ரகுமான் ஜான்

ரகுமான் ஜான்

புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி புளொட்டின் புலியின் இன்னுமொரு பிரதிபலிப்பே – பகுதி 35

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 35 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 15.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 35

தேசம்: இந்த புலம்பெயர் அரசியல் சூழலில் நாங்கள் பல்வேறு அரசியல் இலக்கிய நகர்வுகளை பார்த்திருக்கிறோம். நீங்கள் வந்த 92ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீப்பொறியும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இவ்வளவு அரசியலிலும் ஈடுபட்ட நீங்கள், தீப்பொறி அமைப்பிலிருந்து போன ஆட்களோடு அமைப்பிலும் இருந்திருக்கிறீர்கள் தொடர்பிலும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அவர்களோடு ஒரு அரசியல் இணக்கப்பாட்டையோ தீப்பொறியை மீளக் கட்டமைக்கின்ற அந்த விடயங்களில் செயல்படவில்லை? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏனென்றால் அவர்களுக்கும் 92 காலப்பகுதியில் இருந்து 2010 அதற்கு பிற்பாடும் தமிழீழ மக்கள் கட்சி, பிறகு மே 18 என்ற ஒரு தொடர்ச்சி இருக்குதானே. அது எதிலயும் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளவில்லை. என்ன காரணம்?

அசோக்: ஓம் 86 ஆம் ஆண்டில் பின் தளத்தில் நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் இருந்து தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற அதன் பிறகு சந்திக்கவும் இல்லை. தொடர்வும் இருக்கவில்லை. நாங்களும் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம், தள மகாநாடு, பின் தள மகாநாடு என பிரச்னைகளில் முழ்கி இருந்த நேரம். அவர்களும் சந்திக்கவில்லை. நானும் முயலவில்லை. நான் இங்கு ஐரோப்பாவுக்கு வந்து தான் அவரை சந்திக்கிறேன். தொடர்பு கிடைக்குது எனக்கு. அவர் கனடாவில் இருக்கிறார். நான் பிரான்சுக்கு வந்துட்டேன்.

தேசம்: அது 2016இல் நடக்குது என? அதற்கு முதலே கண்டீர்களா?

அசோக்: இல்லை. இங்க வந்து தான் சந்திக்கிறேன்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நீங்கள் தொலைபேசி உரையாடலில் இருந்தீர்கள்? 90களில்…

அசோக்: வந்து கொஞ்ச காலம் அவர் தலைமறைவாக இருந்தார். அதற்குப் பிற்பாடு அவருக்கும் எனக்குமான உறவு வருது. அப்போ தமிழீழ மக்கள் கட்சி உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி நான் நினைக்கிறேன் ஆனையிறவு தாக்குதல் கட்டத்தில்தான் உருவாகுது. அதற்கு முதல் அவர்கள் தீப்பொறி என்ற பெயரில் தான்…

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம் கனடாவிலிருந்து ரவி என்று சொல்லி அவரின் உண்மையான பெயர் இளங்கோ என நினைக்கிறேன். அவர் பாரிசுக்கு வாரார். வந்த இடத்தில் அவர் என்னை சந்திக்கிறார். தீப்பொறியா தமிழீழ மக்கள் கட்சியா என்று தெரியவில்லை. அந்தக் கட்சியினுடைய பத்திரிகை ஒன்று கொண்டு வந்தவர்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி ஒரு பத்திரிகை யை வெளியிட்டது.

அசோக்: அந்தக் கட்சி பத்திரிகையோடு வந்து என்னை சந்திக்கிறார்.

தேசம்: அதற்கு முதல் உங்களோடு தொடர்பு கொள்ளவில்லையா?

அசோக்: அந்த கட்சியோடு எந்த தொடர்பும் இருக்கவில்லை. முதலில் தீப்பொறி என்ற பெயரில் இயங்கிய அமைப்பு பிறகு தமிழீழ மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது என நினைக்கிறேன்.

தேசம்: …. சுவிஸ் மாநாடு ஒன்று நடத்தினது தானே.

அசோக்: சுவிஸ் சில் அல்ல. தாய்லாந்தில் இந்த மாநாடு நடக்குது. சபாலிங்கம் தோழர் இங்கே படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் தான் இந்த மாநாடு நடக்குது. 94 ஏப்ரல் கடைசி காலங்களில் மே முதல் வாரத்தில நடந்த தென நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்த தோழர்கள் சிலர் இந்த மாநாட்டிக்கு சென்றிருந்தனர்.

தேசம்: அப்போ நீங்கள் அவர்களோடு தொடர்பு இல்லை.

அசோக்: அரசியல் சார்ந்து அந்த அமைப்போடு நான் எந்த தொடர்பும் வைத்துக் கெதள்ளவிரும்பவில்லை.

தேசம்: அவர்களும் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.

அசோக்: அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மீது தீப்பொறி மீது எனக்கு கடும் விமர்சனம் இருக்கு என்று. ஏனென்றால் கண்ணாடி சந்திரன், நேசன் தொடர்பாக கடும் விமர்சனம் இருக்குதானே. அவங்களும் தீப்பொறியில் இருக்கிறபடியால் தெரியும் நான் தீப்பொறிக்குள் வரமாட்டேன் என்று. நேசன், கண்ணாடி சந்திரன், பாண்டி போன்ற யார் யாரெல்லாம் புளொட்டுக்குள்ள மிக மோசமாக அதிகாரதுஸ்பிரயோகம் செய்தார்களோ, பல்வேறு தவறுகளுக்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் தான் தீப்பொறிக்குள் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் புளொட்டில் இருந்து கடைசி வரை உட்கட்சிப் போராட்டம் நடாத்தி வெளியேறிய தோழர்கள் எவரும் தீப்பொறிக்குள் இல்லை.

இவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் கடந்தகாலம் பற்றி தெரிந்த யாருமே அதற்குள் போகத் தயாராக இல்லை. ரகுமான் ஜான் தோழர் தொடர்பாக நல்ல அபிப்ராயம் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி யாரும் போக மாட்டார்கள். அவர் கோட்பாடு சார்ந்து சிந்திக்கக் கூடியவர். ஆனால் செயற்பாட்டு நடைமுறை தளத்தில் சரியாக அவரால் செயற்பட முடிவதில்லை. வழி நடத்தும் திறன் அவரிடம் இருப்பதில்லை.

அப்போ இளங்கோ வாரார் என்னை சந்திப்பதற்கு வந்து அந்த பத்திரிக்கையைத் தந்து அதனுடைய கொள்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தேசம்: இவர் விடுதலைப் புலிகளில் இருந்து வந்தவரா?

அசோக்: அதற்குப் பிறகுதான் தெரியும் இவர் விடுதலைப்புலிகளில் இருந்தவர் என்றும் கிட்டுவினனுடைய வொடிகாட்ஸ் சாக இருந்தவர் என்றும். அவரும் தீப்பொறிக்குள் இருக்கிறார். அவர்தான் என்னை சந்திக்க வாரார். இந்த சந்திப்பு கலைச்செல்வனுடைய வீட்ட தான் நடக்குது.

தேசம்: கலைச்செல்வனும், லக்ஷ்மியும் தீப்பொறியில் இருக்கிறார்கள்…?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் அங்க வந்தபடியால் அவர்களுக்கு தொடர்வு இருந்திருக்கலாம். தாய்லாந்து மாநாட்டுக்கு கலைச்செல்வனும், லக்ஷ்மியும் போனது தெரியும். ஏனென்றால் சபாலிங்கம் படுகொலை செய்யப்படும் போது அவர்கள் இங்கு இல்லை. மரண இறுதி நிகழ்வுகளுக்தான் வந்தவர்கள்.

இளங்கோ கொள்கைப் பிரகடனம் எல்லாம் கதைக்கிறார். அவர் கதைத்து முடிய நான் கேட்டேன் ஏன் புதிய அமைப்பை தொடங்குகிறீர்கள் புலிகளோடு சேர்ந்து வேலை செய்யலாம் தானே என்று. ஏனென்றால் அதே இராணுவக் கண்ணோட்டம் அதே தமிழீழம். நான் சொன்னேன் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி அந்த பேச்சை அப்படியே ஆரோக்கியமாக முடித்துக்கொண்டோம். அதற்குப் பிற்பாடு எந்தவிதமான தொடர்பும் என்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. ரகுமான் ஜான் தோழருடன் தொடர்பு இருந்தது. அவர் இங்க பாரிசுக்கு மூன்று தடவை வந்தார். தீப்பொறி எல்லாம் உடைந்த பிறகுதான் பாரிசுக்கு வந்தவர். அவருக்கு தெரியும் கடும் விமர்சனங்கள் இருக்கிறபடியால் நான் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யமாட்டேன் என்று முதலே தெரிந்திருக்கும்.

தேசம்: உங்கள் விமர்சனங்களை தோழர் ரகுமான் ஜானிடம் வைத்துள்ளீர்களா?

அசோக்: ரகுமான் ஜான் தோழர் இங்கு வந்தபோது கடும் விவாதம். நீங்கள் எந்த அடிப்படையில் தோழர்களை விட்டுப்போட்டு போனீர்கள்? நாங்களும் விட்டுட்டு போயிருக்கலாம் தானே? நீங்கள் உண்மையிலேயே உட்கட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் நாட்டுக்கு வந்திருக்கலாம். ஏன் எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையா? நாங்களும் தோழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே தளத்துக்கு போய் தள மாநாடு நடத்துறோம், நீங்கள் எங்களோடு வந்து இருந்தால் எவ்வளவு உறுதியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். கடைசியா தீப்பொறியை உருவாக்கி என்னத்தை நாங்கள் சாதித்தோம்? யாரும் உங்களோடு வரவே இல்லை, அதுவும் அதே புலிக் குணாம்சம். புளொட்டின் இன்னொரு பிரதி பிம்பமாக கூட தீப்பொறி இருக்கவில்லை. அதை விட மிக மோசமாக இருந்தது என்பதுதான் உண்மை என்று கடும் உரையாடல்.

நாட்டில் நடந்த ஆரம்பகால அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்தது தீப்பொறியில் இருந்த ஆட்கள் தான். நாட்டில் குறிப்பிட்ட காலங்களில் நடந்த படுகொலைகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பாக இருந்தது நேசனும், கண்ணாடிச் சந்திரனும் தான். மத்தியதர வர்க்க குணாம்சம் இருக்கும்தானே அந்த சொகுசுகளை அனுபவிப்பது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை எப்படி சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லி எனக்கு தான் தெரியும். அதை நான் கண்ணால் பார்த்தேன். இவர்களை நம்பி நாங்கள் எப்படி போக முடியும்?

தேசம்: தோழர் ரீட்டாவின் மீதான பாலியல் பலாக்காரம் தொடர்பாக என்ன அபிப்பிராயம்?

அசோக்: இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நேசன், ஜீவன் நந்தா கந்தசாமி அவங்க இரண்டு பேரும் நேரடியாக சம்பந்தப்படவில்லை. பாண்டி நேரடியாக சம்பந்தப்பட்டவர். அவர்களை இன்று வரையிலும் பாதுகாத்துக் கொண்டு நியாயப்படுத்தி கொண்டிருக்கின்ற நபர்கள் என்றால் அப்போது எப்படி இருந்திருப்பார்கள்? குறைந்தபட்சம் ஒரு சுயவிமர்சனம் வேண்டாமா? புளாட்டை போன்றே மோசமான அமைப்பாக தீப்பொறி இருந்தது.

தேசம்: அதைவிட மோசமாக போயிட்டுது…

அசோக்: தோழர் ரீட்டா தொடர்பான பிரச்சனையை ஜென்னியின் திட்டமிட்ட நாடகம் என்றார்கள். பிறகு ஆதாரங்கள், சாட்சியங்கள் இருந்த போது, சம்பவம் உண்மைதான் ஆனால் இதற்கும் தீப்பொறிக்கும் தொடர்பு இல்லை என்றும், வேறு ஆட்கள் தொடர்பு என்றும் சொன்னார்கள். ஆதாரம் கேட்டபோது பிறகு சொன்னார்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று. இப்போது ஜென்னியின் நாடகம் என்ற பழைய பல்லவியை பாடுகிறார்கள். எந்த நேர்மையும் உண்மையும் இவர்களிடம் இல்லை.

அடுத்தது தனிநபர் பயங்கரவாத செயல்களும் இராணுவ வாத கண்ணோட்டமும்தானே தீப்பொறிக்குள் இருந்தது. கோட்பாடுகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் தொடர்பே இருக்கவில்லை. இல்லாவிட்டால் கிட்டுக்கு குண்டு விசுவார்களா? யோசித்துப் பாருங்கள். வெறும் இரரணுவ வாதம். என்ன ஆரோக்கியமான முன்னெடுப்பை செய்தீர்கள்? கட்டாயம் எங்களுக்கு சுய விமர்சனம் தேவை. இன்றைக்கு என்னை பொருத்தவரை நான் உட்பட யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லாருமே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்கள் தான். யாருமே சுய விமர்சனம் செய்யத் தயாரில்லை. குறைந்தபட்சமாவது நாங்கள் சுய விமர்சனம் செய்யவில்லை தானே. என்னை பொருத்தவரை யாராவது என் மீது குற்றச்சாட்டு வைத்தால் அந்தக் குற்றம் உண்மை என்றால் அதை நான் முதலில் ஏற்றுக் கொள்வேன்.

தேசம்: மற்றது புளொட்டில் இருந்த மாசில்பாலன் அவர் அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் பிறகு தீப்பொறியில் இருந்தவர்கள் என்று நினைக்கிறேன். லண்டனில் தீப்பொறி யிலும் செயற்பட்டார்கள். அதுக்கப்புறம் 2010 வரைக்கும் 2009 முள்ளிவாய்க்கால் பிரச்சனை வரைக்கும் அவர்கள் தமிழீழ கட்சியிலிருந்து ஆனையிறவு தாக்குதல் எல்லாம் கொண்டாடுற மனநிலையில்தான் இருந்தது. அதற்கு பிறகு அவர்கள் திருப்பி புதிய திசைகள் என்று உருமாற்றம் பெறுகிறார்கள். அதில உங்களோடு நெருங்கி செயற்பட்ட நாவலன் தான் முக்கியமான ஆள். அதுக்குள்ளே ஏன் நீங்கள் போகவில்லை?

அசோக்: நான் மிகக் கவனமாக இருந்தேன். வார்த்தைகள் அல்ல முக்கியம். செயற்பாடே எனக்கு முக்கியம். மார்க்சியம், முற்போக்கு என்று எதையும் எங்களால் கதைக்க முடியும். ஆனால் அதற்கேற்றவாறு உண்மையாக நாம் வாழ்வதில்லை. செயற்படுவது இல்லை. நிறைய வாழ்வில் அனுபவப்பட்டு விட்டேன். எப்படி இவங்கள நம்பி போகமுடியும். மாசில் மாசில்பாலன் அப்பா இடதுசாரி என்று நினைக்கிறேன். நாட்டில் இருந்தவர்.

தேசம்: இருக்கலாம் பிற்காலத்தில் அவர் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பில் பங்காற்றி இருந்தவர். நீங்கள் அதை தவறாக எடுக்கக்கூடாது அவர் உண்மையிலேயே புனர்வாழ்வு … சேர்த்தவர் ஏமாத்தியது என்று இல்லை.

அசோக்: அவர் இடதுசாரி பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்துதான் வந்தவர். அவரோடு எனக்கு உறவு இருக்கவில்லை. அறிந்திருக்கிறேன். அவருக்கு இரண்டு மூன்று சகோதரர்கள் லண்டனில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் தொடர்பாக எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் எழுதிய எழுதின கட்டுரைகளுக்கு எல்லாம் மிக மோசமான கமெண்ட்ஸ் கொடுத்தார். என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினார். அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனா மாசில்பாலன் அவங்க கொஞ்சம் ஆரோக்கியமான விழிப்புணர்வு கொண்ட தோழர் என்று நினைக்கிறேன்.

தேசம்: தீப்பொறியில் இருந்தவர்?

அசோக்: இப்ப அவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல் கோட்பாட்டு ரீதியாக சிந்திப்பவர்களாக தெரிகிறாங்க.

தேசம்: அவர்கள் ஒரு காலகட்டத்திலும் 2009 வரைக்கும் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் ஆதரவு தளத்திற்கு போயிட்டு திருப்பி புலிகள் இல்லாமல் போனதும்…

அசோக்: நிறைய தோழர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் அவர்களை அவ்வாறான நிலைக்கு கொண்டுபோய் விட்டது என நினைக்கிறன். அவங்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் விமர்சன ரீதியாக புலிகளை விளங்கிக் கொண்டு அதன் மீது விமர்சனம் வைத்து புலிகளை தேர்ந்தெடுத்திருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளை ஆதரித்தார்கள். ஆனால் இங்க வந்த பிறகுதான் கேள்விப்பட்டேன் தீப்பொறியும், அதன் பின்னான தமிழிழ மக்கள் கட்சியும் புலி ஆதரவு நிலையை கொண்டிருந்தது பற்றி. அவங்களுடைய தமிழிழம் என்ற பத்திரிகை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அது புலிகளின் ஆதரவுத் தளமாக தான் அந்த பத்திரிகை இருந்தது. ஆணையிறவு தாக்குதலை ஆதரித்து தமிழ்தேசிய முற்போக்கு சக்தியான புலிகளை அடையாளப்படுத்துகின்ற போக்கு தீப்பொறியிடம் இருந்தது.

தேசம்: அந்த இடத்தில் அப்படித்தான் மாசில் பாலன் தோழர்களை நான் அடையாளம் காண்கிறேன்.

அசோக்: நான் நினைக்கிறேன் அது அவருடைய அரசியலில் உள்ள தவறான பார்வை. பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட முனையும் பலர் அரசியல் புரிதலில் தவறிழைத்து அவர்களும் மறுபுறம் தீவிர இனவாத தமிழ்த்தேசியததை தேர்வு செய்து விடுறாங்க. தீவிர இனவாத தமிழ் தேசியம் என்ன செய்யும் என்று கேட்டால் புலிகளையே ஆதரிக்க செய்யும். ஆரோக்கியமான முற்போக்கு தமிழ் தேசியத்தை தேர்ந்தெடுக்காத வரைக்கும் தமிழ்தேசிய போக்கு இப்படியான பிழையான வழிகளில்தான் கொண்டு போகும்.

தேசம்: தீப்பொறி தமிழீழ மக்கள் கட்சியாக புலிகளோடு இருந்திட்டு இப்ப மே 18 இயக்கம் அதுல நீங்க ஏதாவது தொடர்புபட்டிருக்கிறீர்களா?

அசோக்: தீப்பொறி, தமிழிழ மக்கள் கட்சியின் புலி ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக பிற்காலங்களில் தோழர் ரகுமான் ஜானோடு பேசி இருக்கிறன். அவர் புலிகள் தொடர்பாக கடும் விமர்சனம் கொண்டவராகவே இருந்தார். தீப்பொறி புலி ஆதரவு நிலை எடுத்த காலகட்டத்தில் அவர்வெளியேறி விட்டார் என நினைக்கிறேன்.

தோழர் ரகுமான் ஜானோடு அரசியல் தளத்தில் எந்தசெயற்பாட்டு உறவும் எனக்கு இருக்கவில்லை. தனிப்பட்ட உறவே இருந்தது. நிறைய அரசியல் உரையாடல் இருந்தது. அவரிடம் இருந்து அரசியல் கோட்பாட்டுத்தளங்களில் நிறைய கற்றுக்கொள் முடியும். இன்றைய தமிழ்ச் சூழலில் அவர் முக்கியமானவர் என்ற எண்ணம் என்னிடம் உண்டு. அவரும் சில தோழர்களும் சேர்ந்து வியூகம் என்று ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. வியூகம் வெளியிட்ட போது இங்க வந்தவர். நாங்க இங்க அதற்கு விமர்சன கருத்தரங்கு ஒன்றை செய்தோம். முள்ளிவாய்க்கால் முடிந்தபிறகு மே 18 தொடங்கிறார். மே 18 தொடங்கி இங்க வாரார். அப்போ நாங்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். அதில் மே 18 பற்றிய கொள்கை பிரகடன விளக்கங்கள் சொல்லப்படுது. நான்தான் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். தலைமைதாங்கும் போதே சொல்லிட்டேன் இவர் என்னுடைய தோழர் மே 18 அமைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று.

தேசம்: அப்போ ஏன் நீங்கள் தலைமை தாங்கினீர்கள்?

அசோக்: தலைமை தாங்குவதற்கு முழுக்கமுழுக்க அதில் உடன்பாடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை தானே.

தேசம்: அதை அரசியல் கலந்துரையாடலாக தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

அசோக்: தலைமை உரையில் நான் சொல்லிட்டேன் இதற்கும் எனக்கும் தொடர்பில்லை, மே18 அமைப்பு தொடர்பான கருத்துக்கள் விமர்சனங்கள் பற்றி ரகுமான் ஜான் தோழருடன் கதையுங்கள். இந்த அமைப்பை பற்றி சுதந்திரமான வெளியில் கலந்துரையாட நான் தலைமை தாங்குகிறேன் என்று சொல்லிட்டேன். ஆரோக்கியமான அரசியல் விமர்சன உரையாடல் வெளியை உருவாக்க முனையும் தளத்தில் நாம் கலந்து கொள்வதில் தவறில்லை. அதே நேரம் எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதை நான் செய்தேன்.

பாகம் 21: சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 21 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 21:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம்.சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள்.
அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம். தோழர்கள் ரகுமான் கேசவன் வெளியேறி கொஞ்ச நாட்களிலேயே தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்…

தேசம்: கூட்டத்தை தொடர்ந்து தான் கடத்தப்படுகிறார்?

அசோக்: ஓம். இந்த மத்திய குழு கூட்டத்திற்கு பின் வெளியேறிய தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன் என்னுமொரு தோழர் பெயர் ஞாபகம் இல்லை. அவரும் சேர்ந்து மான மதுரை என நினைக்கிறேன் அங்கு தலைமறைவாக போய் இருந்தாங்க. இதன் பிற்பாடுதான் தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

தேசம்: இதில தெளிவில்லாமல் இருக்கு என்ன என்றால் சந்ததியார் ரெண்டு மூன்று கூட்டங்களுக்கு கலந்துகொள்ளவில்லை. இவர்கள் சந்ததியர் வராமைக்கான காரணத்தை கேட்கிறார்கள். அதை தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் படுகொலைகள் சம்பந்தமாக. ஆனால் அதற்கான ஆதாரங்கள் பெருசாக சொல்லப்படவில்லை. இப்ப இந்த வெளியேற முற்பட்ட உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? இந்த வெளியேற்றம் அவர்களுடன் இணைந்த கூட்டான வெளியேற்றம் இல்லையா?

