யுக்திய

யுக்திய

கிளிநொச்சியில் அதிரடியாக யுக்திய சுற்றிவளைப்பு – ஐஸ் போதைப் பொருட்களுடன் பலர் கைது !

கிளிநொச்சி – தருமபுரம் காவல்துறை பிரிவில் முன்னெடுக்கப்பட்ட யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் – கல்லாறு பகுதியில் இன்று (05) அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.

இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஐஸ் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொடரும் யுக்திய – ஒரு லட்சம் பேர் கைது !

பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 03 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனை தொடர்பில் அறிவிக்குமாறு மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

யுக்திய நடவடிக்கையை மேலும் வெற்றிகரமாக செயற்படுத்தும் வகையில், போதைப்பொருள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது அழைப்பாளரின் அடையாளத்தை அடையாளம் காண முடியாத வகையில் இந்த இலக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

தொடரும் யுக்திய – போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் !

தற்போது நாடளாவிய ரீதியில் யுக்திய என்ற பெயரில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் அதனை விற்பனை செய்பவர்களையும் மையப்படுத்தி காவல்துறையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த வியாபாரத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் இந்த செயற்பாடு முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைள் இடம்பெறுகின்றது – மனிதஉரிமை ஆணைக்குழு விசனம் !

இலங்கையின் மனிதஉரிமை ஆணைக்குழு இலங்கையின் பொலிஸாரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் யுக்திய நடவடிக்கை குறித்து கரிசனம் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 17 ம் திகதி முதல் 31 ம் திகதி முதலான வரையான காலப்பகுதிக்குள் 20,000க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழுபோதைப்பொருளை திட்டமிட்ட குற்றச்செயல்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு எனினும் யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் என்பன காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

யுக்திய நடவடிக்கை குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கை பரந்துபட்ட நீதியுடன் இணங்காணப்படுவதாக மாறியுள்ளது யுக்திய என்ற சிங்கள சொல்லிற்கு பொருத்தமற்றதாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இளைஞர்கள் உட்பட்டவர்களை ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துதல் குறித்த அறிக்கைகளால் கலக்கமடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கத்தின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது தாயும் தந்தையும் கைதுசெய்யப்படுகின்றனர் இதனால் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண்கள் பாலியல் ஈடுபடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிள்ளைகள் தனித்துவிடப்பட்டுள்ளனர் உணவையோ பாதுகாப்பையோ பெற முடியாத நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இந்த பிள்ளைகளிடம் தங்கள் பெற்றோருக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்தும் வலுவோ பணமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்முதலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடற்கரையோரங்களில் உள்ள ஹோட்டல்களை பொலிஸார் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்ததை நாங்கள் பார்த்துள்ளோம் கடற்கரையோரத்தில் உள்ள அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் அதிகாரம் கரையோரா பாதுகாப்பு திணைக்கத்திற்குள்ளது பொலிஸார் இவ்வாறான கட்டிடங்களில் தலையிட்டு அது போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் கட்டப்பட்டது என தெரிவிப்பது சட்டத்திற்கு விரோதமானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தொடரும் யுக்திய விசேட நடவடிக்கை – இரகசிய தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய ) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02) அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் காவல்துறை தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

071 859 88 00 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ காவல்துறை  நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யுக்திய விசேட நடவடிக்கை – கைப்பற்றப்பட்ட 85கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

யுக்திய விசேட நடவடிக்கையின்போது 11 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 85 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (31) தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் சுற்றிவளைப்புக்களில் பொதுமக்கள் எவரேனும் பாதிப்படைந்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடலாம் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் என்பன பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், அவற்றால் பொதுமக்கள் எவரேனும் பாதிப்படைந்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதியமைச்சினால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த ஆண்டு நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினாலும், அதன்விளைவாக ஏற்பட்ட வன்முறைகளாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டபோது, நாட்டைப் பொறுப்பேற்று சீரான பாதையில் வழிடத்திச்செல்வதற்கு எவரும் முன்வரவில்லை. இருப்பினும் நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான அமைச்சுக்களைக்கொண்ட அமைச்சரவையை ஸ்தாபித்து பாரிய சவால்களை சிறந்த முறையில் வெற்றிகண்டோம். அதனூடாக பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரநிலைக்குக் கொண்டுவந்தோம்.

அடுத்ததாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்புக்கள் ஒன்றும் புதிதல்ல. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் நாடு மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாரதூரத்தன்மையை உணர்ந்தே அண்மையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டோம்.

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்போது பொலிஸாரின் செயற்பாடுகளால் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம். மாறாக எந்தவொரு தவறையும் செய்யாவிடின், பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கலாம். ஒட்டுமொத்த நாட்டையும் பீடித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று தெரிவித்தார்.