யாழ். மாநகரசபை

யாழ். மாநகரசபை

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு !

“யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் கோஸ்டி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பேதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு பலரும் பலதரப்பட்ட கருத்துகள் கூறிவருகின்றனர். ஆனால் அதனை முன்னெடுக்கும் யாழ் மாநகரசபையில் அதிக ஆசனங்களை கொண்டள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மக்களின் மீது அக்கறை கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்குள் இருந்த உட்பூசல்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் தமிழரசுக் கட்சியின் பிடிக்குள் இருந்த கட்சிகள் இன்று தனித்தனியாக சென்றுள்ள நிலையில் அவர்களுக்குள் ஒருமித்த தெரிவு இருந்திருக்கவில்லை.

மாநகரின் மீது அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் எமது கட்சியுடன் அதிகார மட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ அல்லது அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சி.வி.கே சிவஞானமோ பேசியிருக்க வேண்டும்.

ஆனால் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியோக ஆலோசகருடன் தமது தெரிவான ஒருவரது பெயரை கூறி ஆதரிக்குமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனே பேசியிருந்தார்.

எமது கட்சி ஏற்கனவே தொடர்ந்து கூறிவருது போல மக்களின் நலன்கருதியதாக உள்ளூராட்சி மன்றங்களை யார் ஆட்சி செய்ய முன்வருகின்றார்களோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்ல ஆதரவு கொடுத்துவந்திருந்தோம்.

ஆனால் யாழ் மாநகரசபையை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் கோஸ்டி பூசல்களே இன்றைய சூழ்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரம் ஜனநாயகத்தில் மக்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நம்பிக்கையும் இவர்களது இவ்வாறான அரசியல் நாகரிகமற்ற கூட்டுச் சுயநலன்களால் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது  முறைப்படி எமது தலைமையுடன் பேசியிருந்தால் யாழ் மாநகரின் முதல்வர் தெரிவில் இவ்வாறான இழுபறிநிலை ஏற்பட்டிருக்காது என்றார்.

“இலங்கை தமிழரசுக் கட்சியினை ஏனைய கட்சிகள் பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள்.” – சி.சிறீதரன்

“70 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியினை ஏனைய கட்சிகள் பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள்.”  என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“மாநகர சபையில் மக்கள் எமக்கு பெரும்பான்மையினை வழங்க தவறி விட்டார்கள். அதைவிட எதிர்வரும் காலத்தில் யாழ். மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெற்று யாழ் மாநகர சபையினை பூரணமாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அதற்குரிய ஆணையை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையை தமிழரசுக் கட்சி பூரணமாக கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும் இடமில்லை.

மக்கள் எங்களுடன் தான் உள்ளார்கள். ஓரிருவர் கூறும் வார்த்தைகள் நியமாகிவிட முடியாது.  மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தை பெறுவதற்காக பின்வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்கு கலந்து கொள்ளாது விட்ட ஏனைய கட்சிகளின் கதைகளை கேட்பதற்கு நாம் தயார் இல்லை.

ஏற்கனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராக செயற்பட்டவர்.   அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். ஆளுமை மிக்கவர். அவ்வாறான ஒருவரைத் தான் இம்முறை எமது வேட்பாளராக தெரிவு செய்தோம்.

அது மாத்திரமல்ல கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுத்த ஒருவரை தான் தமிழரசுக் கட்சி முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்துள்ளது.

எனவே ஏனைய கட்சிகள் எமது கட்சியை பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது” – என்றார்.

“வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சபை அங்கத்தினர்களை கூறிய யாழ்.மாநகசபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி !

யாழ்.மாநகர சபையில் சிலர் “வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி “சபையில் சிலரின் செயற்பாடுகள் வைக்கோல் பட்டறை நாய்” போன்றுள்ளது என கூறியிருந்தார்.

அதனால் சபையில் சில உறுப்பினர்கள் கடும் ஆவேசமடைந்து அமளியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து “வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரை வெளியேற்றுமாறு முதல்வரை கோரினர்.

“நீங்கள் என்னை வெளியேற்ற தேவையில்லை.  நானே வெளியேறுகிறேன் ” என கூறி உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறி சென்றார்.

குறித்த உறுப்பினர் சபையில் கூறியது அநாகரீகமானது. அதனை சபை குறிப்பேட்டில் பதிய வேண்டும். சபை உறுப்பினர்களின் வேண்டுகோளினால், உறுப்பினர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சபையில் அநாகரீகமான வார்த்தை பிரயோகித்தமையால், அவரது ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்வதுடன், இந்த மாதத்தில் சபையின் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அவர் அனுமதிக்கப்படமாட்டார் என சபையில் தீர்மானிக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

 

 

“ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் நாம் நேரில் பேச்சு நடத்துவோம்” – மாவை சேனாதிராஜா

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு நடத்துவோம். அத்துடன் எதிர்வரும் 23ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னரே யாழ். மாநகர சபையில் மேயருக்கு யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் தீர்மானிப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் எமக்குச் சில சபைகளின் வரவு – செலவுத்திட்டங்கள் நிறைவேறுவதற்கு ஆதரவு வழங்கின. அந்த அடிப்படையில் யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றிலும் அந்தக் கட்சியினரின் ஆதரவைக் கோரி இருந்தோம். ஆனால், அவர்கள் அந்தச் சபைகளில் எங்களைத் தோற்கடித்தனர்.

எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குறித்த சபைகளின் உறுப்பினர்கள், எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இரண்டு சபைகளிலும் மேயர் மற்றும் தவிசாளர் பதவிக்கு யாரைப் பிரேரிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படும்.

அத்துடன் இரண்டு சபைகளிலும் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈ.பி.டி.பியுடனும் மீண்டும் பேச்சு நடத்துவோம். அந்தப் பேச்சு நேரில் நடைபெறும் என்றார்.