அசோக்: உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டால் தோழர் சந்ததியார் இந்த மத்திய குழுக் கூட்டம் நடப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார். அவர், டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம் எல்லோரும் வெளியேறி அண்ணாநகரிலேயே இருக்கிறார்கள். தோழர் சந்ததியாருக்கும் டேவிட் அய்யாவுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. இது காந்திய அமைப்பு காலத்திலிருந்து தொடர்வது. அண்ணாநகரில் டேவிட் ஐயாவும், சந்ததியாரும் ஒன்றாகத்தான் இருந்தவர்கள். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி மானாமதுரைக்கு போய்விட்டார்கள்.

உண்மையிலேயே நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. இவர்கள் வெளியேறி போனதற்கு பிற்பாடு சந்ததியாருடன் உறவு இருந்ததோ தெரியாது. ஆனால் உறவு இருந்திருந்தால் இவர்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக் கொண்டு போய் இருப்பாங்க. ஏனென்றால் இவங்கள் வெளியேறினது முகுந்தனுக்கு தெரியவர நிச்சயமாக சந்ததியார் மீது சந்தேகம் வரும்.

உண்மையிலேயே அப்படி உறவு இருந்திருந்தால் இவர்கள் கூட்டிக்கொண்டு போய் இருக்க வேண்டும். அல்லது அவரின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இவங்கள் மத்திய குழுக் கூட்டம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நாளைக்குப் பிறகுதான் வெளியேறுறாங்கள். அதற்குப் பிறகுதான் எங்கள் மேல சந்தேகம் வந்து எங்களை தளத்துக்கு அனுப்பாம வைத்திருந்து… அதைப் பற்றி முதலே கதைத்திருக்கிறேன். ஒரு மாதத்துக்கு பிறகுதான் தளத்துக்கு அனுப்பினார்கள். அப்ப சந்ததியார் விடயத்தில் பாதுபாப்பில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

தேசம்: இந்த வெளியேற்றத்தில் கூட சந்ததியார், சரோஜினி, சண்முகலிங்கம் மூன்று பேரும் வெளியேறிட்டினம். ஆனால் அவைக்கு எதிரான எந்த ஒரு துன்புறுத்தலும் இந்தக் கூட்டம் நடக்கும் வரைக்கும் நடக்கேல.

அசோக்: நடக்கேல. ஆனால் அவங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடந்தது.

தேசம்: சந்ததியார் வேறு அமைப்புகளோடு சேரவோ அல்லது தான் புதிய அமைப்பை உருவாக்குவதற்கோ ஏதாவது முயற்சி எடுத்த மாதிரி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: இல்லை இல்லை. அவங்க மிக அமைதியாக தான் அண்ணாநகரில் இருந்தவங்க. டேவிட் ஐயா, சந்ததியார், சரோஜினிதேவி, சண்முகலிங்கம் அவங்க பூரணமாக புளொட்டிலிருந்து ஒதுங்கிட்டார்கள். அவர்களுக்கு புளொட்டில் எந்த அரசியல் ஈடுபாடும் இருக்கவில்லை. புளொட்டிக்கு எதிராக இந்த நடவடிக்கைகளிலும் அவங்க ஈடுபடவில்லை. அவர்கள் ஒதுங்கி அமைதியாகத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்கு பிறகு இவர்கள் வெளியேறுகிறார்கள் ஆனால் சந்ததியாரை அழைத்துக் கொண்டு செல்லேல. இவர்களுக்கும் உறவு இருந்தது தொடர்பாக தெரியாது. அவர்கள் எங்கேயாவது பதிவு செய்திருக்கிறார்களா தீப்பொறி அல்லது…

அசோக்: தங்களோட தீப்பொறியில் சந்ததியார் இருந்தது என்று நிறைய இடத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தீப்பொறி தங்களுடைய உறுப்பினராக சந்ததியாரை அடையாளப்படுத்துகிறார்கள்.

தேசம்: ஆனால் அதற்குள் ஒரு முரண்பாடு வருது எல்லோ. சந்ததியார் தீப்பொறி யோடு இருந்திருந்தால் அவர்கள் ஒன்றாக தானே போயிருக்க வேண்டும்.

அசோக்: இதுல தான் பெரிய சிக்கல் என்ன என்று கேட்டால் உண்மையிலேயே இவங்கள் சந்ததியார் தீப்பொறியில் இருந்தார் என்று அடையாளப்படுத்துகிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவங்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். ஏனென்றால் இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு அவங்களுக்கு தெரியும் சந்ததியாருக்கு பிரச்சனை வரும் என்று. ஆனால் இவங்கள் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. சந்ததியர் அங்க சுதந்திரமாக திரியுறார். ஆனால் அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் முகுந்தன் தரப்பினாரால் வைக்கப்படுகின்றது. பிறகு நாங்கள் நாட்டுக்கு போனதற்குப் பிறகு தான்…

தேசம்: அந்த விடயத்துக்கு பிறகு வாரேன். இது ஒரு சிக்கலான விடயம். மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளுவோம். டேவிட் ஐயா, சரோஜினி ஒரு இடத்தில் இருக்கிறீனம் என்றால் டேவிட் ஐயாவின் ஒரு நேர்காணலில் அவர் சொல்லுறார் உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு வந்து ஒரு சர்வாதிகார போக்கை கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். தான் அதை உமாமகேஸ்வரனுக்கும் சொன்னதாகவும் இது சம்பந்தமாக மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருந்ததா? சந்ததியார் இருக்கிறார், டேவிட் ஐயா இருக்கிறார் முக்கியமான ஆட்கள் இருக்கினம். தோழர் ரகுமான் ஜான், தோழர் நேசன் நீங்கள் .. எனக்கு இன்னும் அதற்கான… எனக்கும் விளங்கவில்லை ஒரு பலமான முற்போக்கு சக்திகள் இருந்தும் எப்படி ஒரு பலவீனமான உமாமகேஸ்வரன் அந்த அதிகாரத்தை கைப்பற்றுகிறார்

அசோக்: டேவிட் ஐயா முரண்பட்டுக் கொண்டு போகும்போது அந்த முரண்பாட்டுக்கான காரணங்களை அவர் நிச்சயமாக சந்ததியாருக்கு சொல்லியிருப்பார். பேட்டியிலும் அதைத்தான் சொல்லுறார். நான் சொல்வது என்ன என்று கேட்டால் ஆரம்பத்துல டேவிட் ஐயா வெளியே போகும்போது ஒரு சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். டேவிட் ஐயா வைத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி பின் தளத்தில் இருந்த முக்கிய தோழர்கள் எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் யாரும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாதது மிக மிக கவலைக்குரியதுதான். அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவெடுத்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு கண்டிருக்கவேண்டும்.

ஆனால் டேவிட் ஐயா முன்வைத்த குற்றச்சாட்டுகளை புளொட் அமைப்பின் பிரச்சனையாக பார்க்காமல் டேவிட் ஐயாவின் பிரச்சனையாக குறுக்கி பார்த்ததின் விளைவுதான் அது என நினைக்கிறேன். இது புளொட்டில் தொடர்ச்சியாக நான் அவதானித்த விடயம்தான். மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றி யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள். தனி நபர் சார்ந்த விடயமாக, அவருடைய பிரச்சனையாக, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரிகடந்து சென்றுவிடும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. அது இயக்கத்தை பாதிக்கும் சீர்குழைக்கும் என நாங்க நினைப்பதில்லை. எங்களின் இருப்பும் தனிநபர் சார்ந்த எங்களின் அபிலாசைகளும்தான் இதற்கு காரணம்.

தேசம்: சந்ததியாருக்கு முதலே டேவிட் ஐயா வெளியேறிவிட்டாரா?

அசோக்: ஓம் டேவிட் ஐயா முதலே வெளியேறிவிட்டார்.

தேசம்: எவ்வளவு காலத்துக்கு முதல்?

அசோக்: நீண்டகாலத்துக்கு முதலே முகுந்தனோடு முரண்பட்டு வேலை செய்ய முடியாது என்று டேவிட் ஐயா போயிட்டார்.

தேசம்: டேவிட் ஐயாவின் உடைய குறிப்பின்படி எண்பத்தி மூன்றாம் ஆண்டு தாங்கள் மட்டக்களப்பு சிறை உடைப்பு எல்லாரும் தமிழ்நாட்டுக்கு போன பிறகு அவர் ஒரு ஆறு மாதம் செய்கிறார். அப்ப கிட்டத்தட்ட எண்பத்தி நான்கு தொடக்கத்திலேயே அல்லது 83 கடைசியிலேயோ போயிட்டார்.

அசோக்: நான் நினைக்கிறேன் டேவிட் ஐயா 84 கடைசியில்தான் வெளியேறிப் போய் இருப்பார் என. அதுக்குப் பிறகு புளொட்டோட தொடர்பு இருந்தது அவருக்கு. உத்தியோக பூர்வமாக எந்த வேலையும் செய்யவில்லை. காலப்போக்கில் முற்றாக புளொட்டினுடைய தொடர்பை விட்டுவிட்டார்.

தேசம்: உங்களுக்கு அவர் வெளியேறினது தெரியுமா?

அசோக்: டேவிட் ஐயா வெளியேறினது தெரியும்.

தேசம்: அப்போ நீங்கள் தோழர் ரகுமான் ஜான் ஆட்களுடன் அல்லது மற்ற தோழர்களுடன் கதைக்கவில்லையா இதைப்பற்றி…?

அசோக்: பெருசா இதைப்பற்றி கதைக்கவில்லை. உண்மையிலேயே அது பெரிய பிழைதான். இன்னொரு சிக்கல் என்னவென்றால் கம்யூனிகேஷன் பிரச்சினையாக இருந்தது அந்த நேரம். நாங்கள் நாட்டிலிருந்து போற ஆட்கள் தானே. நிறைய விடயங்கள் தளத்தில் இருந்த எங்களுக்கு காலம் கடந்துதான் தெரியவரும். பின்தளம் செல்லும் போதும் இப்பிரச்சனைகள், முரண்பாடுகள் பற்றி யாரும் எங்களோடு கதைப்பதில்லை. இதுபற்றி முன்னரே நிறைய கதைத்துள்ளேன். உண்மையிலேயே நாங்க நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். ஆரம்ப காலத்தில் இந்த தவறுகளை பற்றி நாங்க கவனம் கொள்ள தவறிட்டம்.

தேசம்: அந்த நேரம் இப்போ உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பது உண்மைதான். நீங்கள் அங்கே இருந்து சில மத்தியகுழு கூட்டங்களுக்கு வரேக்க மத்திய குழுக் கூட்டத்துக்கு வெளியிலேயும் சில கருத்தாடல்கள் நடந்திருக்கும் தானே… அதுகளிலும் இது சம்பந்தமாக எதுவும் முக்கியத்துவம் பெற இல்லையா? தோழர் ரகுமான் ஜான் யாரும் இதைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடவில்லையா.

அசோக்: டேவிட் ஐயாவின் வெளியேற்றம் எங்களுக்குப் பெரிய பாதிப்பை தரவில்லை. நான் முன்னர் சொன்ன மாதிரி டேவிட் ஐயாவின் பிரச்சனையை வெளியேற்றத்தை அவரின் தனிப்பட்ட பிரச்சனையான நாங்க பார்த்ததன் விளைவுதான் அது. அத்தோடபுளாட்டின் முக்கிய ஆளாக இல்லை என்ற நினைப்பும் எங்களிடம் இருந்தது. டேவிட் ஐயாவின் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் இயக்கத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையாக நாங்க காணத் தவறிட்டம். இப்ப யோசிக்கும் போது மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் பிரயோசனம் இல்லைப் போல் தெரிகிறது. எங்களிடம் நிறைய பிரச்சனைகள் தவறுகள் இருந்திருக்கு.

தேசம்: காந்தியத்தில் முக்கியமான ஆள். ஆனால் அவர் வைக்கும் குற்றச்சாட்டு மிகப் பயங்கரமானது. அந்த நேரமே அதற்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால் இது நிச்சயமாக தடுக்கப்பட்டு இருக்கலாம். டேவிட் ஐயாவை கடத்தினவர்களுக்கு டேவிட் ஐயா சந்ததியார முழு பேரையும் தெரியுமா.

அசோக்: தெரிந்திருக்க வில்லையா அல்லது முகுந்தனின் கட்டளையை தவறாக புரிந்து கொண்டார்களா தெரியல்ல. டேவிட் ஐயா அந்த நேர்காணலில் ஒரு இடத்தில் சொல்லுகிறார் தன்னை வாகனத்தில் கடத்திக்கொண்டு போகிறார்கள். போகும்போது இடையில அந்த வாகன சாரதிதான் டேவிட் ஐயாவின் குரலை அடையாளம் காண்கிறார் இவர் டேவிட் ஐயா என்று. ஆனால் இவர்கள் உண்மையாக கடத்த வந்தது சந்ததியாரை. கடத்திக் கொண்டு போன உறுப்பினர்களுக்கு சந்ததியார் யாரென்று தெரியாமல் கடத்தினார்களா அது தெரியல்ல. சங்கிலி கந்தசாமி போகவில்லை. அவரின்ர உளவுப்படைதான் போனது. அந்த ட்ரைவர் இருந்தபடியால் தான் விட்டுட்டு போனவர்கள் இல்லாவிட்டால் அவரையும் மேடர் பண்ணி இருப்பார்கள்.

தேசம்: சந்ததியார் வெளியேறி எவ்வளவு காலத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்படுகிறார்? அவர் கொலை செய்யப்பட்ட விடயம் எப்போது தெரிய வருகிறது?

அசோக்: நான் நினைக்கிறேன் 85 கடைசிப் பகுதியில் கொலை செய்யப்படுகிறார் என்று. மத்திய குழுக் கூட்டம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்படுகிறார் என நினைக்கிறேன்.

தேசம்: கடத்தப்பட்ட இரண்டு மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்குறார்?

அசோக்: இல்லை. மத்திய குழுக் கூட்டம் நடந்த பிற்பாடு அவர் சுதந்திரமாக அண்ணாநகரில் தான் இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் கடத்தப்படுகிறார்.

தேசம்: மத்திய குழுக் கூட்டத்திற்கு பிறகு தானே கடத்தப்படுகிறார்?

அசோக்: மத்தியகுழு கூட்டத்திற்கும் அவர் கடத்தப்படுவதற்கு இடையில் நான் நினைக்கிறேன் 2, 3 மாதம் இடைவெளி இருக்கும். சரியாக காலத்தை என்னால் நினைவு படுத்தமுடியாமல் உள்ளது. கடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள்குள்ளேயே கொலை செய்யப்பட்டு விட்டார் என நினைக்கிறேன். இதனோடு சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். கடத்தப்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாது. எப்ப கொலை செய்தார்கள் என்ன நடந்தது ஒன்றுமே தெரியாது தானே.

தோழர் சந்ததியார் கடத்தப்பட்ட உடனேயே டேவிட் ஐயா பொலிசில் என்ரி போட்டுட்டார், சந்ததியாரை காணேல என்று . காணேல என்று சொன்னதுமே விளங்கிவிட்டது புளொட் தான் கடத்தி விட்டது என்று சொல்லி. பிறகு அப்படியே போனது தான் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசம்: அந்த நேர்காணலில் டேவிட்டையா சொல்லுகிறார் தன்னைக் கடத்த வந்தவர்கள் தன்னை கடத்தவில்லை உன்னைத்தான் கடத்த வந்தார்கள் ஆகவே நீ பாதுகாப்பாக இரு என்று சந்ததியாரிடம் சொல்லுறார். அப்படி இருந்தும் அந்த எச்சரிக்கையை மீறி இவர் திரிகிறார். அது எப்படி புளொட்டில் படுகொலைகள் நடக்கிறதை நீங்கள் முழுமையாக நம்பி இருந்தால் டேவிட் ஐயாவை கடத்தி போட்டு விடுவித்திருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து அவர் கவனம் இல்லாமல் வெளியில் திரிந்து.

அசோக்: டேவிட் ஐயா சந்ததியாரை கவனமாக பாதுகாப்பாக இருக்கும் படி சொல்லியுள்ளார். அதுல கொஞ்சம் கவனம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு தோழர் சந்ததியாருக்கு வேண்டிய ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தான் சந்ததியாரை வர வைக்கிறார்கள். திட்டமிட்டுத்தான் வர வைக்கிறார்கள். டெலிபோன் பண்ணினதும் நம்பிட்டார் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது அப்படித்தான் நம்பிக்கையான ஒரு ஆளை கொண்டு டெலிபோன் பண்ணி வெளியில வரவழைத்து தான் கடத்தினார்கள் என்று சொல்லி.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த தகவல்கள் கூடுதலாக சரோஜினி அக்காவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு.

அசோக்: சரோஜினி அக்காவுக்கு தெரியும். சண்முகலிங்கத்துக்கும் தெரியும் அவர் இறந்து போய் விட்டார். ஒரே ஒரு ஆள் சரோஜினி அக்கா தான். ஏனென்றால் சரோஜினி அக்கா தான் அந்த காலகட்டத்தில் டேவிட் ஐயா, தோழர் சந்ததியார் ஆட்களோடு நெருக்கமாக இருந்தவங்க. ஆனால் தோழர் சந்ததியாரின் கடத்தலோடும், கொலையோடும் சம்பந்தப்பட்ட, இந்த விடயம் தெரிந்த பலர் இப்போதும் உயிருடன் இருக்காங்க. அவங்களின்ற மனச்சாட்சி அவங்களை உறுத்தாது என நினைக்கிறன். அவங்க வாய் திறக்க மாட்டாங்க.

தேசம்: தீப்பொறி உடனான தொடர்புகளையும் அவா தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இப்ப மத்திய குழுக் கூட்டம் நடந்து முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள் தீப்பொறி சார்ந்த நபர்கள். அப்ப தீப்பொறி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்களுக்கு பிறகு நீங்கள் தாயகத்திற்கு திரும்புகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தாயகத்தில் இருந்து இங்கு வந்த உடனேயே உங்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?

அசோக்: எங்களுக்கு படகு ஒழுங்கு செய்து தரப்படவில்லை.

தேசம்: அது திரும்பிப் போவதற்கு. மத்திய குழுக் கூட்டத்துக்கு பின் தளத்துக்கு வரும்போது நீங்கள் கண்காணிக்கப்பட்டீர்களா?

அசோக்: அதுல எந்த கண்காணிப்பும் இருக்கவில்லை. நோர்மலா தான் இருந்தது. அதற்குப் பிற்பாடு நடந்த விடயங்க ள்தானே எல்லாம். மத்தியகுழு கூட்டம் பிரச்சனை வெளியேற்றம் இவை எல்லாம்.. அதன்பின்தான் எங்களுக்கு நெருக்கடி தொடங்குகிறது.

தேசம்: அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் ஏற்பாடு செய்து தரேல.

அசோக்: ஒன்றரை மாதங்கள் இருக்காது என நினைக்கிறேன் ஒரு மாதம் இருக்கும். கரையில் நிற்கும் போதுதான் கண்காணிப்பு போடப்பட்டது. பிறகு அவர்கள் ஒழுங்கு பண்ணிக் தந்துதான் நாட் டிக்கு தளத்திற்கு போன நாங்கள். இது பற்றி முன்னர் கதைத்துள்ளோம்.

தேசம்: அப்போ உங்களுக்கு அச்ச உணர்வு வரேல்லையா. கடலுக்குள்ளே ஏதாவது? உங்களை அனுப்பி போட்டு இலங்கை ராணுவத்துக்கு தகவல் கொடுத்து இருந்தால்…

அசோக்: அப்படி எங்களுக்கு அச்சம் இருக்கல. எங்களோடு வந்த ஓட்டி மிக நம்பிக்கையான ஆள். ஓட்டி மாதகலைச் சேர்ந்தவர். . குமரனுக்கு மிக நெருக்கமான ஒரு ஆள்.

தேசம்: யார் யாரெல்லாம் போனது.

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, குமரன்.

தேசம்: இப்ப வந்து எண்பத்தி ஆறு முற்பகுதி இலங்கைக்கு போகிறீர்கள். 85 கடைசிப் பகுதியில் தான் போறோம்.

பாகம் 20: புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 20 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 20:

தேசம்: நாங்கள் ஏற்கனவே கதைத்த மாதிரி 84, 85 காலகட்டங்களில் அரசியல் மிக வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. எப்படி நடந்ததோ தெரியல. புற அரசியலில் ஞாயமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது. ஏனென்றால் 85 ஆம் ஆண்டு ரெலோ ட்ரைனை அடித்து புரட்டியது. நான் நினைக்கிறேன் அது அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதல் என்று. அதுல 45 தொடக்கம் 50 வரையிலான ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். சாவகச்சேரி பொலீஸ் ஸ்டேஷன் அடிபடுது. அதுக்குப்பிறகு அனுராதபுரத்தில் புலிகள் போய் பொதுமக்களை கொல்கிறார்கள். கிட்டத்தட்ட 140 பேர் அதில் சாகினம்.

பிறகு குமுதினிப் படுகொலை அதுவும் அந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான தாக்குதலாக இருக்குது. அதோட ஈழ தேசிய விடுதலை முன்னணியின் இயக்கங்களின் இணைவுக்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கு. திம்புப் பேச்சுவார்த்தை இப்படி அந்த காலகட்டம் அரசியல் ரீதியாக மிக வேகமாக துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இது அவ்வளவு தூரம் உணரப்படவில்லை என்று நினைக்கிறேன். அதுக்குள்ள உட் பிரச்சனை மிக தலைதூக்குற கால கட்டமாக இருக்குது. அந்தக் காலகட்டத்தில்தான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: புளொட்டைப் பொறுத்தவரையில் ஒரு பார்வை இருந்தது முதலில் அதைப்பற்றி கதைத்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மக்கள் மயப்படுத்தலுக்கு பிற்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்று. மக்கள் இராணுவம், மக்கள் யுத்தம், வெகுஜன அரசியல், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கே புளொட் முன்னுரிமை கொடுத்தது. அதன் கோட்பாடும் அதாகத்தான் இருந்தது. ஏனென்றால் வெறுமனமே இராணுவத்தின் மீதான இப்படியான தாக்குதல்கள் மக்களுக்கு பெரிய தீங்கை கொடுக்கும். ராணுவத்தைப் பலப்படுத்தவும், எமது மக்களை இராணுவம் கொன்று குவிக்கவும் இவ்வாறான தாக்குதல்கள் வழிசமைத்து விடும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. அதுதான் நடந்தது. மக்கள் யுத்தத்துக்கான முதல் தயார்படுத்தல் என்பது மக்களை அரசியல் மயப்படுத்தல் மக்கள் மத்தியிலிருந்து மக்கள் ராணுவத்தை கட்டி எழுப்புதல். மரபுரீதியான ராணுவத்தை எழுப்புவது அல்ல ஒரு போராட்டம்.

