யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு

யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு

“அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்” – த.ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

 

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

 

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

 

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

 

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

 

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

 

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

 

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

 

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.