யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

கிளிநொச்சியில் அதிரடியாக யுக்திய சுற்றிவளைப்பு – ஐஸ் போதைப் பொருட்களுடன் பலர் கைது !

கிளிநொச்சி – தருமபுரம் காவல்துறை பிரிவில் முன்னெடுக்கப்பட்ட யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் – கல்லாறு பகுதியில் இன்று (05) அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.

இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஐஸ் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 167 நாட்களில் 200 கிலோகிராம் ஹெரோயினை கைப்பற்றிய பொலிஸார்,!

இலங்கையில் பாதாள உலகத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 200 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

201 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி ரூ. 5.434 பில்லியன்.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசம்பரில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தல் – 300க்கும் அதிகமானோர் கைது !

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும் முறைமையாக கடத்தல்காரர்களால் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (31) நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கைத்தொலைபேசியுடன் தொடர்புடைய 1964 வர்த்தக நிலையங்கள், 2131 அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் 1202 இடங்களில் அடையாளம் காணப்பட்ட வர்த்தக வங்கிகள் தொடர்பில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சீருடையில் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடியுங்கள் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

யுக்திய நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும், அது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தினார்.

 

நீர்கொழும்பு பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்,

 

“சீருடையுடன் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் சீருடை அணிவதில் பயனில்லை, கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும், ஜனாதிபதி எனக்கு பலத்தை வழங்கியதால் தான் இதனை கூறுகின்றேன். யுக்தியை துவக்கி, நாட்டை சுத்தம் செய்ய நினைத்தேன். சில யூடியூபர்கள் போதைப்பொருள் மோசடியாளர்களின் பணத்தில் வாழ்கின்றனர். அவர்களை பயன்படுத்தி எம்மை விமர்சிக்கின்றனர். யுக்திய நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையும் கூறியது, எங்கள் நாட்டில், நாங்கள் விரும்பியபடி செயல்படுகிறோம், சர்வதேசத்தின் விருப்பப்படி நான் செயல்படவில்லை.”

 

“பாதாள உலக குழு வழக்குகளில் வாதாடும் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள்.பாதாள உலக குழுவினர் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். பாதாள உலக குழுக்களும், போதைப்பொருள் வியாபாரிகளையும் வைத்திருக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டிற்கு ஒரு சுமை ” என்றார்.

தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் காத்தான்குடியில் கைது !

தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அத்தோடு, அதே பிரதேசத்தில் மற்றுமொருவர் 860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார்.

 

தற்போது நாடு முழுவதும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ், ‘யுக்திய’ போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதன் அடிப்படையிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவர்களில் 2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரும், 2 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து 860 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க குறிப்பிட்டார்.

 

கைதான மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைதான மூவரில் புதிய காத்தான்குடியை சேர்ந்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஏழு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

 

ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் யுக்திய கைது – தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !

விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதாளம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை. அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதே எங்களின் ஒரே இலக்கு என்றும் எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் குற்றச் செயல்களால் ஆதாயம் அடைபவர்களாவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் 65% க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் இருப்புக்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

மேலும் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முழுமையாக அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – ஒரே மாதத்தில் 40,590 பேர் கைது !

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது

இந்த சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரை 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

 

அத்தோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4,791 மில்லியன் ரூபா என மதிப்படப்பட்டுள்ளது. இந்தநிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களின் 725 மில்லியன் ரூபா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு!

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும்.

 

அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்.

 

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய சிறைச்சாலைகள் இரண்டை நிர்மாணிக்க உரிய இடத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

 

உரிய ஆலோசனைகளைகளும் இதற்காக வழங்கப்பட்டுள்ளன. யுக்திய நடவடிக்கையானது, குடும்பங்களை பாதுகாக்கும் செயற்பாடாகும். பெற்றோரை, சமூகத்தை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும்.

 

யுக்திய செயற்பாட்டை யார் சொன்னாலும் நிறுத்தமாட்டோம். இதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் யுக்திய நடவடிக்கை – ஒரே நாளில் மேலும் 1024 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 1024 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கைது – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கவலை !

ஒருசில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதுபாரிய பிரச்சினையாகும். யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ திங்கட்கிழமை (15) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கைதிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலை சமையலறை, பெண்கள் பிரிவு மற்றும் கைதிகளின் உற்பத்திகளையும் கண்காணித்தார். கண்காணிப்பு விஜயத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒருசில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனை மதிக்கிறோம்.

அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம். இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

யாழ். சிறைச்சாலையில் நேற்று 16ஆம் திகதிவரை 852 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 38 பெண் சிறைக்கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.