தேசம்: குறிப்பாக தளத்தில் நீங்கள் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு இருந்தபடியால் இதுவும் ஒரு பெரிய அழுத்தமாக இருந்திருக்கும் என. மற்ற அமைப்புகள் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நீங்கள் அப்படி முன்னெடுக்காமல் இருக்கிறது என்பது பெரிய அழுத்தங்களை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அசோக்: மக்கள் மத்தியில் போய் வேலை செய்யும் போது அப்படியான எதிர்பார்ப்புகள் வரும். ஆனால் அந்த தாக்குதல்களால் ஏற்படுகின்ற எதிர் நடவடிக்கைகள் மக்களை பார்க்கும்போது அவர்கள் உணர்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் தீங்கானது என்று சொல்லி. அப்போ நாங்கள் விளங்கப்படுத்துகிறோம். பூரணமான விடுதலை என்பது இது அல்ல. இது பல்வேறு பிரச்சினைகளை கொண்டுவரும். நிறைய முரண்பாடுகள் ஏற்படுத்தும். பலமான சக்தியாக ராணுவம் பலம் பெறும் என்றெல்லாம் சொல்கிறோம். அக்காலங்களில் புலிகளின் சுத்த இராணுவவாதத்தை, அரசியல் அற்ற போக்கை பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். கடைசி காலங்களில் எல்லா இயக்கங்களும் அவர்களால் அழிக்கப்பட்ட பின்பு மக்கள் நிலை கையறு நிலைக்கு வந்த பின் மக்களால் என்ன செய்யமுடியும். புலிகளை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லைத்தானே. புலிகள் திட்டமிட்டே இவ்வாறு செய்தார்கள்.

அடுத்தது நீங்கள் கேட்டது சந்ததியார் வெளியேற்றம். சந்ததியார் வெளியேற்றம் 85 நடுப்பகுதியில் தான் நடந்தது. காலங்களை சரியாக என்னால் ஞாபகம் கொள்ள முடியாதுள்ளது. 85 நடுப்பகுதியில் மத்தியகுழு கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இதில் தோழர் சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கதைக்கப்படுகின்றது. எனவே நான் நினைக்கிறேன் 85 நடுப்பகுதியில் சந்ததியார் வெளியேறி இருப்பார் என.

தேசம்: சந்ததியார் எப்போது கடத்தப்படுகிறார்…

அசோக்: இந்த மத்தியகுழு கூட்டத்திற்கு பிற்பாடு தான் சந்ததியார் கடத்தபட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த மத்தியகுழு கூட்டம் நடந்த பின்புதான் ரகுமான் ஜான் தோழர், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறுகின்றார்கள்.

தேசம்: பாலஸ்தீன பயிற்சி முடித்து தோழர் ரகுமான் ஜான் வந்துவிட்டாரா?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சி முடித்துவந்த பின் நாங்கள் ஒன்றாக கூடிய மத்தியகுழுகூட்டம் இதுதான். இந்த மத்திய குழு கூட்டம் முடிந்து வரும்போது தான் சொல்கிறார்கள் தாங்கள் வெளியேறப்போவதாக.

தேசம்: அதாவது நீங்கள் சொல்லுற மத்திய குழுக் கூட்டம் சந்ததியார் கடத்தப்பட்ட நேரம் நடக்கிற மத்தியகுழு கூட்டமா அல்லது அதற்கு முதலா…

அசோக்: இந்த மத்திய குழுக் கூட்டம் தோழர் சந்ததியார் வெளியேறிய பின்னர் நடந்த மத்தியகுழு கூட்டம். இக் கூட்டம் நடைபெறும் போது தோழர் சந்ததியார் வெளியேறி இருந்தாரே ஒழிய அந்த நேரம் கடத்தப்படவில்லை. இந்த கூட்டம் நடை பெற்ற பின்னர்தான் தோழர் சந்ததியார் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றார். காலங்கள் சொல்ல முடியாதுள்ளது. சரி பார்க்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் சந்ததியார் தொடர்பான விவாதம் நடந்தது. சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கேட்டபோது முகுந்தன் சந்ததியார் என்ன காரணத்திற்காக வெளியேறினார் என தனக்கு தெரியாது என்றும் அதற்கான காரணத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்கின்றார்.

தேசம்: யார் இந்த கேள்விகளை எழுப்பியது ?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் தான் சந்ததியார் தொடர்பான பிரச்சனை அங்கு வைத்தவர். தோழர் ரகுமான் ஜானின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் முகுந்தனால் பதில் அளிக்கமுடியவில்லை. முகுந்தனுக்கும், அவரின் விசுவாசிகளுக்கும் பெரும் டென்சன். கூட்டத்தில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சந்ததியார் தொடர்பாக பயங்கர விவாதம். முகுந்தனோட பெரிய முரண்பாடு. முகுந்தன் தனக்கும் சந்ததியார் வெளியேற்றத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நியாயப் படுத்திக் கொண்டே இருந்தார். கூட்டம்முடிந்து வெளியே வந்த பின், தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், கண்ணாடி சந்திரன் சொல்கிறார்கள் இயக்கத்தை விட்டு வெளியேறப்போறாம், உங்களின் நிலைப்பாடு என்ன என்று எங்களிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. என்ன நடந்தது என்றால் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னரே அவங்க தீர்மானித்துவிட்டாங்க தாங்க வெளியேறுவது என்று. முதலே முடிவு பண்ணிட்டாங்க. ஆனா எங்க கிட்ட சொல்ல வில்லை. நாங்கள் தளத்திலிருந்து அந்த மத்திய குழு கூட்டத்துக்கு போறோம். இவர்களின் நோக்கம் எதுவுமே எங்களுக்கு தெரியாது.

தேசம்: இந்த மத்திய குழுக் கூட்டத்துக்கு முற்பாடு இதைப்பற்றி எதுவும் கதைக்கல…

அசோக்: எதுவும் கதைக்கேல, நாங்கள் பின் தளத்தில் இருக்கவில்லை தானே. நாங்கள் இரண்டு மூன்று நாளுக்கு முதல் தான் மத்திய குழுக் கூட்டத்துக்கு போறோம். எங்களை சந்தித்தவர்கள் இதைப் பற்றி கதைக்கவும் இல்லை.

தேசம்: அப்போ இந்த மத்திய குழுவில் இருந்து வெளியேறும் ஆட்கள் யார்?

அசோக்: தோழர் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன்

தேசம்: சலீம்?

அசோக்: சலீம் தோழர் இந்த காலத்தில் இலங்கையில் சிறையில் இருந்தவர். அப்போ வெளியேறுவது என்று சொல்லி முடிவெடுத்து அவர்கள், கூட்டம் முடிந்து வெளியில் வந்த சொன்னவுடன் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக போய்விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்கள் வெளியேறினால் எங்களையும் முகுந்தன் ஆட்கள் சந்தேகிப்பார்கள் பெரும் ஆபத்து என்பது எங்களுக்கு தெரியும். தோழர் குமரன் குழம்பி விட்டார். குமரனுக்கு இவர்களோடு வெளியேறும் எண்ணம் இருந்தது. நான் குமரனுக்கு சொன்னேன். நாங்கள் நாலு பேரும் நாட்டில் இருந்து வந்திருக்கிறோம். நாட்டுக்கு போறோம். நாட்டுக்குப் போய் பின்தள பிரச்சினையை சொல்லுறோம். அங்கு போய் நாம் முடிவு பண்ணுவோம் என்று. கூட்டத்தில் பல்வேறு கொலைகள் தொடர்பாக எல்லாம் கதைக்கப்பட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார். மத்திய குழுக் கூட்டத்தில் கடைசியும் முதலுமாக உட் கொலை பற்றி கதைக்கப்பட்டது அன்றைக்குத்தான்.

தேசம்: அதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையும்…

அசோக்: கதைத்து பிரச்சனைப்பட்டு அவங்கள் வெளியேறிவிட்டாங்க. நாங்களும் அவங்களோட சேர்ந்து கதைத்து பிரச்சனைபட்டு விட்டோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் நினைக்கிறேன் . 2 ,3 நாட்களுக்கு பிறகு அவங்க வெளியேறிவிட்டாங்க. எங்களை நம்பி, எங்க கதைகளை நம்பி போராட்டத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களும், தோழர்களும் நாட்டில இருக்காங்க. அத்தோட நாங்க பயிற்சிக்காக பின் தளம் அனுப்பிய தோழர்களின் நிலை என்னவாகும். நாங்க வெளியேறிய பின் அவர்களின் நிலை மிக மோசமாகி சந்தேகப்பட்டு அவர்களின் நிலமை கொடுமையாகிவிடும் . அதனால தளத்திற்கு போய் நிலமையை சொல்வோம் என்று நாங்க முடிவு பண்ணினோம். இவங்க வெளியேறிய பின்பு எங்களின் நிலை ஆபத்தாகி விட்டது.

தேசம்: நாங்க என்று சொல்லி யாரை சொல்லுகின்றீர்கள்?

அசோக்: நான், ஈஸ்வரன், குமரன், முரளி. நாங்கள் அதற்கு பிறகு ஒரு வாரம் அங்கேயே நின்றோம். நாட்டுக்கு போவதற்கான நடவடிக்கைகளை எடுத்து எங்களுக்கான போக்குவரத்து boat வசதி எதையும் முகுந்தன் ஆட்கள் செய்து தரவில்லை.

தேசம்: நெருக்கடி தரேலயா…

அசோக்: நெருக்கடி தரேல. ஆனால் கண்காணிக்கப்பட்டோம். மத்திய குழுக் கூட்டம் நடந் து சுமார் ஒரு மாதம் நாங்க அலைக்கழிக்கப்பட்டோம்.

தேசம்: மத்திய குழுக் கூட்டம் நடந்து ஒரு மாதம் வரை நீங்கள் பின் தளத்தில் தான் இருக்கீங்க?

அசோக்: எங்களை நாட்டிக்கு போவதற்காக கோடியாக்கரைக்கு போக சொன்னாங்க. கரைக்கு நாங்கள் வந்துவிட்டோம். எங்களுக்கான எந்த வசதியும் செய்து தரப்பட இல்லை. பிறகு பார்த்தால் புதிதாக இரண்டு பேர் எங்கள் பாதுகாப்புக்கு என்று நாங்க தங்கி இருந்த இடத்திற்கு அனுப்பப்பட்டாங்க. பிறகு காலப்போக்கில் அவங்களில் ஒருவர் சொல்லி விட்டார் எங்களை உளவு பார்க்கத்தான் முகுந்தன் தங்களை அனுப்பியதாக.

தேசம்: யார் ஆள் அது…

அசோக்: அந்தத் தோழர் குமரனுக்கு தெரிந்தவர். பெயர் ஞாபகம் இல்லை. குமரனிட்ட எல்லாம் சொல்லிட்டார் உங்களை உளவு பார்க்க தான் தங்களை அனுப்பினது என்று. அப்போ எங்களுக்கு தெரிந்தது நெருக்கடியான கட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று. பிறகு நாங்களாகவே வோட் ஒழுங்கு பண்ணி நாட்டிக்கு போகலாம் என்று சொல்லி இருக்கும் போதுதான் முகுந்தன் boat ஒழுங்கு பண்ணி போறதுக்கு ஏற்பாடு செய்தவர்.

தேசம்: அதற்கு பிறகு நீங்கள் அவர்களை சந்திக்கவில்லையா?

அசோக்: அதன் பிறகு தோழர் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடிச் சந்திரன் யாரையுமே நாங்க சந்திக்க முடியவில்லை. அவர்களும் எங்களை சந்திக்க முயலவில்லை. அதன்பின் பல காலங்களின் பின் நான் இங்கு வந்த பின்தான் தொடர்பு கிடைத்தது.

தேசம்: நீங்கள் அவர்களை கேட்கவில்லையா உங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கு…

அசோக்: இதை பற்றி உரையாடல் நடந்தது. நாட்டிக்கு வரும்படி கேட்டோம். அவர்கள் வெளியேறி அப்படியே தளத்திற்கு வந்திருக்க முடியும். வந்திருந்தால் தளத்தில் இருந்த தோழர்களோடு இணைந்து உட்கட்சிப்போராட்டத்தை நடாத்தி புளொட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடிந்திருக்கும். அதற்கான திறமையும் ஆற்றலும் ரகுமான் ஜான் தோழரிடம் இருந்தது. புளொட்டில் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகவும் ஆற்றல் கொண்டவராக இருந்த ஒரே ஒரு ஆள் என்றால் அது ரகுமான் ஜான் தோழர்தான். ஆனா அவங்க முயற்சிக்கவில்லை.

தேசம்: பொறுங்கோ வாரேன். நீங்கள் சொல்லுற இந்த உரையாடல் மத்திய குழுவில் நடந்ததா மத்திய குழுக்கு வெளியில் நடந்ததா?

அசோக்: வெளியில் நடந்தது. காந்தன் இங்க பிரான்சிக்கு வந்தபோது நான் இந்த கேள்வியை கேட்டேன். ஏன் நீங்கள் எங்களோட தளத்திற்கு வரல. வந்திருந்தால் எப்படியாவது ஒருமாற்றத்தை கொண்டு வந்திருக்கமுடியும் என்று.

தேசம்: காந்தன் என்று சொல்லுறது?

அசோக்: ரகுமான் ஜான் தோழரை. அப்பவே நாங்கள் கேட்டோம் நீங்கள் வாங்கோ எங்களோடு. நாங்கள் போவோம். நாட்டுக்குப் போய் சகல பிரச்சினைகளையும் கதைப்போம். ஏனென்றால் எங்களை நம்பி நிறைய தோழர்கள் முகாமில் இருக்கிறார்கள். தளத்திலும் இருக்கிறார்கள். விட்டுட்டு நாங்கள் வெளியேற இயலாது. ஏனென்றால் நாளைக்கு அவங்களுக்கு ஆபத்து. நாங்கள் சொன்னோம், நாங்கள் போய் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை நடத்துவோம் இங்கேதான் நடத்த முடியாதே.

தேசம்: அதற்கு அவர்களுடைய பதில் எப்படி இருந்தது?

அசோக்: இதை இனி திருத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிரயோசனமில்லை. நீங்கள் போறது என்றால் போங்கள் என்று சொல்லி. உண்மையிலேயே இவங்கள் வந்திருந்தா ஃபைட் பண்ணி இருக்கலாம்.

தேசம்: திருத்துவதற்கு வாய்ப்பில்லை என்றால் இதற்கு முதலும் இதைப்பற்றி கதைக்கவே இல்லை தானே. ஒரே கூட்டத்தில் நீங்கள் திருத்த ஏலாது தானே அமைப்பை.

அசோக்: இதை வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால் எல்லாரிலையும் பிழை இருக்கு. அதை யாரும் உணர்ந்ததாக இல்லை. இயக்கத்தின் அடிப்படை பிரச்சனையே உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் போனதுதான். அதனை நாங்க உறுதியாக நிலை நிறுத்தி இருக்கவேண்டும். அத்தோடு அரசியல் கல்வி மேல்மட்ட தோழர்களுக்கு, நிர்வாகிகளுக்கு இல்லாமை. இது பற்றி முன்னமே கதைத்திருகிறோம்.

புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர்களின் விருப்பங்களில் தன்னிச்சையான போக்குகளினால்தான் கட்டமைப்படுகின்றது. எல்லா அதிகாரங்களையும் முகுந்தன் வைத்துக் கொண்டது. தனிநபர் அதிகாரங்களை நாங்க இல்லாமல் செய்திருக்கவேண்டும். கூட்டுமனநிலை கூட்டுசெயற்பாடுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. கடைசியாக நடந்த அந்த மத்தியகுழு கூட்டத்தில் ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்திக் கொண்டதே மிச்சம். நாங்க முகுந்தன் ஆட்களை குற்றம்சாட்ட அவர்கள் எங்களை குற்றம்சாட்ட எந்தவித நியாங்களும் தீர்வுகளும் இன்றி அந்த கூட்டம் முடிஞ்சி போய் விடடது குறைந்தபட்சம் பரஸ்பரம் சுயபரிசீலனை செய்ய யாரும் தயார் இல்லை நான் உட்பட. இதுல முகுந்தன் உட்பட எல்லாரும் குற்றவாளிகள். புளொட் உடைவில எல்லாருக்கும் பாத்திரம் இருக்கு. புளொட் ஆரோக்கியமான அமைப்பாக கட்டி அமைக்கப்பட வேண்டிய அமைப்பு. ஆரோக்கியமான திசை நோக்கி போகவேண்டிய அமைப்பை இந்த அளவுக்கு பாழ்படுத்தியதற்கு எல்லாருக்கும் பங்கு இருக்கு.

தேசம்: குறிப்பாக நான் நினைக்கிறேன் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் இருந்தவைக்கு பெரும் பொறுப்பு இருக்கு. ஏனென்றால் முகுந்தன் இவ்வளவு அதிகாரத்தோடு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை தானே.

அசோக்: அதிகாரத்தை முகுந்தன் குவித்ததற்குக் காரணம் எங்களுடைய பலவீனம். நாங்கள் மத்திய குழுவில் தவறுகளை சுட்டிக்காட்டி ஆரம்ப காலத்திலேயே ஃபைட் பண்ணி இருந்தால். ஏனென்றால் நீங்களும் முகுந்தனுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மௌனமாக இருக்கிறீர்கள். பிறகு உங்களுக்கு உள்ள முரண்பாடு வரும் போது தான் சிக்கல் வருகிறது.

தேசம்: மற்றது இந்த காலகட்டம் வரைக்கும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படுகொலைகளைப் பற்றி ஏதாவது வைக்கப்பட்டதா?

அசோக்: முன்னர் கதைக்கப்படவில்லை. ஒரு தடவை நான் கதைத்து முகுந்தன் என்னிடம் ஆதாரம் கேட்டு டென்சன் ஆனதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். யாரும் கதைத்ததில்லை. ஆனால் இந்த மத்தியகுழு கூட்டத்தில் கதைக்கபட்டது. கதைத்த எங்களிடம் உறுதியான எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கொலைகள் தொடர்பாக எந்த ஆதாரத்தோடையும் யாரும் கதைக்கவில்லை. எவிடன்ஸ் ஒருத்தருட்டையும் இல்ல. பொதுவாகவே பி கேம்ப் (B – Basic Camp) பில் ரோச்சர் நடக்குது கொலை என்று சொல்லப்பட்டது. அப்போ முகுந்தனுக்கு ஒரு சாதகமாக போயிட்டு. முகுந்தன் எப்பவுமே ஆதாரம் கேட்பார்.

தேசம்: எத்தனை பேரின் பெயர்கள் வைக்கப்பட்டது?

அசோக்: பெயர் எதுவும் சொல்லவில்லை. படுகொலைகள் நடக்குது கேம்பில் ரோச்சர் நடக்குது என்ற அடிப்படையில்தான் பிரச்சனை விவாதம் நடந்தது. அது ஆரோக்கியமான உரையாடலுக்கான நியாமான சூழலாக இருக்கல்ல. ஒரே டென்சனாகவே இருந்தது.

தேசம்: அப்போ அதுவும் ஒரு வதந்தியாக தான் வைக்கப்பட்டது.

அசோக்: வதந்தியாக தான் கதைக்கபட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார்.

தேசம்: அப்போ ஆதாரங்கள் ஒன்றும் இருக்கல.

அசோக்: ஆதாரங்கள் ஒன்றுமில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் கொல்லப்பட்டவர்களது பெயர்கள் ஏதாவது பேசப்பட்டதா?

அசோக்: பிற்காலத்தில் நிறைய பெயர்கள் வந்திருக்கு. குறைந்தது 25 பெயராவது வெளியில வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயர்களை ஞாபகம் இல்லை. ஆனால் தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள். டார்ச்சர், படுகொலைகள் பின் தளத்தில் நடந்திருக்கு அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேசம்: எப்ப இருந்து எப்ப வரைக்கும்?

அசோக்: 84இல் இருந்து 85 வரைக்கும் நடந்திருக்கு.

தேசம்: 84 முடிவு பகுதியில் இருந்தா?

அசோக்: B camp போட்டதிலிருந்து. B camp என்றால் basic camp. அந்த கேம்பில தான் சித்திரவதைகள் , கொலைகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. காலங்களை சரியாக சொல்லமுடியாதுள்ளது.

தேசம்: நானறிந்த வரைக்கும் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் புளொட்டில் ஆட்கள் கதைத்து அளவுக்கு அல்ல ஒரு கொலை என்றாலும் கொலைதான். ஒரு கொலை என்றாலும் அது மனித உரிமை மீறல் தான். ஆனால் வெளியில் கதைக்கப்பட்டது அப்படி என்றால் 20 – 25 பேருக்குள்ள அல்லது ஆகக் கூடியது 50 பேர் வரை கொலைகள் நடந்து இருக்கு என்று. அதற்கான சாட்சியங்களை ஏன் அதை எடுத்தவர்கள் வைக்க இயலாமல் போனது. சாட்சியங்கள் இருக்கலாம் மத்திய குழுவில் நீங்கள் வைத்து தானே இருக்க வேண்டும். மத்திய குழுவில் 20 பேரில் உமா மகேஸ்வரன் சங்கிலி வேற யார் அந்தப் பக்கம் இருந்தார்கள்

அசோக்: மாணிக்கதாசன் போன்ற ஆட்கள்தான். ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பதில் அளிப்பார். இவங்க அவரோடு சேர்ந்து ஆமா போடுவார்கள். மத்தியகுழுவில் நாங்க சமநிலை கொண்டிருந்தம். ஆனால் எங்களிட்ட எந்த அதிகாரமும் பலமும் இல்லைத்தானே. முகுந்தன் நினைத்திருந்தால் அன்றைக்கு எங்களை கொலை செய்திருக்க முடியும். அந்த அளவிற்கு திமிர்த்தனமும் ஆணவமும் அவங்களிடம் இருந்தது. நாங்க வெறும் எண்ணிக்கைதானே ஒழிய எங்களிடம் எந்த பவரும் இல்லை.

