ரஞ்சித் விதானகே

ரஞ்சித் விதானகே

நட்டத்தை ஈடு செய்வதற்காக மின் கட்டண அதிகரிப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி மின்கட்டணத்தை அறவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (13) முறைப்பாடு செய்திருந்தது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே மேலும் கூறுகையில்,

நாம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளோம். ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிப்பிற்கு எதிராக இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளோம்.

அதாவது 30 அலகினை விட குறைந்த அளவில் பாவித்த மின் அலகொன்றுக்கான கட்டணமாக செலுத்தப்பட்ட 8 ரூபாய் தற்போது 60 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.

30 அலகுகள் பாவித்த ஒருவரின் மின் கட்டணம் இதன்மூலம் 420 ரூபாவாக செலுத்த வேண்டி ஏற்படும். மேலும் நாட்டு மக்கள் ஜனவரி மாதத்திலிருந்து 2,500 ரூபாவாக செலுத்த வேண்டி ஏற்படும்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு மின்வலு அமைச்சரை பார்க்கும் போது அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது பாதாளக் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் போன்று செயற்படுகிறார். பாவனையாளர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை விடுக்கிறார். அதாவது மின்கட்டணத்தை அதிகரிக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் முதல் நீண்ட மின்துண்டிப்பை முகங்கொடுக்க வேண்டும் என்கிறார்.

நுகர்வோர்கள் என்ற வகையில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துளோம்

மேலும் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய சாதாரண தெரு மட்டத்திற்கு மாத்திரமே அதிகரிக்க முடியும். அதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படும் என்பது நியாயமற்ற தாகும்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் நியாயமற்ற தாகும். மேலும் இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.