறந்து பெண்களின் நிர்வாண படங்களை பகிர்ந்து பெண்ணடிமைத்தனத்தின் உச்சத்தை தொட்டிருக்கின்றது. இந்த போலிக் கணக்குகளில் பகிரப்படும் நிர்வாண படங்கள் மூலம் தமிழ்ப் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய செய்தியை சொல்கிறார்கள். பெண்கள் ஆகிய நீங்கள் பொதுவெளியில் சுயமாக இயங்கினால் நீங்கள் முடக்கப்படுவீர்கள். அடித்து நொறுக்கி மூலையில் இருத்தப்படுவீர்கள். விபச்சாரிகள் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.
யாழ்ப்பாண ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாக உமாச்சந்திரப் பிரகாஸ் மற்றும் கௌசல்யா நரேன் போன்ற தமிழ்ப் பெண்கள் இருக்கும் வரை ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. முகமூடி அணிந்த தமிழ் தலிபான்களான அர்ச்சுனா கும்பலின் நிர்வாணப்படுத்தலைக் கண்டு தமிழ் பெண்கள் அச்சப்படத் தேவையில்லை. தங்கள் நிர்வாணப் படங்களைப் போட்டு வாக்குச் சேர்க்கும் பொறுக்கிகள் தான் அச்சப்பட வேண்டும். அவமானப்பட வேண்டும். தமிழ்ப் பெண்கள் இந்தத் தருணத்தில் ஒன்று திரண்டு பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.