தேசம்: மற்றது உங்கட பக்கத்துலயும் …. ட்ரைனிங் எடுத்த ஆட்கள் இருந்திருக்கிறீர்கள். ஆரம்பகால உறுப்பினர்கள் இருந்திருக்கிறீர்கள். அடுத்தது தளம் முழுமையாக உங்கட கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அசோக்: தளத்தின் நிலமை வேறு. பின்தளம் அப்படியல்ல. அதிகாரமும் ஆயுதமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்திகள். பின்தளத்தில் நாங்கள் எல்லோரும்வெறும் நபர்கள்தான். உண்மையில் ரகுமான் ஜான், கேசவன் எல்லாரும் எஙகளோடு தளம் வந்து உட்கட்சிப்போரட்டம் நடாத்தி இருந்தால் முகுந்தன் ஆட்களால் எதுவுமே செய்திருக்க முடியாது. ஆரம்ப காலத்திலேயே இந்த தவறுகளுக்கு எதிராக உட்கட்சிப்போராட்டத்தை இவர்கள் பின்தளத்தில் நடாத்தி இருந்தால், ஃபைட் பண்ணி இருந்தால் அதனுடைய தாக்கம் தளத்திலும் இருந்திருக்கும். தளத்தில் நாங்கள் சப்போர்ட் பண்ணி இருப்போம். முகாமில் தோழர்களும் சப்போர்ட் பண்ணி இருப்பாங்க. இவர்கள் யாரும் ஃபைட் பண்ணவில்லை. நான் கலந்து கொண்ட மத்திய குழு அதாவது 84 ஜனவரியிலிருந்து இவங்கள் வெளியேறும் வரைக்கும் மத்திய குழுக் கூட்டங்கள் எதிலேயும் வந்து உட் கொலைகள், இயக்க பிரச்சனைகள் தொடர்பாக கேட்டு ஃபைட் பண்ணினது இல்லை. வெளியேற்றத்திற்கு அன்றைக்கு நடந்த ஃபைட் தான் கடைசியும் முதலுமான பைட்.

தேசம் : நீங்கள் ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது அதை ஆதாரபூர்வமாக வைக்க வேண்டும். அந்த குற்றச்சாட்டை மக்கள் முன்னிலையிலும் கொண்டுபோய் இருக்கலாம் தானே. மக்கள் அமைப்பு தானே. மற்றது தளம் முழுதாக உங்களுக்கு விசுவாசமாக இருக்கிற அல்லது உங்கட பக்கம் நிக்குது. அப்படி இல்லா விட்டாலும் அதை உங்கட பக்கம் எடுத்திருக்க வேண்டும்.

அசோக்: இப்ப யோசித்தால் நாங்கள் ஆதாரபூர்வமாக நாங்கள் முதலில் ஃபைட் பண்ணி இருந்தால் புளொட்டை சரியான திசைவழியில் எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். இல்லாட்டி இவங்கள் எங்களோடு வந்து இருந்தாலும் கூட, குறிப்பிட்ட ஆட்களை வெளியேற்றி போட்டு நாங்களே புளொட் என்று சொல்லி உரிமை கோரி புளொட்டை வழிநடாத்தி இருக்கமுடியும். ஏனென்றால் நாங்கள் கடைசியில் தளத்தில் உட்கட்சிப் போராட்டம் ஒன்று நடத்தி தானே வெளியேறினோம்.

தேசம்: புளொட்டில் உமாமகேஸ்வரனில் குற்றம்சாட்டி வெளியேறின ஆட்களும் கறைபடிந்த கைகள் தான். நான் உங்களை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை. கண்ணாடி சந்திரன் சில கொலைகளுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்தக் கொலைகளை மேற்கொண்ட மல்லாவி சந்திரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுல என்ன தார்மீகம் இருக்கு எவ்வாறானதொரு நியாயம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அசோக்: விமர்சனத்திற்கு உரிய விடயம் தான். நிறைய தோழர்களுடன் கதைக்க வேண்டும். சந்ததியார் இறந்துட்டார். கேசவன் இறந்துட்டார். இப்ப இருக்கிறது நான், முரளி தோழர் இருக்கிறார். குமரன் இறந்துட்டார். மத்திய குழுவில் இருந்த சரோஜினி இருக்கிறார். கண்ணாடி சந்திரன் இருக்கிறார். ரகுமான் ஜான் இருக்கிறார். அடுத்தது பாபுஜி, ராஜன் இருக்கிறார்கள். இவர்கள் கதைக்க வேணும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக. உண்மைகளை கதைக்க வேண்டும்.

தேசம்: இது ஒரு சில நபர்கள் சம்பந்தப்பட்டது இல்லை. கிட்டத்தட்ட மிகப் பெரிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய அமைப்பு. சில நூறு, சில ஆயிரம் உறுப்பினர்கள். இவர்களுடைய செயற்பாடுகளால் அல்லது இவர்களுடைய முடிவுகளால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவ்வளவு தூரம் பொறுப்பு கூறாமல் போக இயலாது.

அசோக்: சரியான திசையை நோக்கி போயிருந்தால் பிற்காலத்தில் புளொட். இடதுசாரி இயக்கம் என்ற ஒன்றிக்கு முன்மாதிரியாக இருந்திருக்க முடியும். அது இல்லாமல் போய்விட்டது.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த பிரிவுக்கு பிறகு அங்க பெருசா செய்ய ஒன்றுமில்லை. பிறகு எப்போ சந்ததியார் மத்திய குழுவுக்கு வராமல் விடுகிறார். பிறகு கடத்தப்பட்டதாக சொல்லப்படுது.

அசோக்: நான் நினைக்கிறேன் 85 செப்டம்பரில் கடத்தப்படுகிறார். சரியாக ஞாபகம் இல்லை.

தேசம்: கடத்தப்பட்ட சில நாட்களிலேயே ….

அசோக்: ஓம். கடத்தப்பட்ட சில நாட்களிலேயே கொல்லப்படுகிறார். அதுக்குப் பிறகு ஒரு மத்திய குழுக் கூட்டம் நடக்கிறது.

தேசம்: சந்ததியார் கொல்லப்பட்டதற்கு பிறகு…

அசோக்: ஆம். அந்த மத்திய குழுக் கூட்டம் எப்படி என்றால் நாங்கள் நாட்டில் போய் தள மாநாடு நடத்தி, அதில் தீர்மானங்கள் எடுத்து பின் தளத்தில் பிரச்சனைகளை கதைப்பதற்கான தள கமிட்டி தெரிவு செய்யப்பட்டு அந்த தோழர்களோடு பின்தளம் வந்த பின் நடந்த மத்திய குழு கூட்டம் அது .

தேசம்: அதைப்பற்றி பிறகு கதைப்போம்.

அசோக்: அதுதான் இறுதியாக நாங்கள் கலந்து கொண்ட கூட்டம்.

(படங்கள்: சீலனின் தொடரில் இருந்து.)

பாகம் 17: புளொட் கட்டுப்பாட்டுக்குழுவினுள் முளைவிட்ட குழுவாதமும் அதிகாரத்தின் மீதான மோகமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 17 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 17

தேசம்: உமா மகேஸ்வரன் வந்ததை ஒட்டித்தான் இந்த சுழிபுரம் மாணவர் படுகொலைகள் நடந்தது. உமாமகேஸ்வரன் என்ன காரணத்துக்காக திடீரென இந்த தளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என தெரியுமா?

அசோக்: பின் தளத்துக்கு நிறைய தோழர்கள் போகமுடியாத சூழல் இருந்தபடியால், எல்லா அமைப்புகளையும் சந்தித்து ஒரு சுமுகமான உரையாடல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த சந்திப்புக்களுக்கும், உரையாடலுக்குமாகத்தான் வந்தாரா என்பது சந்தேகம்தான்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ஏனைய இயக்கத் தலைவர்கள் யாரும் தளத்தில் இருக்கேல.

அசோக்: யாருமே வரவே இல்லை.

தேசம்: உமாமகேஸ்வரன் தான் முதன்முதலில் வாரார்.

அசோக்: முக்கியமான தலைவர் உமாமகேஸ்வரன் தான் வருகின்றார். உமா மகேஸ்வரன் இப்படி ரிஸ்க் எடுத்து இப்படியான உரையாடலுக்கு வந்து இருப்பாரா என்பதில் சந்தேகம் இருந்தது. பிறகுதான் கேள்விப்பட்டோம், கிளிநொச்சி வங்கிக் கொள்ளை நகை தொடர்பாகத்தான் தளம் வந்தவர் என்று. நகைகள் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டதாகவும், அது உமா மகேஸ்வரனுக்கு மட்டும்தான் தெரியும் என்றும், அதை எடுக்கத்தான் உமாமகேஸ்வரன் வந்ததாகவும் அறிய முடிந்தது.

தேசம்: ஆனால் அதை அவர் வேறு யாரிடமும் சொல்லியும் எடுத்திருக்கலாம் தானே…

அசோக்: இவருக்கு தானே தெரியும், இவர் புதைத்த இடம்…

தேசம்: இந்த விஜயத்தின் போது உமா மகேஸ்வரனை நீங்களும் சந்தித்து இருக்கிறீர்கள். உங்களுடைய உரையாடல்கள் எப்படி இருந்தது ?

அசோக்: முகுந்தன் தளம் வந்த காலகட்டம் ஒரு முக்கியமான காலம் . புளொட் வட கிழக்கில் மக்கள் மத்தியில் தீவிரமாக மக்கள் அமைப்புக்களை, தொழில் முறைசார்ந்த பல்வேறு தொழிற் சங்கங்களை, மாணவர் அமைப்புக்களை, பெண்கள் அமைப்புக்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பெருநம்பிக்கைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த நேரத்தில் முகுந்தனின் வருகை நம்பிக்கையை எங்களுக்கு தந்தது. நானும் கேசவனும் இரண்டு தடவை சந்திருப்போம் என நினைக்கிறன். சந்தித்து இங்க இருந்த நிர்வாகங்கள், நிர்வாக சிக்கல்கள் எப்படி போகுது என்று ஒரு நிர்வாக உரையாடலாக தான் இருந்தது.

நிறைய பேர் சந்தித்தவர்கள். மக்கள் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்பு க்களை ச் சேர்ந்த தோழர்கள் ஆழமான அரசியல் கருத்துக்களை உரையாடி இருக்கிறார்கள். சந்தேகங்கள் முரண்பாடுகள் பல்வேறு உரையாடல்கள் எல்லாம் நடந்திருக்கு. முகுந்தன் இவ்வாறான ஒரு தளத்தை எதிர்பார்க்கவில்லை. முகுந்தனின தள வருகை தந்த நம்பிக்கையை பிறகு சுழிபுரம் படுகொலைகள் இல்லாமல் செய்து விட்டது. உண்மையில் அதன் பின் நாங்கள் எல்லாம் கடுமையாக மன ரீதியாக பாதிக்கப்பட்டோம். மிக சோர்வும், எங்கள் நம்பிக்கைகள் மீது சந்தேகம் வரத் தொடங்கிய காலம் என்று அதை சொல்லலாம்.

தேசம்: ஃப்ரெண்ட்லியா இருந்ததா அல்லது முரண்பாடா…

அசோக்: நோர்மலா இந்த உரையாடல்கள் பிரெண்ட்லியாகத்தான் இருந்தது. பெருசா அதுக்குள்ள கருத்து முரண்பாடு வரேல்ல.

நாங்கள் எல்லா பேரும் சந்தித்த பிறகு தான் இந்த படுகொலை நடக்கிறது.

தேசம்: இது எத்தனையாவது சந்திப்பு உமாமகேஸ்வரனுடன் உங்களுக்கு நேரடியாக சந்தித்தது?

அசோக்: இந்த சந்திப்புக்கு முதல் இரண்டு மூன்று தரம் சென்றல் கமிட்டி மீட்டிங் கில் சந்தித்திருக்கிறன்.

தேசம்: இந்த மூன்று நான்கு சந்திப்பையும் வைத்துக்கொண்டு உமா மகேஸ்வரனை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்திருந்தீர்கள்?

அசோக்: உமாமகேஸ்வரனுடன் நீங்கள் கதைக்கலாம். உமா மகேஸ்வரன் உரையாடலுக்கான ஒருவர். எதுவும் கதைக்கலாம் நீங்கள்.

தேசம்: முரண்படுறதுலயும் பிரச்சினை இல்லை.

அசோக்: ஆரம்ப காலங்களில் பெரிதாக முரண்பாடுகள் வந்ததாக நான் காண வில்லை. முரண்பாடுகள் , பிரச்சனைகள் பற்றி யாரும் கதைப்பதில்லைத்தானே. உண்மையில் முகுந்தன் அரசியல்வாதியாக மாற வேண்டிய ஒரு ஆள். ஒரு தேர்ந்த அரசியல்வாதிக்குரிய எல்லா இயல்புகளும் கொண்ட ஒரு மனுசன். எந்த ரொபிக்கிலயும் கதைக்கலாம் நீங்கள். அவர் மார்க்சிஸ்ட் இல்லாட்டியும், மார்க்சிஸ்ட் மாதிரியா மற்றவர்களை நம்பவைக்கக்கூடிய ஒருத்தர். மாக்சிசம் கதைப்பார். பெண்ணியம் கதைப்பார். பெரியாரியம் கதைப்பார். எல்லாம் கதைக்கக் கூடிய ஒரு ஆள். ஆனால் ஆழமான அரசியல் சித்தாந்த புரிதல் அவரிடம் இல்லை. ஒரு மேடைப் பேச்சுக்குரிய கதாபிரசங்கித்தனம் அவரிடம் இருந்தது. முகுந்தனை சரியான தலைமைக்குரியவராக வளர்த்தெடுக்க கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த தோழர்கள் தவறிட்டாங்க. முகுந்தன் முற்போக்கான இயக்கம் ஒன்றிக்கு தலைமை தாங்கக் கூடிய நபர் அல்ல.

ஒரு காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் புளொட்டுக்குள்ள 84 வரையும் கட்டுப்பாட்டு குழு தான் பெரிய அதிகார மையமாக இருந்தது. அது முகுந்தன், சந்ததியார், கண்ணன், ரகுமான் ஜான், சலீம்.

அந்த அதிகாரத்தில் ஒரு ஒரு அங்கமாகத்தான் உமா மகேஸ்வரன் இருந்தாரே ஒழிய, உமாமகேஸ்வரன் பெரிய அதிகாரம் மிக்கவராக இருக்கல. எப்ப உமாமகேஸ்வரன் தனியானதொரு அதிகார மையமாக வாரார் என்றால் இவர்களுக்குள் முரண்பாட்டுக்கு பிற்பாடுதான்.

தேசம்: உமா மகேஸ்வரனை வென்றெடுக்க மற்ற மூன்று உறுப்பினர்களும் பிற்காலத்தில் தீப்பொறியில் போன அந்த மூன்று உறுப்பினர்களும் ஏதாவது முயற்சி எடுத்திருந்தார்களா… ?

அசோக்: வரலாற்றை பின் நோக்கி பார்த்தோமென்றால், கட்டுப்பாட்டுக் குழு, அரசியல் கல்வி என்பது ஒரு அமைப்பின் தலைமை வழிகாட்டிகளுக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. மத்திய குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மார்ச்சிய அரசியல் சித்தாந்தம், புளொட்டின் அரசியல் தளம், அதன் கோட்பாடு, நடை முறை பற்றிய வகுப்புக்களை தெளிவை ஏற்படுத்தி இருக்கவேண்டும். இவை எதுவுமே இல்லை. மத்திய குழுவில் இருந்த பலருக்கு அடிப்படை அரசியல் அறிவு கூட கிடையாது.

உண்மையிலேயே பார்க்கப்போனால், சொல்லுறம் தானே பிற்காலத்தில் உமாமகேஸ்வரன் ஒரு அதிகார மையமாக படுகொலைகளுக்கு உடந்தையாக போனார் என்று. அதற்கான காரணங்களை நாங்கள் முதலே தடுத்திருக்கலாம். ஏனென்றால் நாங்கள் தானே அந்த அதிகார மையமாக இருந்தம்.

எல்லாத் தவறுகளுக்கும் காரணமாகவும் உடந்தையாகவும் இருந்து விட்டு கடைசியில் தனி நபர் முகுந்தன் மீது நாங்க எப்படி குற்றம் சுமத்த முடியும். எனக்குபுரியல்ல. கட்டுப்பாட்டு குழுவில் பார்த்தீர்கள் என்றால் முகுந்தனும் கண்ணனும் தான் பழைய புலிகளின் அரசியல் கொண்டவர்கள். ஆனல் மற்றவர்கள் அப்படி இல்லையே; கண்ணன் கூட…

தேசம்: கண்ணன் என்பது …

அசோக்: யோதீஸ்வரன்.

தேசம்: அவரும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் இருந்து வந்தவரா?

அசோக்: இடதுசாரி பாரம்பரியம். ஆனால் கொஞ்சம் முகுந்தனின் விசுவாசி. கண்ணனின் அரசியல் முகுந்தனோடு உடன் பட்டதல்ல. கண்ணன் தளத்தில் நின்ற சமயம் நான் நிறைய நேரம் கண்ணனோடு உரையாடி இருக்கிறன். இடதுசாரிய அரசியல் ஆர்வம் கொண்டவர். இதை விட முக்கியம் கற்றுக் கொள்ள அறிந்து கொள்ள, உரையாடக் கூடிய மனநிலை அவரிடம் இருந்தது. நியாயமாக உரையாடக்கூடிய ஒரு ஆள். அப்ப கட்டுப்பாட்டு குழுவில் இருந்தது சந்ததியார், ரகுமான் ஜான், சலீம், உமா மகேஸ்வரன், யோதீஸ்வரன் கண்ணன் இவங்க தான். இவங்க நினைத்திருந்தால் இயக்கத்தை சரியான திசை வழி நோக்கி கொண்டு போய்இருக்கமுடியும். முகுந்தனை கட்டுபடுத்தி இருக்கமுடியும்.

தேசம்: மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக இவர்கள் இருந்துள்ளார்கள்…

அசோக்: உண்மைதான். ஆனால் இதனால் எந்த பிரயோசனமும் இல்லை, எந்த மாற்றங்களையும் இவர்கள் ஏற்படுத்தவில்லை. பல பிரச்சனைகளை தீர்த்து இருக்கலாம். ஆனால் இது பற்றிய எந்த அக்கறையும் இருகல்ல. அமைப்பின் அரசியல் முன்னேற்றத்தை விட நாங்க ஒவ்வொருவரும் எங்களின் தனிப்பட்ட நலன் சார்ந்த அதிகாரம் சார்ந்த விடயங்களில்தான் கவனம் செலுத்தினம். எங்கட அதிகார நலன்களினால்தானே முகுந்தன், சந்ததியார் முரண்பாடு உருவாகிறது. குழுவாதம் ஆரம்பமாகிறது. இப்ப பார்க்கப் போனால் அதிகாரப் போட்டியாகத் தான் பார்க்கிறேன் அதை. அதிகார போட்டியின் நிமித்தமாக உருவான முரண்பாடுதான் இதை இரண்டு குழுக்களாக உருவாக்குது. சந்ததியார் குழுவாகவும் முகுந்தன் குழுவாகவும். இடையில அகப்பட்டது தளத்தில் இருந்த நாங்கள்தான். நாங்க சந்ததியாரும் இல்லை முகுந்தனும் இல்லை.

தேசம்: நீங்கள் மட்டும் இல்லை இந்த அமைப்பை நம்பி சேர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகளும் தான்

அசோக்: உண்மைதான். உதாரணமாக எனக்குத் தெரியும் தோழர் கேசவனுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. உண்மையில் அந்த அரசியல் தகமை கேசவனுக்கு இருந்தது. வாசுதேவா அரசியல் துறை பொறுப்பாளருக்கு தகுதி அற்றவர். ஆனால் அதை முகுந்தன் வாசுதேவாவுக்குக்கு கொடுத்து விட்டார். கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தவர்கள் இந்த நியமனத்தை தடுத்து இருக்கவேண்டும். ஆனால் இவங்க வாயே திறக்கல்ல.

தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சி முடித்து வரும் போது அவருக்கு இராணுவதுறைச் செயலர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிரபார்ப்பு பலரிடம் இருந்தது. இதற்கு முழு தகமையும் கொண்டவர் அவர். அவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது, தொடர்ந்து இராணுவப் பொறுப்பாளாராக கண்ணனே இருக்கிறார். மாற்றங்கள் நடந்திருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக மனநிலையை, பண்பை உட் கட்சி ஜனநாயகத்தை நாங்க தலைமை மட்டத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும். முகுந்தனின் தன்னிச்சையான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்க என்ன செய்தம். முகுந்தன் சர்வாதிகாரியாக வளர்வதற்கு நாம் ஆரம்பத்தில் துணை போனோம். முகுந்தன் பயன்படுத்திக் கொண்டார்.

அடுத்தது குழுவாதம் இருக்குதானே, இரண்டு சமனான நபர்கள் இருக்கும் போது அவங்களுக்குள் புரிந்துணர்வு இல்லையென்றால் இயல்பாகவே குழு வாதங்கள் உருவாகும். அவங்களுக்குள்ள ஆரோக்கியமான தலைமைத்துவ ஜனநாயக பண்பு இல்லை என்று சொன்னால் குழு வாதம் உருவாகும். அது இயல்பாகவே உருவாகிவிட்டது. முகுந்தன் – சந்ததியார் என்ற முரண்பாட்டு உருவாக்கம் வந்தவுடனே அவர்களைச் சுற்றி குழுக்கள் உருவாகும் போது, முரண்பாடுகளும், பகைகளும் உருவாகும். அது வளரும். இது இயல்வுதானே.

தேசம்: இந்த அதிகாரத்துக்கான போட்டிதான் இந்தப் பிரிவினையை கொண்டு வருதேயொழிய ஒரு ஜனநாயக கோரலா இருக்கல என்று நினைக்கிறீர்கள்.

அசோக்: புளொட்டுக்குள்ள பின் தளத்தில் உயர் மட்டங்களில் உட்கட்சி ஜனநாயகம், தோழமை என்றதே இருக்கல எப்பவும். பதவிகளை அரசியல் ஆளுமை, தகமை, தேர்ச்சி கொண்டவர்களுக்கு வழங்கும் நிலை இருந்ததே இல்லை. இவ்வாறான அரசியல் கலாச்சார அடித்தளத்தை ஆரம்பத்திலேயே உருவாக்க நாங்க தவறிவிட்டோம்.

தேசம்: பிரிய வெளிக்கிட்டவர்களுக்கு கூட அந்த ஜனநாயகம் இருக்கேல என்று சொல்லுறீங்களா?

அசோக்: ஜனநாயக மத்தியத்துவம் இருந்தால், நீங்கள் எப்படி தன்னிச்சையான மத்திய குழுவை உருவாக்க இயலும். ஆரம்பத்தில். குறைந்தபட்சம் ஜனநாயக ரீதியிலான மத்திய குழுவை உருவாக்கி இருந்ததால், தளத்தில் நிறைய தோழர்கள் வேலை செய்தவர்கள்.

அவர்களை உள்வாங்கி இருக்க வேண்டும். இந்த மத்தியகுழு உருவாக்கம் பற்றி முன்னரே கதைத்திருக்கிறம். சிறையில் இருந்து வந்த ஆட்களையும், உங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும்தானே தானே நீங்கள் மத்திய குழுவுக்கு எடுத்தனீங்கள். அரசியல் ரீதியாக எந்த வளர்ச்சியும் இல்லாத இராணுவக் கண்ணோட்டம் உள்ள பல்வேறு பிரச்சனைகளால் சிறைக்குப் போன ஆட்கள் சிறை உடைப்பின் பின்னர் வாறாங்கள்.

மத்திய குழு உருவாக்கும் போது அரசியல் ரீதியாக வளர்ந்த ரகுமான்ஜான், சந்ததியர், கேசவன் ,சலீம், பார்த்தன் இவங்களெல்லாம் அரசியல் ரீதியாக மார்க்சிய ஐடியாலஜி கொண்ட தோழர்கள்… இவங்கள் மறுத்திருக்க வேண்டும், இவ்வாறானவர்களை கொண்டு வரக்கூடாது என்று சொல்லி. ஆரோக்கியமான ஒரு மத்திய குழுவை உருவாக்கி இருக்க வேண்டும் இவர்கள். ஆனால் என்ன நடந்தது, இவர்களும் சேர்ந்து தங்கள் தங்களுக்குரிய வேண்டியவர்களை நியமித்து ஆரம்பத்திலேயே குழு வாத மனநிலையை உருவாக்கி விட்டாங்க. பிறகு எப்படி இவங்களிட்ட ஜனநாயக பண்புகள் இருக்கமுடியும்.

தேசம்: மற்றது ஒன்று சொல்லுவார்கள் புளொட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் சுழிபுரம் தான் என்று. அப்படி பாக்கேட்க சந்ததியார், சுந்தரத்தால் கொண்டுவரப்பட்டவர்கள்தான் பெரும்பாலான புளொட் உறுப்பினர்கள். அவர்களை எப்படி உமாமகேஸ்வரன் வென்றெடுக்கக் கூடியதாக இருந்தது… ?

அசோக்: உமாமகேஸ்வரன் ஒரு அரசியல் சாணக்கியன். சந்ததியார் என்ன செய்வார் என்று கேட்டால் எல்லாவற்றிலும் கட்டுப்பாடாக இருப்பார், ஒழுங்கை எதிர்பார்ப்பார். பல விடயங்களில் கடுமையானவர். குறிப்பாக பண விடயங்களில் சிக்கனமாக, எளிமையாக வாழ வேண்டும் என்ற நியாயமான கொள்கை கொண்டவர்.

ஒரு காலகட்டத்தில் பார்த்தீர்களென்றால், படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சந்ததியாருக்கு எதிராக மாறின தோழர்கள் எல்லோரும், சுழிபுர தோழர்கள் தான். முழுப்பேரும் சந்ததியாரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்தான். சந்ததியாருடைய உறவினர்களும் கூட. முரண்பாடுகள் எப்படி ஏற்படுகிறதென்றால், சந்ததியார் சிக்கனமும் எளிமையும் வேண்டும் என நினைப்பவர். இதில் கடுமையாக இருப்பார். கணக்கு வழக்குகள் எல்லாம் பாப்பார். ஆனால் பின் தளத்தில் இருந்த பலரும் இதற்கு எதிர்மாறானவர்கள்.

சங்கிலியன் தலைமையில் இருந்த உளவுப்பிரிவு எந்த அரசியலும் அற்ற வெறும் வன்முறை மனநிலை கொண்ட கூட்டம். இவங்களின்ற செலவுகள் எதற்கும் வரையறை கணக்கு வழக்கு எதுவும் இல்லை. தன்னிச்சையான போக்கு. உண்மையிலேயே புளொட்டின் உளவுத்துறைக்கு எக்கச்சக்கமான பணம் செலவழிக்க பட்டிருக்கு. எதற்கும் கணக்கு வழக்கு இல்லை. கந்தசாமி தலைமையிலான உளவுத்துறை என்ன செய்கிறதென்றே யாருக்கும் தெரியாது. ஒரு அரசியல் இராணுவ இயக்கத்தின் உளவுத்துறை என்பது எப்படியான கட்டமைப்பு கொண்டு இருக்க வேண்டுமோ, அதற்கு எதிர்மாறாகத்தான் புளொட்டின் உளவுத்துறை இருந்தது.

அரசியல் அற்ற வெறும் சண்டியர்கள் கூட்டம் அது. இது தோழர் சந்ததியாருக்கு பிடிப்பதே இல்லை. இந்த முரண்பாட்டை முகுந்தன் சாணக்கியமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். இவங்களுக்கு பணம், பூரண சுதந்திரம், அதிகாரம், ஆசிர்வாதம் எல்லாம் முகுந்தன் பக்கத்திலிருந்து தாராளமாக கிடைத்தது. அப்ப என்ன நடக்கும். சந்ததியாரோடு முரண்பாடு பகை வரும். குழுவாதம் உருவாகும். முகுந்தன் விசுவாசம் உருவாகும். இதுதான் நடந்தது. முகுந்தன் விசுவாசி என்றால் யாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. இந்தப் போக்கை முகுந்தன் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். விசுவாசிகளும் நன்றாக பயன்படுத்தினாங்க. இது உளவுத் துறையில் மாத்திரம் அல்ல, எல்லா மட்டங்களிலும் இருந்தது. புளொட்டில் பின் தளத்தில் எதற்கும் எந்தவித கணக்கு வழக்கும் இல்லை. முகுந்தன் விசுவாசியாக இருந்தால் எந்த கணக்கு வழக்கும் காட்டத்தேவையில்லை என்ற நிலைதான் இருந்தது.

தேசம்: உளவுத்துறையை உருவாக்கினது யார் ?

அசோக்: உளவுத்துறையை உருவாக்கியது கட்டுப்பாட்டுக் குழுதான். மத்திய குழுவுக்கும் அதற்கும் தொடர்பில்லை. உளவுத்துறை உமா மகேஸ்வரனுக்கு கீழ தான் இருந்தது. ஆரம்ப காலத்தில் உறவு துறை வந்து விட்டது. இந்தக் கட்டுப்பாட்டு குழு என்ன செய்திருக்க வேண்டும் ஆரோக்கியமான உளவுத்துறையை உளவுத்துறைக்கான தேர்ச்சி அறிவு கொண்டவர்களை கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். தங்களுடைய கட்டுப்பாட்டிக்குள் வைத்திருக்க வேண்டும். புளொட் உளவுத்துறைக்கு தெரிந்த விடயம் கொலை செய்யவும், சித்திரவதை செய்யவும்தானே.

ஒரு தடவை தளத்தில் இருந்து மத்திய குழுகூட்டத்திற்கு போன நான், கேசவன், முரளி, ஈஸ்வரன் அப்ப குமரனும் வந்திருந்தவர். எங்களிடம் சந்ததியார் இந்த பிரச்சனைகளை பற்றி சொல்லி, புளாட்டின் கணக்கு வழக்கு, வரவு செலவு பற்றிய விபரங்களை மத்திய குழுவில் எங்களை கேட்கும்படி சொன்னார். எனென்றால், தளத்தில் எங்களிடம் ஒழுங்கான வரவு செலவு அறிக்கை இருந்தது. பின் தளத்தில் அது இல்லை. தளத்தில் நாங்கள் கணக்கு வழக்கு எல்லாம் ஒழுங்காக வைத்திருக்கிறோம். நீங்க கேளுங்க என்று சொன்னார். அப்ப மத்திய குழுக் கூட்டம் நடக்கேக்கை நாங்க கேட்க எண்ணி இருந்தம். தோழர் குமரன் கேட்பதாக சொன்னார்.

தேசம்: இது எத்தனையாவது மத்திய குழுக் கூட்டம்?

அசோக்: இது 84 நடுவுக்க இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தேசம்: அப்ப இது ஒரு நாலாவது ஐந்தாவது மத்திய குழுக் கூட்டம் ஆக இருந்திருக்கலாம்.

அசோக்: அனேகமாக மூன்றாவது கூட்டமாக இருக்கலாம். நிர்வாகம் எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டதுக்கு பிறகுதான் இது வருது. தளத்தில் கணக்கு வழக்கு எல்லாம் ஒழுங்காக வைத்திருக்கிறோம். அப்ப மத்திய குழு கூட்டத்தில் குமரன் கேட்பார் என்று பார்க்க குமரன் கேட்கேல.

தேசம்: இது உமாமகேஸ்வரன் தளம் வந்துட்டு போனதற்கு முதலா? பிற்பாடா இந்த கூட்டம் நடக்குது.

அசோக்: அதுக்கு முதல் நடந்தது. கடைசியில் நான்தான் கேட்டேன். அப்ப உடனே முகுந்தன் சொன்னார் மணியம் நாங்கள், மணியம் என்றால் சந்ததியார். மணியம் நாங்கள் கட்டுப்பாட்டு குழுவில் இதை தீர்மானித்து போட்டு, மத்திய குழுவுக்கு அறிவிப்பம் என்று. அப்ப நான் சொன்னேன் மத்தியகுழுவில் இங்க அதைப்பற்றி இப்ப கதைக்கலாம்தானே என்று. உடனே முகுந்தன் கட்டுப்பாட்டுக்குழுவில்தான் இதுபற்றி முதலில் கதைக்க வேண்டும். என்ன மணியம் என்றார். உடனே சந்ததியார் சொன்னார் ஓமோம் அப்படி செய்யலாம் என்று. ஆனால் கேட்கச் சொன்னதே இவர்தான். அதோட கதை முடிந்து விட்டது. இந்த கணக்கு வழக்கு பற்றி சொஞ்சமாவது அன்றைக்கு உரையாடி இருக்வேண்டும். உரையாடி இருந்தால் சில தீர்மானங்களை கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்க முடியும்.

தேசம்: சந்ததியார் அப்படி செய்யல்ல.

அசோக்: ஓம். அப்ப என்ன சொல்லி இருக்க வேண்டும் அவர். இல்லை இல்லை மத்திய குழுவிலேயே கதைப்போம் என்று சொல்லி இருக்க வேண்டும். பிறகு அந்தக் கதை அதோடயே போயிட்டுது. அப்ப என்ன பிரச்சினை என்று கேட்டால் ஸ்ட்ராங்கா ஃபைட் பண்ணக்கூடிய நபரா சந்ததியார் இருக்கல. சந்ததியார் என்ன செய்தவர் என்று கேட்டாள், நீங்க கேளுங்க, அவங்க கேளுங்க என்று சொல்வார். அவங்க ஓமோம் என்று சொல்லி விட்டு முகுந்தனிடம் இவர் சொன்னதை முரண்பாடாக்கி சொல்லி விடுவார்கள். முரண்பாடுகளைத் தூண்டி விடுவார்கள். சந்ததியார் ஆளுமையான அரசியல் தளம் ஒன்றை பின் தளத்தில் உருவாக்கி இருக்க முடியும். அதற்கான காலம் ஆரம்பத்தில் இருந்தது. அவருக்கு பின்னால ஒரு உறுதியான அரசியல் அணியை திரட்டி இருக்கலாம். அது அவரால் முடியாமல் போய் விட்டது. முகுந்தனின் தன்னிச்சையான போக்குகளும் அதிகாரமும் உச்ச நிலையை அடைந்த பின் கடைசி காலங்களில் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.

தேசம்: அவரை நம்பி போவதற்கான சூழல் இருக்கல.

அசோக்: அந்த நேரம் முகுந்தனின் அதிகாரம் எல்லா இடங்களிலும் நிலைபெற்றுவிட்டது. சந்ததியார் அதை எதிர்க்க கூடிய உறுதியுள்ளவராக இருக்கல்ல. காலம் கடந்துவிட்டது. அவருடைய சுழிபுரத் தோழர்களை ஒழுங்காக அரசியல்மயப்படுத்தி ஜனநாயக பண்பு கொண்ட மனிதர்களாக, அதிகாரங்களுக்கு எதிரானவங்களாக வளர்த்தெடுத்து இருந்தாலே, புளாட் இந்த அழிவை சந்தித்திருக்க முடியாது. சந்ததியாருடைய மிக விசுவாசிகள் தானே முகுந்தன் பக்கம் போனது. அவர் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும், சிநேக பூர்வமாகவும் கையாண்டிருந்தால் குழுவாதத்தை தவிர்த்திருக்க முடியும். முகுந்தனின் அதிகாரத்தை இல்லாமல் செய்திருக்க முடியும்.

முகுந்தன் என்ன செய்தார் என்றால் தவறான நபர்களுக்கு மிகவும் தாராளவாதத்தை, அதிகாரத்தை கொடுத்தார். உண்மையில் புளொட்டின் அழிவு என்பது முகுந்தனோடு எங்களையும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி பார்க்க வேண்டிய ஒன்று.

தேசம்: உங்களுடைய கருத்துப்படி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரகடனப்படுத்தப்பட்டு 84 டிசம்பர் காலப்பகுதி வரைக்கும் உட் படுகொலைகள் என்று சொல்லுமளவுக்கு எதுவும் நடக்கலை

அசோக்: அப்படி சொல்ல முடியாது. இது பற்றிமுன்னமே கதைத்திருக்கிறம். உட் படுகொலைகள் தொடர்பாக சந்தேகம் வந்திருக்கு. உள்ளுக்குள்ள கொலைகள் நடக்குது என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக கதைகள் வர தொடங்கிட்டுது 84 க்கு பிற்பாடு.

தேசம்: 84 டிசம்பருக்கு முதலா? பிறகா?

அசோக்: 84 கடைசியில் இந்தக் கதைகள் வந்துவிட்டது. எங்களை நோக்கி இந்தக் கேள்விகள் வர தொடங்கிவிட்டது.

தேசம்: குறிப்பாக அப்படி யாருடைய படுகொலைகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

அசோக்: கொலைகள் நடக்குது என்று தெரியுமே ஒழிய விபரங்கள் தெரிநதிருக்கவில்லை.

தேசம்: யார் என்றது அது உண்மையா பொய்யா என்பது தெரியாது உங்களுக்கு…

அசோக்: தெரியாது. கேம்பில் படுகொலைகள் சித்திரவதைகள் நடக்குது என்று சொல்லி கதைகள் எல்லாம் வரத் தொடங்கி இருந்தது. நான் நினைக்கிறேன், ஒரு சென்ட்ரல் கமிட்டி மீட்டிங்க்கு பின்தளம் போன நாங்க பயிற்சி முகாம்களுக்கு போய் இருந்தம். எங்களை சந்தித்த தோழர் ஒருவர் சித்திரவதைகள், கொலைகள் நடப்பதாக தோழர்கள் சந்தேகப்படுவதாக சொல்கிறார். ஆனா எந்த ஆதாரமும் இல்லை. மத்திய குழுவில் இதைக் கேட்க வேண்டும் என்று யோசிக்கிறம். அங்க மத்திய குழு கூட்டத்திற்கு போனா யாருமே கேட்கவில்லை.

தேசம்: இது சம்பந்தமா நீங்கள்…

அசோக்: அப்ப அந்தக் கூட்டத்தில் நான் கேட்கிறேன். முகுந்தன் கோபத்தோடு கேட்டார் எங்க கேள்விப் பட்டீங்க என்று. அப்ப நான் சொன்னேன் தளத்தில் என்று. ஏனென்றால் கேம்பில கேள்விப்பட்ட து என்று சொன்னால் யார் சொன்னது என்று அடுத்த கேள்வி வரும் என்று எனக்கு தெரியும். முகுந்தன் உடனே உணர்ச்சிவசப்பட்டு கடும் கோபத்தில் சொன்னார் ஆதாரம் இல்லாமல் எதுவும் கதைக்கக் கூடாது என்று சொல்லி. எல்லாரும் கப்சிப். யாருமே அந்த கூட்டத்துல கதைக்கேல. அந்தக் கூட்டத்தில் ரகுமான்ஜான் இல்ல. ரகுமான்ஜான் இருந்திருந்தால் கதைத்திருக்ககூடும்.

தேசம்: அந்த கூட்டத்தில் சந்ததியார் இருக்கிறார்.

அசோக்: ஓம். எல்லாரும் இருக்கினம்.

தேசம்: அதற்கு பிறகு நீங்கள் அந்த கேள்விய விட்டுட்டீங்க…

அசோக்: யாருமே சப்போர்ட் பண்ணல. அதனோடு அந்த உரையாடல் முடிந்து விட்டது.

தேசம்: சந்ததியார் உங்களுக்கு காந்தியத்தின் மூலமாகவும் தெரியும் தானே. அவரோட உங்களுக்கு நெருக்கம் இருக்கும் தானே. கூட்டத்துக்கு வெளியிலயும் அவர் இதை பத்தி உங்களோட கதைக்கவில்லையா?

அசோக்: வெளியில கதைப்பார். கூட்டத்தில நாங்கள்தான் முரண்படுவமேயொழிய யாருமே கதைக்க மாட்டாங்க.

தேசம்: இதைப்பற்றி கேட்டிருக்கிறீர்களா சந்ததியாரிட்ட நீங்கள்?

அசோக்: இல்லை இல்லை. தோழர் சந்ததியாரும் சிலவேளைகளில் அதிகாரம் கொண்டவராகவும் நடப்பார். அது எங்களிட்ட மாத்திரம்தான்.

ஒருதடவை அவரோடு முரண்பட வேண்டி வந்தது. தமிழீழ மாணவர் பேரவை டெசோ பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகையை வெளியிட்டது. இதன்ற ஆசிரியராக இருந்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அதன் பொறுப்பு மெட்ராஸில் இருந்தது. மெட்ராஸில் தோழர் கேசவன் பொறுப்பில் இருந்தவர். பேராசிரியர் வித்தியானந்தனின் மருமகன் என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழகத்தை சேர்ந்தவரா சஞ்சிகை ஆசிரியர்…

அசோக்: ஓம். தமிழகத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட தோழர் அவர். ஆனால் அவர் கண்ணதாசனுடைய ரசிகர். ஒரு தடவை பொங்கும் தமிழமுது கண்ணதாசன் சிறப்பிதழாக வெளி வந்தது. அது தளத்துக்கு வந்தது. தளத்துக்கு வந்தவுடனே எங்களுக்கு பெரிய சிக்கலாக இருந்தது. மாக்சிசம் கதைக்கிறம், முற்போக்கு கதைக்கிறம் கண்ணதாசன் சிறப்பிதழ் சஞ்சிகையை எப்படி வினியோகிப்பது என்று. அப்ப டெசோ கமிட்டி கூடி முடிவெடுத்தது, நான் மட்டும் முடிவெடுக்கவில்லை. குருபரன் , தீபநேசன், தனஞ்சயன், ஜப்பார் சிவகுமார், அர்ச்சுனா, மகிழ்ச்சி, தமிழ், தம்பா, சுகந்தன் விமலேஸ்வரன் என்று மிகத்தீவிரமாக இயங்குகின்ற மாணவர் அமைப்பு அது. அரசியல் தத்துவார்த்த ரீதியிலும் அவங்கள் பெரிய வளர்ச்சி. தளத்தில் மாணவர் அமைப்பினை வளர்த்து கட்டி அமைப்பதில் இவர்களின் பங்களிப்புதான் அதிகம். அவங்கள் கூடி முடிவு எடுத்துட்டு சொன்னார்கள் இதை விநியோகிக்க இயலாது என்று சொல்லி. சரி என்று சொல்லி விநியோகம் செய்கிறது இல்லை என்று முடிவெடுத்து அதை முடக்கியாச்சு.

நான் பின்தளம் போனபிறகு சந்ததியார் அதைப் பற்றி விசாரித்தவர். அதை எப்படி நீங்கள் முடக்க முடியும் என்று சொல்லி. கண்ணதாசன் பற்றிய சிறப்பிதழ் என்று என்று சொல்லி அரசியல் சார்ந்து என் உரையாடல் இருக்க, அதை தடுத்து, இல்லை இல்லை நீங்கள் முடிவு பண்ண முடியாது என்று சொல்லி என்னோடு முரண்பாடு.

அதிகாரம் கிடைத்தால் சந்ததியாரும், முகுந்தனும் ஒன்றுதான். அதிகாரம், அதன் கவர்ச்சி மிகமிக ஆபத்தானது. எனக்கும் அதிகாரம் கிடைத்திருந்தால் அந்த நிலைக்கு தான் போய் இருப்பேனோ தெரியாது. ஏனென்றால் அதிகாரம் என்பது ஒரு கொடுமையான போதை. அரசியல் கல்வி சார்ந்து கோட்பாடு சார்ந்து நீங்கள் வளர்க்கப்படாது விட்டால் அதிகாரம் எல்லாரையும் அப்படித்தான் கொண்டு செல்லும்.

தேசம்: நீங்கள் ஒரு தடவை போகேக்க உங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுது என்று சொன்னது அது இந்த மத்திய குழுவுக்கா அல்லது …

அசோக்: அது அதற்குப் பிற்பாடு. அது பாதுகாப்பல்ல. பாதுகாப்பு என்ற பெயரில் எங்களை கண்காணிக்க செய்யப்பட்ட ஏற்பாடு அது.

தேசம்: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 84 டிசம்பர் வரைக்கும் பெரிய பெயர் குறிப்பிட்டு சொல்வது மாதிரியான படுகொலைகள் ஒன்றும் கதைக்கப்படேல.

அசோக்: படுகொலைகள் நடந்திருக்கு..

தேசம்: தெரிய வரேல்ல.

தேசம்: நான் நினைக்கிறேன் 84 இல் தான் மனோ மாஸ்டர் விடுதலைப்புலிகளால் கொல்லப்படுகிறார் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம்

தேசம்: இவ்வாறான குழப்பமான காலகட்டத்தில் 84 காலப்பகுதி முடியுது.

பாகம் 14: மட்டு கச்சேரி துப்பாக்கி கொள்ளையும் – தராக்கி சிவராமின் அரசியல் நுழைவும் – இன்று ஜனநாயகம் பேசுவோரின் கொலைமுகங்களும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 14

தேசம்: தோழர் மட்டக்களப்பு சிறை உடைப்பை பற்றி கதைத்தோம். அதுக்குப்பிறகு அதாவது எண்பத்தி மூன்று செப்டம்பருக்கு பிறகு, மட்டக்களப்பில் செயற்பாடுகள் எப்படி இருந்தது? குறிப்பா உங்கட செயற்பாடுகள்… ?

அசோக்: புளொட் தீவிரமாக இயங்க முடியாமல் போய் விட்டது. நாங்க அதற்குப் பிறகு மிகக் கடுமையாக தேடப்பட்டோம். வாசுதேவா மற்ற முக்கிய தோழர்கள் எல்லாம் சிறை உடைப்பு சம்பந்தப்பட்ட ஆட்களோட அப்படியே யாழ்ப்பாணம் போயிட்டாங்க. கொஞ்சம் பேர் இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மிக மிக மோசமான கெடுபிடி அந்த காலகட்டத்தில். ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் மிகக் கடுமையாகதான் இருந்தது. யாழ்ப்பாணம் தவிர்ந்த, ஏனைய மாவட்டங்களில் புளொட்டினுடைய நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டு தான் இருந்தது. அதான் முழுப்பேரும் யாழ்ப்பாணம் போக வேண்டி வந்தது.

தேசம்: யாழ்ப்பாணத்தில ஏன் அவ்வளவு தூரம் தேடுதல்கள் ஒன்றும் நடக்கேல? யாழ்ப்பாணம் முழுமையாக தமிழ் பிரதேசமாக இருந்தபடியாலா அல்லது ஏற்கனவே போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதா அந்த காலகட்டத்தில்?

அசோக்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் ஏனைய பிரதேசங்களை விட யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று. முழுக்க முழுக்க தமிழ் பிரதேசங்களாக இருந்தபடியால், எங்களுக்கு ஒழிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் இருந்தது. ஆனா மட்டக்களப்பில் இவ்வாறான பாதுகாப்பு சூழல் இல்லை. ஒரு பக்கம் கடல் மறு பக்கம் ஆறு. மட்டக்கிளப்பின் புவியியல் அமைப்பை பார்த்தீங்க என்றால், கடலோரக் கிராமங்கள் எங்க பகுதிகளில் கூட. இவற்றல் மறைந்து வாழ்வது கஷ்டம். அப்படி இல்லாவிட்டால் காட்டுக்குப் போக வேண்டும். அல்லது படுவான்கரைக்குப் போக வேண்டும். கொஞ்ச தோழர்கள் படுவான்கரையில் ஒழிந்து வாழும் சூழல் இருந்தது. மற்ற ஆட்கள் யாழ்ப்பாணம் போயிட்டாங்க.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தான் நான் நினைக்கிறேன் கச்சேரியில் ஒரு துப்பாக்கி பறிமுதல் நடந்தது என்று. அது எதற்காக மேற்கொள்ளப்பட்டது? எப்படி மேற்கொள்ளப்பட்டது?

அசோக்: மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிற்பாடு, அதை புளொட் தான் செய்வதென்று என்று இருந்தது. அதற்கான வரைபடங்கள், ரெக்கி எல்லாம் ஒரு தோழர் பார்த்து தந்தவர். எங்களுக்கு நம்பிக்கையான தோழர் அவர். அவர்தான் எல்லா ஆயத்தங்களும் செய்தவர்.

மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவம் நடந்தவுடனே மிக கெடுபிடி இருந்ததால, முக்கியமான தோழர்கள் எல்லாருமே வெளியில போயிட்டாங்க. நானும் ஈஸ்வரனும்தான் தான் மிஞ்சினது. அப்ப எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் எனக்கு தனிப்பட்ட வகையிலான நண்பர்கள் சிலர் இதனை செய்ய முடிவு செய்தாங்க. இவர்கள் புளொட்டோட கொஞ்சம் உறவே ஒழிய, புளொட்டில வேலை செய்யவில்லை. அவர்கள் சுயமாக இயங்க வேண்டும் என்று நீண்ட காலமாக எண்ணி இருந்தார்கள். அவங்கள் தாங்கள் இந்த கச்சேரியை செய்யப்போகிறோம் என்று சொல்லி அதைச் செய்தார்கள்.

தேசம்: வேறு அமைப்புகளோடு சேர்ந்தா அல்லது …

அசோக்: இல்லை. அவர்கள் என்னுடைய நண்பர்கள். சின்ன சின்ன அதிருப்திகள் இருந்தது புளொட் தொடர்பாக. எங்களிட்ட ஆட்க்ஷன் இல்லை என்று சொல்லி அதிருப்தி இருந்தது அவங்களிடம். நான் முன்னர் கதைத்த நாக படை வேறு, இவங்க வேறு.

உண்மையில் இந்த நடவடிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவங்கள் மிகக் கடுமையான நெருக்கடிக்குள்ள அதை செய்தாங்க. அந்த ஆயுதங்கள் என்னுடைய களுதாவளை கிராமத்தில்தான் புதைக்கப்பட்டது.

அடுத்த நாள் போய் பார்த்தபோது புதைத்த இடத்தில் ஒன்றுமில்லை. அப்போ இவங்களுக்கு பெரிய அதிர்ச்சி.

அது என்ன நடந்தது என்று கேட்டால், எங்களுடைய ஊரில் அதிகாலையில் கரையோரமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது வழமை.

கடற்கரையை அண்டிய பகுதி ஒன்றில் ஆயுதங்களை மறைவாக புதைக்கும் போது, கடற்கரையில் கரைவலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், இவங்கள் புதைத்ததைக் கண்டுட்டாங்க. அவங்களுக்கு என்ன சாமான் என்று தெரியாது, பிறகு தோண்டி பார்த்திருக்கிறாங்கள் துப்பாக்கி. எங்கட கிராமத்து ஆக்கள் அவங்க. எல்லாரும் ஒன்டு ரெண்டு என எடுத்து தங்கள் வீடுகளுக்கு கொண்டு போய்விட்டார்கள். மொத்தம் 67 துப்பாக்கிகள் என நினைக்கிறேன்.

பிறகுதான் கேள்விப்பட்டிருக்கிறார்கள் இப்படி கடற்கரையிலிருந்த ஆட்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று. என்னிடம் வந்து சொன்னாங்க. அப்போ நான் தேடப்பட்டு கொண்டிருக்கிற நேரம். நானும் நேரடியாக போகேலாது. போனாப் பிரச்சனை வந்திடும். நான் நண்பர்களிடம் சொன்னேன், நீங்க போய் கேளுங்க என்று. இவங்க போய் எடுத்தவங்களிடம் கேட்ட போது, அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். அவங்களுக்கு இதன்ற பிண்ணனி அபாயம் எதுவும் தெரியாது.

பிறகு நானும், தோழர்கள் பணிக்ஸ்சும், கராட்டி அரசனும் போய் வாங்கி, இன்னொரு இடத்திற்கு மாத்தினோம். நான் போனதால் நாங்கள் தான் இதைச் செய்தோம் என நினைத்து, பொலிஸ் என்னை கடுமையாக தேடத் தொடங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு, நான் தோழர் ஈஸ்வனிடம் இந்த துப்பாக்கி சம்பந்தப்பட்ட விடயங்களை பொறுப்புக் கொடுத்துவிட்டு, என்னுடைய கிராம சூழலை விட்டு மட்டக்களப்புக்கு டவுனுக்கு வந்துட்டேன்.

அங்க ஒழித்துக் கொண்டிருக்கும் போது, இந்த நண்பர்களுக்கும், ஈஸ்வரனுக்கும், எனக்குமான கம்யூனிகேஷன் இல்லாம போயிட்டுது. அப்போ இந்த கம்யூனிகேஷன் ஏற்படுத்துவதற்கான நம்பிக்கையான ஒருவர் எனக்கு கட்டாயம் தேவை. அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார் சிவராமை பயன்படுத்தலாம் என்று. சிவராமை எனக்கு முதலே தெரியும். என் நண்பர் கவிஞர் வீ. ஆனந்தனின் நண்பன் சிவராம். அத்தோடு, மட்டக்களப்பில் வாசகர் வட்டம் ஒன்று இருந்தது. அதற்கூடாகவும், சிவராமை எனக்கு தெரியும். அடிக்கடி சந்தித்து கொள்ளுவோம். ஆனால் பெரிய நெருக்கம் இல்லை எங்களுக்குள்ள. அப்போ சிவராமை கூப்பிட்டு, சிவராமுக்கு ஊடாகத்தான் அந்த நண்பர்களோடும், ஈஸ்வரனோடும் தொடர்களை ஏற்படுத்திக் கொண்டேன்.

தேசம்: பிற்காலத்தில் தராக்கி என்று அழைக்கப்பட்ட சிவராமும் இவரும் ஒருவர்தானே..

அசோக்: ஆம். ஒருவர்தான். ஏனென்றால் சிவராமின் பேக்ரவுண்ட் ரோயல் பெமிலி. அப்போ பொலிசாருக்கு சந்தேகம் வராது. அப்போ சிவராமை வைத்துக்கொண்டுதான் கம்யூனிகேஷன் செய்கிறோம். அந்த பிரச்சினை தீர்ந்ததற்குப் பிறகு நான் யாழ்ப்பாணம் வந்துட்டேன். ஈஸ்வரன் வவுனியா போட்டார்.

தேசம்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது?

அசோக்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், துப்பாக்கிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கிகள் இடங்கள் மாறும் மாறும்போது பல்வேறு பிரச்சினையால் விடுபட்டு போய் விட்டது. அது அவங்களுக்கு கிடைக்கல. ஒரு ஐந்து ஆறு தோழர்கள். அந்நேரம் அவங்களுக்கு வேற அமைப்புகளும் இல்லை. அவங்களுடைய சிந்தனைக்கும், செயற்பாட்டிற்கும் ஏற்றது புலிகளாகத்தான் இருந்தது. புலிகளோடு சேர்ந்து விட்டார்கள். அதுல முக்கியமா என்னுடைய நண்பன் மாறன் சின்னத்தம்பியும் ஒருவர். பிறகு அவர் புலியை விட்டு விலகி இருந்ததாகவும், இந்திய இராணுவ காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிற்காலங்களில் அறிந்தேன்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு, யாழ்ப்பாணத்தில் நான் இருந்த போது, என்னுடைய நண்பர் வந்து சொன்னார் மட்டக்களப்பில் இருந்து, என்னை பார்ப்பதற்கு ஒருவர் வந்திருக்கிறார் என்று. அங்க போனா, நாலைந்து பேரோட எல்.ரீ.ரீ.ஈ மாத்தையா நிக்கிறார்.

தேசம்: உங்களை வரச்சொன்னது மட்டக்களப்பைச் சேர்ந்த மாறனா?

அசோக்: இல்லை. என்னிடம் வந்து சொன்னவர் யுனிவர்சிட்டி யில் படிக்கும் நண்பர். என்னை தேடி வந்தவர் யார், என்ன பெயர் என்று அவரிடம் நான் கேட்ட போது, தனக்கு தெரியாது என்றும், தன்னிடம் என்னை விசாரித்தபடியால் வந்து சொன்னதாக கூறினார். ஆனால், அவர் புலிக்கு வேலை செய்தவர் என்று பிறகுதான் தெரியும். காலப்போக்குல புலிக்கு உளவாளியா வேலை செய்தார் என்று கேள்விப்பட்டேன்.

துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தங்கட இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள் என்றும், குறிப்பிட்ட துப்பாக்கிகளை நாங்கள் தரவில்லை என்று சொல்லி அவற்றை தர வேண்டும் என்றும் மாத்தையா சொல்கின்றார்.

அந்த துப்பாக்கிகளால் பெரிய பிரயோசனம் இல்லை. எல்லாம் சொட் கண். அத்தோட, மாத்தையாவோடு நிற்கிற ஆட்களில், துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இல்லை. ஆனால் இவர் கேட்கிறார். அப்ப நான் நடந்த சம்பவங்களை விளங்கப்படுத்தினேன், இதுதான் நடந்தது என்று சொல்லி.

தேசம்: அதுல மாத்தையாவும் வேறு யாரும் வந்தது புலிகளிலிருந்து?

அசோக்: மாத்தையாவை மட்டும் தான் எனக்கு தெரியும். மற்றவர்களைக் காட்டி, இவங்களும் துப்பாக்கி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவங்க என்று மாத்தையா என்னிடம் சொல்கிறார். ஆனா யாருமே சம்பந்தப்பட்ட ஆக்களா எனக்கு தெரியல.

அப்போ நான் சொன்னேன், உங்களுக்கு நன்மை செய்ய போய்த்தான் நாங்களும் தேடப்பட்டு இவ்வளவு சிக்கல் பட்டது. உங்களுக்கு கடைசியா ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கி தான் இல்லாமல் போனது. அதை பாதுகாத்து உங்களுக்கு தருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் என தெரியுமா என கேட்டேன். இல்ல நீங்கள் ஏமாத்தி போட்டீங்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி, பிறகு அதுல முரண்பட்டு போயிட்டாங்க. பிறகு காலப்போக்கில் அதில் ஒருவரை நான், இந்தியாவில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

தேசம்: யாரை..

அசோக்: மாத்தையாவோடு வந்த அந்த நாலு ஐந்து பேரில் ஒருத்தரை. அப்போ அவர் சொன்னார் உங்களுக்கு எல்லாம் வெடி இருக்கு என்று.

தேசம்: மட்டக்களப்பிலிருந்து நீங்கள் யாழ்ப்பாணம் போவதற்கு முதலில் மட்டக்களப்பு சிறை உடைப்பில் பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் தொடர்பா ஒரு சுவாரசியமான கதை இருப்பதாக சொல்லிட்டு அதை நிப்பாட்டிட்டீங்க.

அசோக்: நான் முன்னர் சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன் எறிகுண்டு செய்ததது பற்றி. பால் டின்னில ஜெலட்டின் வைத்து, திரி வைத்து, நெருப்பு கொளுத்தி எறிய வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டது அது… அவற்றில் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. எங்கட வீடு ஒரு தென்னந்தோப்பு. அங்க தேங்காய் உரித்த பிறகு, தேங்காய் மட்டை எல்லாம் பெருசா குமிச்சு வைத்திருப்பார்கள். மிஞ்சின கைக்குண்டுகள் எல்லாவற்றையும், அதுக்குள்ள நான் ஒழித்து வைத்துவிட்டேன். ஒரு நாள் அம்மா தேங்காய் மட்டை குவியலுக்கு நெருப்பு வைத்து எரித்து இருக்கிறா. இவற்றிக்கு என்ன நடந்தது என்று தெரியல. பார்த்தா எல்லாம் எரிஞ்சி போய்விட்டது.

தேசம்: ஒண்டும் வெடிக்கேல?

அசோக்: ஒன்றுமே வெடிக்கேல. அப்ப யோசித்துப் பார்த்தன் நாங்கள் இதுகளை வைத்துக்கொண்டுதான் சிறையை உடைக்க வெளிக்கிட்டு இருக்கிறோம். அம்மா நெருப்பு வைக்கும் போது வெடித்திருந்தால் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஆனால் ஒன்றும் வெடிக்காமல், அப்படியே எரிந்து போயிட்டுது. கொஞ்ச காலத்துக்குள்ள தான். நீண்ட காலமும் இல்லை.

தேசம்: அந்த நேர சம்பவங்கள், திட்டமிடல்கள் எல்லாம் ஒரு சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்திருக்கிற மாதிரி தெரியுது…?

அசோக்: சிறுபிள்ளைத்தனம் என்பதைவிட அதீத நம்பிக்கை இருந்தது எங்களிடம். அந்த நம்பிக்கையும், நல்ல திட்டமிடலும்தான் அந்த வெற்றிக்கு காரணம்.

தேசம்: உங்களுடைய பேனா நட்பு என்பதும் அதனூடாக நீங்கள் எடுத்துக்கொண்ட தொடர்புகளும் தான் கூடுதலாக அரசியலுக்கும், அதற்குப் பிறகு இயக்கத்துக்கும், இயக்கங்களுக்கு இடையேயான உறவுகளுக்கும் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்?

அசோக்: ஒரு பன்முக பார்வை கொண்ட தன்மையையும், ஜனநாயக பண்புகளையும் பேனா நட்பு தந்தது. உரையாடல் தானே வாழ்வை எம் பயணத்தை தீர்மானிப்பவை. எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் உரையாடுவோம். அது எங்களுக்கு நிறைய பண்புகளை வளர்த்தது. பேனா நண்பர்கள் புளொட்டுக்குள்ள வந்தது குறைவு. ஆனால் தொடர்புகள் இருந்தது. அந்தக் காலம் யூத் கவுன்ஸில் இருந்தது, விளையாட்டு முகாம் எல்லாம் நடந்தது. அதுக்குள்ள நிறைய நண்பர்கள் கிடைத்து, அவங்க நிறைய பேர் புளொட்டுக்குள்ள வந்திருக்கிறார்கள். பெரிய ஒரு நெட்வொர்க் இருந்தது. பென் பிரண்ட், யூத் கவுன்ஸில் என்றெல்லாம் எங்களை நம்பி ஒரு கிரவுட். அதற்கான நம்பிக்கையை நாங்கள் கொடுத்தோம். வேறு இயக்கங்களுக்குள்ளும் என் பேனா நண்பர்கள் ஒருசிலர் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருக்கும் போது, எல்லா அமைப்புகளோடும் எங்களுக்கு தொடர்பும் உறவும் இருந்தது. முக்கியமாக அங்க வேலை செய்த ஈபிஆர்எல்எஃப், ஈரோஸ், புலிகளுக்கு வேலை செய்த முழுப் பேரோடையும் எங்களுக்கு உறவு இருந்தது.

உமைகுமாரன், இறைகுமாரன் கொல்லப்பட்ட பின்பும், எங்களுக்குள்ள ஒரு உறவு இருந்தது தானே நாங்க பேசினம் கதைத்தோம்…

தேசம்: யாழ்ப்பாணத்தில வேலை செய்யேக்கை உங்களுக்கு எப்படியான சூழல் இருந்தது ?

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நாங்க மட்டகளப்பில் நிற்கமுடியாமல் போய்விட்டது. ரகுமான் ஜான், கேசவன், பார்த்தன், சலீம், செல்வன், ஜென்னி முழுப்பேரும் திருணோமலையிலிருந்து யாழ்ப்பாணம் வந்துட்டார்கள்.

வவுனியா தான் எங்கட பிரதான முக்கிய தளமாக இருந்தது. வவுனியாவில் தங்கராஜா தோழர் எல்லாரும் இருந்தவங்கள். யாழ்ப்பாணத்தில் அமைப்பை மிகத் தீவிரமாக கட்டமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அது வரைக்கும் யாழ்ப்பாணத்தில் யுனிவர்சிட்டியில் இரண்டு தோழர்கள் வேலை செய்தவர்கள் சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும். கேதீஸ்வரன் திருகோணமலை, சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம். குமரன் தோழர் யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். பெரிதாக மக்கள் அமைப்பு வேலைகள் எதுவும் நடக்கல்ல.

தேசம்: இப்பவும் அவர்கள் இருக்கிறார்களா?

அசோக்: தோழர் குமரன் இங்க பிரான்சில் இருந்தவர். இறந்து விட்டார். சத்தியமூர்த்தி இலங்கையில் இருக்கிறார். கேதீஸ்வரன் காந்திய வாகனத்தில் போய், யாழ்ப்பாண பௌத்த விகாரையடியில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில மற்ற இயக்கங்கள் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அப்போ நாங்களும் வேலை செய்ய வேண்டும் என்று நானும், தங்கராஜா தோழரும் யாழ்ப்பாணம் போறோம். ஏனென்றால் அரசியல் வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. அமைப்பு வடிவங்களை உருவாக்க வேண்டி இருந்தது.

தேசம்: தங்கராஜா தோழர் எந்த பகுதியை சேர்ந்தவர்…

அசோக்: அவர் மலையகத்தை சேர்ந்தவர். இப்போது, இந்தியாவில் தான் இருக்கிறார். அவர் ஜே.வி.பி இல் இருந்து வந்தவர்.

தேசம்: மலையகத்தை சேர்ந்த தோழர்களும் கணிசமான அளவில் இருந்தார்களா?

அசோக்: நிறைய முக்கியமான தோழர்கள் ஆதவன், மாணிக்கம் என்று ஒரு தோழர் முக்கியமானவர். மாணிக்கம்பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். பெரியண்ணன் என்று சொல்லி வவுனியா அவர். நிறைய தோழர்கள் இருந்தார்கள்.

நாங்க யாழ்பாணம் போகும்போது, அங்கு பெரிதாக அமைப்பு வடிவம் இருக்கவில்லை. நாங்க போய்த்தான் அவற்றை ஒழுங்கமைக்கின்றோம். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த தோழர் குமரன், நெருக்கடிகளால் எதுவும் செய்ய முடியல்ல. குமரன் பின்தளம் போய், கரையோரப் பொறுப்புக்களை, கடல் போக்குவரத்துக்களை பார்க்க வேண்டி இருந்ததால், மாவட்ட பொறுப்பாளராக நேசன் என்று சொல்லி, இப்போது கனடாவில் இருக்கிறார். அவரை நியமிக்கிறார். தளப் பொறுப்பாளாராக தோழர் சலீம் பொறுக்பெடுக்கிறார். அவர் பொறுப்பெடுத்து மூன்று மாதத்திலேயே திருநெல்வேலியில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார். அதற்குப் பிறகு தோழர் கேசவன் தளப்பொறுப்பாளராக வருகின்றார்.

இக் காலங்களில் நாங்கள் அமைப்பை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுகிறோம். தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், பெண்கள் அமைப்பு என உருவாக்குகின்றோம். இவ் அமைப்புக்களை சேர்ந்த தோழர்களுக்கு பாசறைகள் வைத்து அரசியல் வகுப்புக்கள் நடாத்துகிறோம்.

தேசம்: தளத்தில் வந்து மத்திய குழுவைச் சேர்ந்த தோழர்களில் நீங்கள் ஒருவர், மற்ற தோழர்கள் யார் யார்…?

அசோக்: மத்திய குழு உருவாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் தற்காலிக மத்திய குழு இருக்கிறது . இது பற்றி முன்னமே கதைத்துள்ளோம்.

தொழிற்சங்கங்களுக்கு முக்கியமாக ஐபி, ஜீவன், ராஜன், பிரசாத், முத்து, ரகு, கௌரிகாந்தன், இளவாலை பத்தர், கிருபா அவங்க எல்லாம் இருக்கிறாங்கள். பிறகு மாணவர் அமைப்புகள் டெசோ உருவாக்கப்பட்டு, தீபநேசன், குருபரன், ஜபார், மகிழ்ச்சி, அர்ச்சுனா, தமிழ், தம்பா, தனஞ்சயன், சிவகுமார், விமலேஸ்வரன், லவன், சுகந்தன், திரிலிங்கம் ஞானம், போல், பாபு, இப்படி நிறைய தோழர்கள். பெண்கள் அமைப்பில் நிறைய தோழர்கள் வேலை செய்தவங்க. மாணவர் அமைப்பிலும் நிறைய பெண் தோழர்கள் வேலை செய்தவர்கள் பெயர்கள் வேண்டாம்.

மக்கள் அமைப்பில் உரும்பிராய் குமார், சீலன், விபுல், இளங்கோ, பரணீதரன், கதீர், இப்படி நிறைய. கொக்குவில் தோழர்கள் நிறையப்பேர். நாதன், சிவானந்தன், செல்வன், ஆனந்தன், தோழர்கள் பெயர்களை ஞாபகப்படுத்த முடியாமல் உள்ளது.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் புளொட்டில் தான் ஆகக்கூடுதலான தோழர்கள் இருந்தார்கள் என்று.

அசோக்: ஓம். ஒப்பிட்டளவில் புளாட் அமைப்பில்தான் கூடுதலான தோழர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறன். மாணவர் அமைப்பு டெசோவின் இருந்த தோழர்கள் பாசறைகளில் கலந்து கொண்டார்கள். உண்மையில் டெசோவும், தொழிற்சங்கமும், பெண்கள் அமைப்பும் அரசியல்ரீதியாக வளர்ச்சி கொண்ட தோழர்களை கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், யாழ்ப்பாண நிர்வாக அமைப்பு குறிப்பாக மக்கள் அமைப்பு பொறுப்பாளர்களை, மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்ட நேசனும், கண்ணாடிச் சந்திரனும்தான் தீர்மானிச்சாங்க. எங்களுக்கு அங்கு பெரிதாக யாரையும் தெரியாது. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இந்த தோழர்களுக்கு அரசியல் சார்ந்த வரலாற்று புரிதலும், கோட்பாட்டு ரீதியான புரிதலும் இல்லை. அவர்கள் வெறும் நிர்வாகிகளாகத்தான் இருந்தாங்க.

அவர்களுக்கு கீழ வேலை செய்ற தோழர்கள் அரசியல் வகுப்புக்கு வந்தாங்க. கீழ் மட்டங்களில் வேலை செய்த தோழர்கள், மற்றும் மாணவர் அமைப்புகள் தொழிற்சங்கங்களில் வேலை செய்தவர்கள் அரசியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், ஒரு மாக்சிச ஐடியோலொஜி உள்ளவர்களாகவும், முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அப்ப எங்களுக்கு அவங்களோட வேலை செய்றது லேசாக இருந்தது.

தேசம்: நான் திருப்பியும் பேனா நண்பர்கள் என்ற விடயத்திற்கு வாரன். உங்கள் பேனா நண்பர்களில் சிலர் பிற்காலத்தில் விடுதலைப்புலிகளில் இயங்கியதாக ஒரு தடவை சொன்னது ஞாபகம் உள்ளது. அதைப்பற்றி சொல்லமுடியுமா?

அசோக்: யாழ்ப்பாணத்தில ஒரு பேனா சிநேகிதி இருந்தவ. யாழ்ப்பான யூனிவர்சிட்டியில் எம் ஏ செய்தவா. பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகத்தில் வேலை செய்து, அப்படியே புலிக்கு போயிற்றாங்க. பிறகு புலிகளிலிருந்து வெறியேறிட்டாங்க. அவங்களால்தான் திலீபன் உறவு எனக்கு வந்தது.

தேசம்: உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபன்

அசோக்: ஓம். ஒரளவு எங்களுக்கு யாழ்ப்பாணத்தில, பேசக் கூடிய உறவுகள், எல்லா அமைப்புகளிடமும் இருந்தது.

தேசம்: இது ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்த தோழர்களுக்கு இடையில் இருக்கேல. ஏன் ?

அசோக்: அப்படி முழுமையாக சொல்லமுடியாது. அரசியல் வளர்ச்சி கொண்ட, ஜனநாயகப் பண்பு கொண்ட தோழர்கள் மத்தியில் உரையாடல்கள் இருந்தன. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். ஆனால் பெரும்பான்மை கொண்டதாக, ஆதிக்கம் கொண்டதாக ஏனைய சக்திகள்தான் இருந்தன. அதுதான் பிரச்சனை. இயக்கங்களோடு பல்வேறு முரண்பாடுகள் வரேக்க நான்தான் அனேகமா பேச்சுவார்த்தைக்கு போறது. சுழிபுரம் படுகொலை தொடர்பாக கூட நான்தான் பேச்சுவார்த்தைக்கு போனான். அதைப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்

ஈபிஆர்எல்எஃப் க்கு இன்டலெக்சுவல் வட்டம் ஒன்று இருந்தது. நிறைய இடதுசாரி தோழர்களுடன் எல்லாம் உறவை வளர்த்து இருந்தாங்க. புளொட்டுக்கு அந்த நேரத்தில் இவ்வாறான தொடர்புகளும், உறவுகளும் இருக்கவில்லை.

நாங்க போனதற்குப் பிறகுதான், ஓரளவு இடதுசாரித் தோழர்கள், இலக்கிய துறை சார்ந்த நண்பர்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளமுடிந்தது. உரையாடலுக்கான உறவை அவர்களுடைய கருத்தை உள்வாங்குவதற்கான உறவை நாங்கதான் ஏற்படுத்தி கொண்டோம். இதில சந்திச்ச தோழர்களில்
நாகராஜா, கௌரிகாந்தன், முத்து, ஜெயபாலன் போன்றவங்க அரசியல் வகுப்புக்கள் எங்களுக்கு எடுத்தவங்க. அந்த நேரத்தில்தான் நாங்கள் சுவர் என்ற பத்திரிகையும் வெளியிட்டோம்.

தேசம்: அது டெசோ மாணவர் அமைப்பு சார்ந்ததா?

அசோக்: இல்லை இல்லை. அப்ப யாழ்ப்பாணத்தில் புதுசு என்ற சஞ்சிகை வெளி வந்திருந்தது. நல்ல காத்திரமான இலக்கிய சஞ்சிகை அது. சபேசன், ரவி அருணாசலம், இளவாலை விஜயேந்திரன் போன்றவங்க சேர்ந்து வெளியிட்டார்கள். சபேசன், ரவி அருணாசலம் அவங்களோட எனக்கு ஒரு நட்பு ஒன்று இருந்தது. தோழர் கேதீஸ்வரனும் இவங்களோடு நட்பாக இருந்தார். நாங்களும் ஒரு இலக்கிய பின்புலத்திலிருந்து வந்த ஆட்கள் தானே. அப்ப இலக்கிய சஞ்சிகை வெளியிடலாம் என்ற ஒரு ஐடியா இருந்தது. எங்க நோக்கம் என்னவென்றால் புளொட்டினுடைய அரசியல் சாராமல், ஆரோக்கியமான உரையாடலுக்கான ஒரு சுதந்திர தளமாக அந்த இலக்கிய சஞ்சிகையை கொண்டு வர வேண்டும் என்ற ஒரு ஐடியா இருந்தது. அப்போது வழி செல்லத்துரை என்றொரு தோழர் இருந்தவர். இப்ப கனடாவில் இருக்கிறார். அவரோட கதைத்த போது, நல்ல முயற்சி செய்யலாம் என்றார். அதன் பின்பு தோழர்கள் கேசவன், ரகுமான் ஜான், கேதிஸ்வரனோடு கதைத்து கொண்டு வரலாம் என முடிவு செய்கிறோம்.

தேசம்: வலி செல்லத்துரை என்பது அவர் வலிகாமம் என்பதாலா ?

அசோக்: இல்லை இல்லை. அவர் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். வழி என்று ஒரு பத்திரிகை வெளியிட்டவர். பிறகு சபேசனோடு இது பற்றி கதைக்கிறம். அதற்கு பிறகு நாங்கள் ஒரு சுவர் என்ற பெயரில் சஞ்சிகை ஒன்று கொண்டு வாறதுக்கு கமிட்டி ஒன்று உருவாக்கி, அந்தக் கமிட்டியில் சபேசன், ரவி அருணாச்சலம், நான், ஜீவன், வழி செல்லத்துரை, கேதீஸ்வரன் முதலாவது சஞ்சிகையை கொண்டு வந்தம். சஞ்சிகை ஒரு ஆரோக்கியமான உரையாடல் தளமாக இருந்தது. பல பேரின் படைப்புக்கள் அதில் வெளிவந்தன. இரண்டாவது சஞ்சிகை கொண்டு வரேக்க இயல்பாகவே இயக்கவாதம் தெரியும்தானே, அந்தக் கவிதை பிழை, கட்டுரை பிழை என்று சொல்லி. அதுல பெரும் பிரச்சனை எடுத்தது கண்ணாடி சந்திரன்.

தேசம்: அவர் உங்கட குழுவில் இருக்கிறாரா?

அசோக்: குழுவில் இல்லை. ஆனால் அவர் ஒரு அதிகார மையமாக மாறிவிட்டார் அந்த நேரம்.

தேசம்: இந்த சஞ்சிகை வெளியிடுவதற்கான ஆதரவைப் புளொட் தான் தந்தது.

அசோக்: இது சம்பந்தமாக தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோட எல்லாம் கதைத்து ஓகே பண்ணிட்டாங்க. பிறகு ரகுமான் ஜான் இந்தியாவுக்கு போயிட்டார். இங்கே இருந்தது கேசவன் தோழர்தான். முதலாவது நிதி புளொட் தந்தது. பிறகு கண்ணாடிச் சந்திரன் பிரச்சனை கொடுக்க தொடங்கிவிட்டார். கேசவன் தோழரும் கண்ணாடிச் சந்திரனின் அதிகார மையத்தோடு அக்காலங்களில் ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். நேசன், கண்ணாடிச் சந்திரன் போன்றவர்களின் அதிகார தன்னிச்சையான போக்குகளை கண்டிக்காமல், அவர்களோடு தாராளவாதம் கொண்டவராக இருந்தார். இரண்டாவது பத்திரிகையை வெளியிடுவதற்கு எங்களிடம் பணம் இல்லை. அந்த நேரம் யாரிடமும் இப்படி பிரச்சினை என்று சொல்லவில்லை.பிறகு நாங்கள் ஸ்டாப் பண்ணிட்டோம்.

தேசம்: இதுல ரகுமான் ஜான், நேசன், கண்ணாடிச் சந்திரன் மூன்று பேரும் பிறகு தீப்பொறி உருவாக்கினம். இவர்கள்தான் அதிகார மையங்களை உருவாக்குகின்றார்கள்…

அசோக்: இதை நீங்கள் வரலாற்று ரீதியாக பார்த்தீர்களென்றால், இப்படி இந்த அதிகார மையம் உருவாகுவதற்கான அடிப்படைக்காரணங்களும், அதன் சூழலும், அது பற்றிய அரசியல் பார்வையும் எங்களுக்கு அவசியம். ஏனென்றால், இப்ப நாங்கள் எடுத்த உடனேயே எல்லாரும் தலைமை மீது தானே குற்றச்சாட்டு வைக்கிறம். தலைமையில் ஒரு அதிகார மையம் உருவாகிய அதே நேரம், தளத்திலும் ஒரு அதிகார மையம் உருவாகுது. கண்ணாடிச் சந்திரன், நேசன் போன்றவர்கள் அந்த அதிகார மையத்தை உருவாக்குகின்றனர்.

அதற்கு தோழர் கேசவனும் துணை போகின்றார். உதாரணமாக பார்த்தீர்கள் என்றால், பார்த்தன் தான் இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர் தளத்துக்கு. அந்த காலகட்டத்தில் கொலைகளும், கொள்ளை நடக்கவில்லை. நாங்கள் அரசியல் மயப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நல்ல ஒரு உறவு ஒன்று இருந்தது.

அசோக்: ஓம் நிச்சயமாக. புளொட் அமைப்பின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தது. வேறு அமைப்புகள் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட, புளொட் எந்த விதமான தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பார்த்தன் மட்டக்களப்புக்கு போய் போலீசில் பிடிபட்டு கொலை செய்யப்பட்டபோது, ராணுவ பொறுப்பாளர் இல்லாத ஒரு காலம் வருது.

தேசம்: பார்த்தன் என்பது ஜெயச்சந்திரன். ஜென்னியின் துணைவர்…

அசோக்: ஓம். அந்த இடைவெளியில் ஒரு ராணுவ பொறுப்பாளர் அவசியம் என்ற வகையில் கண்ணாடிச் சந்திரன் நியமிக்கப்படுகிறார். பார்த்தனுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான உரையாடல் இருந்தது, தோழமை இருந்தது. கண்ணாடிச் சந்திரனிடம் அது இல்லாமல் போய் விட்டது. இவர் மற்றவர்களை தோழமையோடு எப்பவும் அணுகுவதில்லை. எப்போதும் அதிகாரத்தனம்தான்.

நேசனைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியில் எந்த வளர்ச்சியும் அற்றவர். வெறும் நிர்வாகி. சொல்லப் போனால், கண்ணாடிச் சந்திரனின் அடிமையாகவே இருந்தார். குமரன் தோழரிடம் நான் பகிடியாக கேட்பதுண்டு. எப்படி நேசனை கண்டுபிடிச்சீங்க என்று.

தேசம்: பார்த்தன், நீங்கள், மற்றது வாசுதேவா எல்லாரும் காந்தியத்திலிருந்து அரசியல் மயப்படுத்தப்பட்டு வாறீர்கள். கண்ணாடிச் சந்திரனின் பின்னணி என்ன?

அசோக்: அவர் மொரட்டுவை யூனிவர்சிட்டியில் ஆர்க்கிட்டெக் படித்துக் கொண்டிருந்தவர். படிக்க முடியாத சூழல் வருதுதானே. அப்போது புளொட்டிக்கு வருகின்றார்.

தேசம்: இவரைப் போன்றவர்களுக்கு அரசியல் வளர்ச்சியும், இராணுவப் பயிற்சியும் இருக்கேல

அசோக்: எதுவும் இல்லை..

தேசம்: அப்போ என்ன என்று அந்த பொறுப்பான பதவிக்கு வாறினம்?

அசோக்: இவர் ரகுமான் ஜானின் நெருங்கின நண்பர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவங்க இருவரும் படித்தவர்கள். இவர் வந்த பிண்ணனி பற்றி முன்னர் கதைத்திருக்கிறோம்.

தேசம்: அதற்காக, இவ்வாறு பொறுப்பு கொடுக்க முடியுமா?

அசோக்: இவ்வாறுதான் அதிகார துஷ்பிரயோகங்கள் தளத்தில் உருவாகியது. பிற்காலத்தில் ரகுமான் ஜான் தோழருடன், கண்ணாடிச் சந்திரன் பற்றி கதைக்கும் போது, கண்ணாடிச் சந்திரன் பிற்போக்கான ஆள் என்றும், தன் ஊரில் நடந்த சாதிய கலவரம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்டவர் என்று சொன்னார். அப்ப கேட்டேன், இப்படிப்பட்டவரை எந்த எந்த அடிப்படையில் கொண்டு வந்தீர்கள் என்று. தனக்கு அப்போது தெரியாது என்றும், பின்னர்தான் தான் அறிந்ததாகவும் சொன்னார். நான் இன்றைக்கும் மதிக்கும் தோழர்களில், ரகுமான் ஜான் தோழர் முக்கியமானவர். ஆனால் அவரின் பலவீனம், தனிப்பட்ட நட்புக்களுக்கு இயக்கத்தினுள் முக்கியத்துவம் கொடுத்தது.

தேசம்: பொருளாதார ரீதியில் கண்ணாடிச் சந்திரன் எப்படியான பின்னணியை கொண்டிருந்தார்.

அசோக்: நான் பகிடியா சொல்லுறது, கண்ணாடி சந்திரனை அவருடைய காருக்காகத்தான், புளொட்டில் சேர்த்தது என்று சொல்லி. அவரின் சொந்த காரிலதான் வருவார்.

தேசம்: செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்.

அசோக்: ஓம். அதிகார வர்க்கமாக யாழ்ப்பாணத்தில் ஒரு குரூப் அப்போதே உருவாகிவிட்டது. அந்த நேரத்தில் எனக்கும் இவர்களுக்கும் முரண்பாடு தொடங்கி விட்டது.

தேசம்: யாழ்ப்பாணத்தின் இயல்பா இது… ?

அசோக்: மத்தியதர வர்க்கத்தின் இயல்பு இது. மத்திய தர வர்க்கம் அதிகாரத்துக்கான அபிலாசை கொண்டது. அதற்காக எந்த சமரசமும், எந்த தவறுகளையும் செய்யத் துணியும்.

தேசம்: மத்திய தர வர்க்கம் என்றால், கிழக்கு மாகாணத்தில் மத்தியதர வர்க்கம் இருக்குத்தானே

அசோக்: மத்தியதர வர்க்கத்தில் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் நடத்தைகள் எல்லாம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கும். இயல்பாக எம் எல்லோரிடமும் இந்த குணாம்சம் இருக்கும். அது அதிகாரத்திற்கு ஆசைப்படும். தன்னைச் சற்றி விம்பங்களை ஏற்படுத்தும். அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்க விரும்பும். இவற்றில் இருந்து விடுபடவேண்டுமென்றால் மார்க்சிய கல்வி அவசியம். இடதுசாரிய பண்பாட்டு வாழ்வு அவசியம். பன்முகத்தன்மை பார்வை, சமூக அக்கறை இருக்க வேண்டும். இல்லாட்டி அதிகாரமும் தன்னிச்சையான போக்குகளும்தான் அதிகரிக்கும். இவைகள் இயக்கத்தை அழித்துவிடும்.

கண்ணாடிச் சந்திரன், நேசன் இவங்க இரண்டு பேரிடமும் இந்த அதிகாரமும், தன்னிச்சையான போக்குகளும் நிறைய இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து செய்த விடயங்கள் பலருக்கும் தெரியாது.

உதாரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி என்ற ஒரு கிராமம் இருக்கு. அங்க டெசோ மாணவர் அமைப்பு தொடர்பாக அமைப்பு கட்டுவதற்கு வட்டக்கச்சி மகா வித்தியாலயத்திற்கு போயிருந்தேன். மாணவர்களோடு கதைத்த பின், அதிபர் வந்து சொன்னார், டீச்சர் ஒருத்தர் உங்களோட கதைக்க வேண்டுமாம் என்று சொல்லி. அந்த ரீச்சருக்கு நான் புளொட் என்று தெரியும். போனவுடனே சொன்னா, அவங்களின்ர உறவினரை புளொட் சுட்டு கொலை செய்து போட்டுது என்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். அவங்க ஆதாரமா சொல்லுறா புளொட் தான் கொலை செய்து போட்டுது என்று. நீங்க எல்லாம் எந்த அடிப்படையில் மாணவர் அமைப்பை கட்ட வாறீங்கள்? கொலைகார இயக்கம் அது இது என்று கடுமையாக பேசினாங்க. எனக்கு ஒன்றுமே தெரியாது. வட்டக்கச்சியில் புளொட் கொலை செய்த மாதிரி நான் அறியல அப்போ.

அதுக்கு பிறகு, அங்க அமைப்பு கட்ட முடியாமல் போய்விட்டது. நான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வாறேன். அப்ப பொறுப்பாளராக இருந்தவர் தோழர் கேசவன். அவரிடம் நான் சொன்னேன் இப்படி ஒரு படுகொலை நடந்தது என்று. தோழர் கேசவன் மறுத்திட்டார். கிளிநொச்சி தோழர்கள் பலருக்கும் இது தெரியாது. ரகசியமாக செய்யப்பட்டிருக்கு. எப்படியோ அந்த டிச்சருக்கு தெரிந்து விட்டது.

பிறகு எனக்கு கிளிநொச்சி தோழர்களுக்கு ஊடாக தெரியவந்தது புளொட் தான் செய்தது என்று சொல்லி. பிறகு கேசவன் ஒத்துக்கொண்டார். அப்போது நான் கேட்டேன் எந்த அடிப்படையில் முடிவு எடுத்தீர்கள் என்று. பிறகு சொன்னார், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக அப்ப கிளிமாஸ்டர் என்று ஒரு ஆள் இருந்தவர். அவருடைய அறிக்கையின் அடிப்படையில்தான், இந்த படுகொலை நடந்தது என்று. அப்போ நான் சொன் னேன், அவர் கொலை செய்யப்பட்டது சரியென்றால், புளொட் வெளிப்படையாக உரிமை கோர வேண்டும். பிழை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. அப்போ ஓம் ஓம் என்று சொல்லிப்போட்டு, உரிமை கோரவில்லை. நான் கேள்விப் பட்டேன் , உண்மையில் அந்த கொலை, கிளி மாஸ்டருக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையில், கண்ணாடிச் சந்திரனும், நேசனும் முடிவு பண்ணி, செய்த கொலை என்று.

மல்லாவிச் சந்திரன் என்று ஒருவர் இருந்தவர். அவர் மல்லாவியில் சிறுசிறு களவுகளில் ஈடுபட்டிருந்தவர். இவங்கள் அவரை விசாரணைக்காக, யாழ்ப்பாணம் கொண்டு வந்திருக்கிறார்கள். கொண்டு வந்த பிற்பாடு, அவர் கொஞ்சம் துணிவான ஆள். அவரை இந்த விஷயங்களுக்கு பயன்படுத்த தொடங்கிட்டாங்க. அவர்தான் அந்தக் கொலைக்கு அங்க பயன்படுத்தப் பட்டிருக்கிறார். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி எனக்கும், தோழர் கேசவனுக்கும் பிரச்சனை வந்துவிட்டது. கேசவனிடம் நான் இந்த குற்றச்சாட்டை வைத்தது, நேசனுக்கும் கண்ணாடி சந்திரனுக்கும் தெரியவந்தது. அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள்ள பெரிய முரண்பாடு தோன்றி விட்டது. அந்த நேரத்தில் உமா மகேஸ்வரனின் பெரிய ஒரு விசுவாசியாக இவர்கள் மாறி விட்டார்கள். இந்த தன்னிச்சையான போக்குகளுக்கு பின் தளத்தில் இருந்தும் பெரிய ஆசீர்வாதம் கிடைத்தது. உமா மகேஸ்வரனை முதல் முதல் தளத்தில், பெரிய ஐயா என அழைத்தவர்கள் இவர்கள்தான். அவ்வளவு விசுவாசம்.

அந்த நேரம் ஒட்டிசுட்டானில் ஒரு சம்பவம் நடந்தது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுப்ரமணியம் அல்லது சண்முகநாதன் என்று சொல்லி ஒரு இன்ஸ்பெக்டர். மிக அருமையான ஆள். விடுதலை இயக்கங்களுக்கு எல்லாம் பெரும் ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அவர் போலீஸ் அதிகாரியா. ?

அசோக்: ஓம். போலீஸ் பொறுப்பதிகாரி. ஆனால் அவரை இவங்கள் படுகொலை செய்திட்டாங்கள். அதுவும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக. புளொட் என்று தெரியாது.

பாகம் 11: புளொட்டின் மத்திய குழு உருவாக்கமும் அதன் துஸ்பிரயோகமும் – உமாமகேஸ்வரன் மட்டும் பொறுப்பல்ல!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 11 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 11

தேசம்: புளொட்டின் மத்தியகுழுவில் பெரும்பாலான ஆட்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்படித்தானா?

அசோக்: அப்படியல்ல. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏனைய மாவட்ட ங்களை சேர்ந்தவங்கள்தான் அதிகம்.

இதில் தோழர் ஆதவன் மலையகம், வவுனியாவில் இருந்தவர். தோழர் முரளி வவுனியா. வாசுதேவா, ஈஸ்வரன், நான் மட்டக்களப்பு. பார்த்தன், ரகுமான்ஜான், கேதிஸ்வரன் கேசவன், திருகோணமலை. சலீம் மூதூர், சரோஜினிதேவி கிளிநொச்சி, ஆரம்ப காலம் யாழ்ப்பாணம் ஆக இருக்கலாம், இருக்கிற இடம் கிளிநொச்சி. ராஜன் பரந்தன், கிளிநொச்சி.

தேசம்: செந்தில்…

அசோக்: செந்தில் செட்டிகுளம், வவுனியா.

தேசம்: தீப்பொறியில் இருந்தவரா?

அசோக்: அதுல இல்ல உமா மகேஸ்வரனோடு கடைசி காலங்களில் முரண்பட்டு வெளியேறிவர்களில் இவரும் ஒருவர்.

தேசம்: மாறன்…

அசோக்: மாறன் ஆரம்ப காலத்தில் இருந்தவர். தெல்லிப்பளை என நினைக்கிறன். அவரைப் பற்றி எனக்கு பெருசா தெரியாது. 84 இராணுவத்தால கைது செய்யப்பட்டு ஜெ யிலில் இருந்தவர். பிறகு விடுதலையாகி புளொட்டில் வேலை செய்ததாக அறிந்தேன்.

தேசம்: இதைவிட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர்…கிட்டத்தட்ட 20 பேர் இருந்திருக்கிறார்கள்…

அசோக்: முதல் 17 பேர் தான். இது 83 கடைசில உருவாக்கப்படுது. 84 ஜனவரி மத்திய குழுவில் இரண்டுபேர் மேலதிகமாக, நானும் செல்வனும் பிரேரிக்கப்படுறம்…

தேசம்: ரெண்டு பேரையும் உள்ளுக்கு எடுக்கினமோ?

அசோக்: அதுல ஒரு சிக்கல் நடந்தது இரண்டு பேரும் பிரேரிக்கப்பட்டு நான் மட்டும் உள்வாங்கப்பட்டேன். செல்வன் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், செல்வனை சேர்க்கவில்லை. பிற்காலத்தில் நான், ரகுமான் ஜான் தோழரிடம் இதைப்பற்றி கேட்டேன்.

தேசம்: எதைப் பற்றி…

அசோக்: செல்வன் சேர்க்கப்படாததற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதென. ஏன் அவர் சேர்க்கப்பட வில்லை என்பது பற்றி. தற்சமயம் வேண்டாம், அவர் ஒரு பிரச்சனைக்குரிய ஆள் என்று, தோழர் பார்த்தன் கருத்து வைத்ததாகவும், அதனால்தான் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார்.

தேசம்: அவர் இந்தியாவுக்கு வந்து விட்டு திரும்பி வாரார்…

அசோக்: ஓம் திரும்பி வந்துட்டார். ஜனவரி சென்றல் கமிட்டியில் நான் மட்டும்தான் கலந்து கொள்கிறேன்.

தேசம்: இதுல கண்ணாடி சந்திரன் என்பது யார்?

அசோக்: அவர் கழகத்தில் எல்லா அதிகாரங்களுடனும் இருந்தவர். அவரைப்பற்றி பின்னாடி தளம் பற்றி வரும்போது கதைக்க வேண்டும். ஏனென்று கேட்டால், அவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உமாமகேஸ்வரன் விசுவாசி. தளத்தில் நடந்த தன்னிச்சையான பல செயற்பாடுகளுக்கு தவறான போக்குகளுக்கு முழுக்காரணமாக இருந்தவர். பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். அவருக்கு என்ன பொறுப்பு என்றே சொல்ல முடியாது. எல்லா அதிகாரங்களும் அவருக்கு இருந்தன. தளத்தில் ஒரு கட்டத்தில் ராணுவ பொறுப்பாளராக இருந்தார். பார்த்தன் இறந்த பின் இவரைத்தான் கட்டுப்பாட்டுக்குழு தள இராணுவப் பொறுப்பாளராக நியமனம் செய்யுது. எந்தவொரு இராணுவ பயிற்சியும், இராணுவக் கல்வியும் இல்லாத ஒருவர் இராணுவப் பொறுப்பாளாராக தளத்திற்கு நியமிக்கப்படுகின்றார் என்றால், நட்புக்காக அதிகார துபிரயோகம் எப்படி நடந்திருக்கு பார்த்தீங்களா? உலக போராட்ட வரலாற்றில் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்திருக்குமா…?

இந்த நேரத்தில பின் தளத்தில் இராணுவப்பயிற்சி எடுத்த, அரசியல் ரீதியில் வளர்ந்த தோழர்கள் பலர் இருந்தனர். என்ன நடந்தது என்றால், அந்த நேரத்தில் தளப் பொறுப்பாளராக தோழர் கேசவன் இருந்தார். தோழர் கேசவனுக்கும், தோழர் ரகுமான் ஜானுக்கும் கண்ணாடிச் சந்திரன் நெருக்கமானவர் என்பதால் இந்த நியமனம் நடந்தது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் எப்ப இயக்கத்தில் சேர்ந்தவர்?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு பிற்பாடு. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவர் பிறகுதான் இயக்கத்துக்கு வாரார்.

தேசம்: ஜூலைக் கலவரத்தில் வந்து 3 மாதத்திலேயே இயக்கத்தில் சேருகிறாரா?

அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர் பிறகு படிக்க போயிட்டார் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு. கலவரத்துக்குப் பிறகு அங்கு தொடர்ந்து படிக்கமுடியாத சூழல் வரும் போது, வேலை செய்ய வாரார். வந்து மூன்று நான்கு மாதத்திலேயே மத்திய குழுவில் வந்துட்டார். அவர் மத்திய குழுவுக்கு வந்ததே வியப்புக்குரியது ஏனென்றால், பழைய நீண்டகாலமாக முழு நேரமாக வேலைசெய்த பல தோழர்கள் இருந்தாங்க.

தேசம்: இதுக்குள்ள வேறு யாரும் இப்படி குறுகிய காலத்தில் மத்திய குழுவில் வந்தவர்களா?

அசோக்: இல்லை இவர் தான் முக்கியமானவர். மற்ற ஆட்கள் எல்லாம் நிறைய காலம் இயக்கத்துடன் வேலை செய்தவர்கள். இவர் தெரிவு தொடர்பான விமர்சனங்கள் தளத்தில் இருந்தது.

தேசம்: அது என்ன விமர்சனம்?

அசோக்: எத்தனையோ நீண்ட காலமாக வேலை செய்யும் தோழர்கள் தளத்தில் இருக்கும் போது இவர் தெரிவு செய்யப்பட்டால் விமர்சனங்கள் வரும்தானே. பழைய தோழர்கள் நிறைய பேர் இருந்தவர்கள் தானே. செல்வன் உள்வாங்கப்படவில்லை. ராதாகிருஷ்ணன் என்று ஒரு தோழர் இருந்தவர். திருகோணமலையைச் சேர்ந்தவர். அகஸ்டின் செபமாலை அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் நீண்டகாலமாக. வரதன் மட்டகளப்பு தோழர். இவர்கள் எல்லாம் பழைய தோழர்கள். அவர்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை. மிகத் தீவிரமாக, தங்களுடைய வாழ்க்கையை இழந்து வேலை செய்த தோழர்கள் இவர்கள். அப்படி நிறைய தோழர்கள் இருந்தார்கள். தங்கராஜா தோழர். தோழர்களுக்கு அரசியல் பாசறைகள் நடத்தியவர். நீண்ட காலமாக இருந்தவர். இவர்கள் யாரையுமே இவர்கள் தெரிவு செய்யல்ல.

அத்தோடு பெண்கள் பிரதிநித்துவம் மத்திய குழுவில் மிகக்குறைவு. சரோஜினிதேவி மாத்திரமே இருந்தாங்க. ஜென்னியை எடுத்திருக்க முடியும். ஜென்னி தொடர்பாய் பிற்காலத்தில் விமர்சனம் இருக்கலாம். பிற்காலத்தில் எல்லாப் பேர்களை பற்றியும் விமர்சனம் இருக்குத்தானே. ஆனா அன்றைய நேரத்தில ஜென்னி தீவிரமான செயற்பாட்டாளர். காந்தீயத்தின் தொடக்க காலத்திலிருந்து புளொட்டிக்கு வந்தவர். ஆனா விரும்பல்ல. வவுனியா தோழர் செந்தில் என்று. மிகத்தீவிரமாக வேலை செய்தவர். யாழ்ப்பாண யுனிவசிற்றில படித்துக் கொண்டு வவுனியாவிலும் யாழ்பாணத்திலும் வேலை செய்தவர். இப்படி நிறைய தோழர்கள் பெயர்கள் ஞாபகம் இல்ல.

தேசம்: இந்த சென்றல் கமிட்டி உறுப்பினர்களை யார் தெரிவு செய்கின்றார்கள்?

அசோக்: கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த சந்ததியார், உமா மகேஸ்வரன், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் இவங்கதான். இது தனிநபர் அதிகாரங்களுக்கு ஊடாகத்தான் இந்த தெரிவுகள் நடந்தன.

தேசம்: ரகுமான் ஜானுக்கும் அந்த அதிகாரம் இருந்ததா?

அசோக்: ஓம் ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஐந்து பேருக்கு தான் அந்த அதிகாரம் இருந்தது. இல்லாட்டி கண்ணாடி சந்திரனை எவ்வாறு கொண்டு வர முடியும்? அதிகாரம் இருந்தபடியால் தானே. இவர்கள்தான் புளொட்டின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். வழிகாட்டிகள். உமா மகேஸ்வரனின் தன்னிச்சையான போக்குகளுக்கு, அதிகார செயற்பாடுகளுக்கு வழிகாட்டிகளாக இருந்தவங்க இவர்கள்தான். ஆரம்பத்திலேயே நாம் நேர்மையாக ஐனநாயக மத்தியத்துவ பண்புகளோடு தன்னிச்சையான போக்கு, குழு வாதம் தனிநபர் விசுவாசம், திறமையற்ற நபர்களை உள்வாங்கல் போன்றவற்றிக்கு எதிராக செயற்பட்டிருந்தால் உமா மகேஸ்வரனின் அதிகாரத்தையும் புளொட்டின் அழிவையும் தடுத்திருக்க முடியும்தானே. புளொட்டின் உட் கொலைகளுக்கும் அதன் சீரழிவுகளுக்கும் காரணமான உமா மகேஸ்வரனினால் பயன்படுத்தப்பட்ட அனேகர் சந்ததியாரல் கொண்டு வரப்பட்ட ஆட்கள்தானே. இவர்களை சரியான வழியில் அரசியல் சிந்தனை கொண்டவர்களாக ஏன் சந்ததியாரல் மாற்றமுடியாமல் போயிற்று?

யோசித்துப்பாருங்க.

தேசம்: அப்படிப் பார்த்தாலும் உமாமகேஸ்வரன், கண்ணன் இவர்கள் இரண்டு பேரும் வேற ஒரு அரசியலில் இருந்து வந்தவர்கள். அங்கால ரகுமான்ஜான், சந்ததியார், சலீம் மூன்று பேரும் கிட்டத்தட்ட தீப்பொறி…

அசோக்: சந்ததியாருக்கும் தீப்பொறி இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை பிறகு கதைப்பம். உண்மையில் விமர்சன பூர்வமாக ஆராய்ந்தோமானால் ஆரம்பகால புளொட்டில் அதிகாரம் என்பது உமாமகேஸ்வரன் போன்றவர்களிடம் மட்டும் இருக்கல்ல. சந்ததியார், ரகுமான்ஜான், கேசவன் போன்ற தோழர்களிட மும் இருந்தது. இவர்கள் புளொட்டை இடதுசாரி அரசியல் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பாக வளர்த்தெடுத்து இருக்க முடியும். இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் தானே… ஆரம்ப காலத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உமாமகேஸ்வரன் மீதோ, கண்ணன் மீதோ விமர்சனங்கள் வைக்க முடியாது . சந்ததியார், ரகுமான்ஜான் இவர்களோடு இணைந்துதானே எல்லாச் செயற்பாடுகளையும் தீர்மானித்துள்ளார்கள்.

உமாமகேஸ்வரன் போன்றவர்கள் அப்படி தன்னிச்சையான போக்கு கொண்டவர்களாக ஆதிக்கம் செலுத்துபவர்களாக உருவாகக் கூடிய சூழலை சந்ததியார், ரகுமான்ஜான் இல்லாமல் செய்திருக்க வேண்டும். அதற்கு நல்ல அரசியல் ஆளுமைகொண்ட சக்திகளை மத்தியகுழுவில் உள்வாங்கி இருக்க வேண்டும். இவர்களும் நேர்மையாக முன் மாதிரியாக நடந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது கோஸ்டி சேர்த்ததுதானே. இவர்களே தவறான வழிகாட்டிகளாகத்தானே இருந்திருக்காங்க. சந்ததியார், உமாமகேஸ்வரன் முரண்பாடு வந்ததன் பிறகு தான் உமாமகேஸ்வரன் சுயரூபம் தெரியுது. இந்த மோசமான அதிகாரத்தை தனிநபர் ஆதிக்கத்தை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியதில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. இதை முதலாவது மத்திய குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது உணரமுடிந்தது. ரகுமான் ஜான் தோழர் மிகத்திறமையாவர்.அரசியல் திறனும் இராணுவத்திறனும் கொண்டவர். கேசவன் தோழர் இடதுசாரிய அரசியல் கொண்டவர். சந்ததியாரும் அரசியல் ரீதியில் வளர்ந்தவர். இவர்கள் சரியான வழிகாட்டிகளாக இருந்திருந்தால் பின் தளத்தில் புளொட்டை இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்திருக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் இவங்களுக்கு நிறைய இருந்தது.

தேசம்: இந்த மத்திய குழு கட்டுப்பாட்டு குழு தொடர்பாக நீங்கள் முதல் தரம் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது…

அசோக்: இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது. 84 ஜனவரி கேகே நகரில் தான் மீட்டிங் நடக்குது. எனக்கும் ஒரு கற்பனை தானே மீட்டிங் தொடர்பாக. இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி எல்லாம் படிச்சுப் போட்டு, இது தொடர்பான கற்பனையோடு, மத்திய குழுக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும், அரசியல் சித்தாந்த விவாதங்கள் நடக்கும் என்று சொல்லி அங்க போனால்…

முதலாவது சென்றல் கமிட்டி மீட்டிங்கில விவாதங்கள் எல்லாம் சம்பவங்களாத்தான் இருந்திச்சு. அதுக்குப் பிறகு நடந்த சென்றல் கமிட்டீ மீட்டிங்கில இந்தியா கொடுத்த ட்ரெய்னிங் தொடர்பாக பேசப்பட்டது. எல்லா இயக்கங்களுக்கும் ட்ரெய்னிங் கொடுக்க இந்தியா முடிவு பண்ணியிருந்த நேரம். புளொட்டுக்கு கொடுக்கபடவில்லை. அப்ப புளொட் ரெயினிங் எடுக்கப்போவதா இல்லையா என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது. அது அரசியல் கருத்தியல் நடைமுறை சார்ந்த பிரச்சனை தானே.

தேசம்: ஓ.

அசோக்: ஆனால் அந்த விவாதம் கருத்தியல் சார்ந்து பெருசா நடக்கேல. கருத்தியல் சார்ந்து இந்தியா தரும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள் இதில் எதிர்கால சிக்கல்கள் எதைப்பற்றியும் உரையாட வில்லை. அவர்களை என்னென்று கையாளுவது என்பது பற்றி எதுவுமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான ஆட்கள் கட்டாயம் ட்ரெய்னிங் எடுக்கனும் என்ற நிலைப்பாட்டில்தான் கதைத்தாங்க. ரெயினிங் எடுப்பது பிரச்சனை அல்ல. குறைந்தபட்சம் இதை அரசியல் உரையாடலாக கொண்டு போய் இருக்கமுடியும். இவர்கள் யாருமே தயாராக இல்லை. டெலோவும் எடுக்குது. புலிகளும் எடுக்குது. ஈபிஆர்எல்எஃப்பும் எடுக்குது. நாங்களும் எடுக்கப் போவம் என்டு தான் ஒரு முடிவுக்கு வாராங்க. அதுல வார நன்மை தீமை – அதனால வாற பிரச்சனை இது பற்றி யாரும் ஆராயத் தயாராக இல்லை.

தேசம்: இந்த வங்கம் தந்த பாடம் எந்தகால கட்டத்தில வெளியிடப்பட்டது…?

அசோக்: வங்கம் தந்த பாடம் எண்பத்தி மூன்று காலகட்டத்தில் வெளியானது.

தேசம்: அப்படி என்டா நீங்க போன கூட்டத்திற்கு முன்பாகவே அது வெளியிடப்பட்டுட்டு விட்டது?

அசோக்: அதுக்கும் மத்திய குழுவுக்கும் தொடர்பில்லை. அது இலங்கையில் வெளியிடப்பட்டது. அது மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்பு அது வெளியிடப்பட்டது. நாங்க மாவட்ட அமைப்பாளர்கள் இருந்தம்தானே அந்த காலத்திலேயே அடிக்கப்பட் டது…

தேசம்: அதாவது இதை வெளியிட்ட அவர்களுக்கு ஒரு கருத்தியல் இருக்குதானே…?

அசோக்: ஓ நிச்சயமாக.

தேசம்: அப்ப இந்தியா தொடர்பான அரசியல் மற்ற ஆபத்துகள் பற்றி விவாதிக்கப்படலையா..?

அசோக்: தமிழ் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் எங்களிடம் சரியான அரசியல் பார்வை இருந்தது. அதன்ற வெளிப்பாடுதான் வங்கம் தந்த பாடம். எங்களிடம் இருந்த தெளிவு மத்திய குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. மத்தியகுழு எப்படி உருவாக்கட்டது என்று முன்னமே கதைத்திருக்கிறம். புளொட்டில் ஆரம்ப காலங்களில் இருந்த லும்பன்களும், கடடுப்பாட்டுக்குழுவில் இருந்த உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான்ஜான் விசுவாசிகளும்தானே மத்தியகுழுக்கு தெரிவு செய்யப்பட்டவங்க. அரசியல் கோட்பாட்டு நடைமுறை கொண்ட நேர்மையான தோழர்கள், எந்த முடிவெடுக்கும் அதிகாரமற்றவர்களாக வெளியில்தானே இருந்தாங்க.

மாவட்ட அமைப்புகளில் ஏனைய பொறுப்புக்களில் ஈழத்தில் இருந்த தோழர்கள் கருத்தியல் சார்ந்து வளர்ந்தவர்கள். இந்த மாவட்ட அமைப்பாளர்கள் எல்லாரும் மத்திய குழுவுக்கு போ கவில்லைத்தானே. மத்திய குழுவில் சிறை உடைப்பிலிருந்து வெளியே வந்தாக்கள்தான் அதிகம் பேர்.

தேசம்: இதில மாவட்ட பிரதிநிதிகளோ – மாவட்ட அமைப்பாளர்களோ இந்த மத்திய குழு அமைப்பில இருக்கல…? ஒராள் ரெண்டு பேர் இருந்திருக்கலாம்…?

அசோக்: முரளி, ஈஸ்வரன், குமரன் நான் எல்லாம் இருந்தனாங்க. எங்களை விட வளர்ந்த வேறு தோழர்கள் இருந்தார்கள். அவர்களையும் உள்வாங்கி இருந்திருக்கலாம்.

தேசம்: இந்தியாட்ட பயிற்சி பெறுவதா…? இல்லையா …? என்ற விவாதம் வங்கம் தந்த பாடம் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு கருத்தியல் ரீதியான விவாதமா அங்க நடைபெறல..?

அசோக்: இது ஒரு நல்ல கேள்வி. வங்கம் தந்த பாடம் இந்தியாவுக்கு, அதனுடைய செயற்பாடுகளுக்கு எதிரான புத்தகம். வங்களாதேசில் இந்தியாவினுடைய வருகையும், அதனுடைய ஆக்கிரமிப்பு பற்றிய அது தொடர்பான ஒரு புத்தகம். வங்கம் தந்த பாடம் புத்தகத்தை நாங்க படிச்சிருப்பம் தானே. எனவே இது தொடர்பான பார்வையும், இந்தியா தொடர்பான எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தானே வேணும். அது எங்கேயும் வரலை. அப்படிப் பார்த்தால் புளோட்டா இந்த புத்தகம் அடிச்சது என்ற ஒரு கேள்வி தான் வரும் உங்க கிட்ட. அதுக்குப் பிறகு நான் கலந்து கொண்ட மத்திய குழுக் கூட்டம் எதுலயும் இந்த இந்திய ஆபத்து தொடர்பா பெருசா பேசப்படல. இந்த வங்கம் தந்த பாடம் எங்களுக்கு ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கொடுத்திருக்கணும். அது எப்பவுமே நடக்கல.

தேசம்: அந்த வங்கம் தந்த பாடத்தை யார் வெளியிட்டது. ?

அசோக்: 83ல் வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். தோழர் சந்ததியார், ரகுமான் ஜான், கேசவன் முக்கியமானவர்கள். இது மொழிபெயர்ப்பு புத்தகம். பங்களாதேஷ் இராணுவத்தில் இருந்த அபுதாகிர் என்கிற இராணுவத் தளபதி வெளியேறி J.S.D. என்ற கட்சி உருவாக்கினாங்க… மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி இது. அபுதாகிர் பங்களாதேசில் இந்திய மேலாதிக்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் சதியையும் அம்பலபடுத்தினார். அமெரிக்க C.I.A யும், இந்தியாவும் சேர்ந்து அவரை தூக்கில போட்டுவிட்டது. அபுதாகிரின் நீதிமன்ற சொற்பொழிவின் தமிழாக்ககம்தான் இது.

தேசம்: இது வெளியிடப்பட்டது உமா மகேஸ்வரனுக்கு தெரியுமா..?

அசோக்: தெரியும். தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் இது அச்சிடப்பட்டது.

தெரியாமல் செய்திருந்தால், பிரச்சனை வார காலத்தில் அது ஒரு பெரிய குற்றச்சாட்டா எங்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் தானே. அப்ப அது எங்கேயும் யாருக்கும் எதிராக வைக்கப்படல. ஆனா சந்ததியார் தொடர்பாக இந்தியா ரோவிடம் சந்ததியார்தான் இதனை வெளியிட்டவர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக அறிந்தேன். எங்களுக்கு எதிராக குறிப்பாக எனக்கு, தங்கராஜா தோழர், சண்முகலிங்கம் போன்றவர்களுக்கு எதிராக நாங்க JVP யில் இருந்து போனபடியால், சீனாச்சார்பானவர்கள் என்றகுற்றச்சாட்டு ரோவிடம் சொல்லப்பட்டது.