பட்டலந்த விவகாரம் ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பம்: மேற்கின் செல்லப் பிள்ளை ரணிலின் நாட்கள் எண்ணப்படுகின்றதா ?
மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க முதலாளித்துவத்தின் ஒரு சிந்தனைவாதி என்பது இலங்கையர் பலரும் அறியாத விடயம். ரணில் விக்கிரமசிங்க உலகின் செல்வந்த மேற்கு நாடுகளின் தலைவர்களால் நண்பராக அணுகப்படும் ஒருவர். 2018இல் நல்லாட்சி அரசை உருவாக்கி ரணிலைப் பிரதமராக்குவதற்காக முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயர் இரண்டு வாரங்கள் யாருக்கும் தெரியாமல் இலங்கையில் தங்கியிருந்து காய் நகர்த்தியிருந்தார். அதற்கடுத்து அரகலயா போராட்டத்தைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும் அமெரிக்காவின் மேற்குலகின் ஆதரவினாலேயே.
ஆனால் தற்போது அல்ஜசீரா ரணில் விக்கிரமசிங்கவை லண்டனுக்கு அழைத்து கிடுக்கு பிடியுள் சிக்க வைத்துள்ளது. தமிழ் மக்கள் ரணிலை நம்பிய அளவுக்கு சிங்கள மக்கள் ரணிலை நம்பியிருக்கவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் ரணிலக்கு பெரும் விம்பம் கட்டமைக்கப்பட வில்லை. அதனை கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் காணக் கூடியதாக இருந்தது. அல்ஜசீரா நேர்காணலில் ஊடகவியலாளரால் ரணிலிடமிருந்து புதிய தகவல்கள் எதனையும் வெளிக்கொணர முடியவில்லை. ஆனால் ரணில் தனக்குத் தானே மண்ணளிப் போட்டுக்கொண்டார். பட்டலந்த வதைமுகாம் விவகாரம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தட்டிக்கழித்துவிட்டார்.
அதிலிருந்த ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பமாகியுள்ளது. 1990க்களுக்கு முன்பாக ஜேவிபி உறுப்பினர்கள் இந்த பட்டலந்த வதைமுகாமில் சித்திரவை செய்யப்பட்டதும் அதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த தொடர்பு பற்றியதே இந்த பட்டலந்த அறிக்கை. இந்த அறிக்கையை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்துக்கு கொண்டுவர இருந்த சமயம் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் ரணிலைப் பிரதமராக்கி இந்தப் பட்டலந்த அறிக்கையை காணாமலாக்கினார். இந்த அறிக்கையின் ஒரு பிரதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய நண்பரான இக்னிசியஸ் செல்லையா மனோரஞ்சனிடம் இருந்துள்ளது. அதிலிருந்தே இந்தப் பட்டலந்த பூகம்பம் மீண்டும் அதிர்வை ஏற்படுத்துவதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.
தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜேவிபி அரசும் தங்களுடைய போராளிகள் அன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்க முனைகின்றனர். இந்த அறிக்கை அடுத்தவாரம் பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசு அறிவித்துள்ளது.
பட்டலந்த விவகாரத்தை அன்று புலனாய்வு செய்த ஊடகவியலாளரே யாழ் நூலக எரிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ரணிலினதும் பங்களிப்பை ஆதாரத்துடன் நூலாக வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புலனாய்வுச் செய்தியாளர் நந்தன வீரரத்ன பட்டலகந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரம் பற்றி சூம் விழயாக மார்ச் 16இல் கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளார். செல்லையா மனோரஞ்சன் இந்நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளார்.
ஆனால் பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ள சிவஞானம்இ இந்த பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படி தான் இப்போது நடக்கிறது. இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்.
நாட்டில் உள்ள பேரினவாத ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்து நாட்டைச் சீரழித்ததில் பங்கெடுத்துக்கொண்ட தமிழரசுக் கட்சி இவ்வாறான பேரினவாதசக்திகள், மனிதவிரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேச்சளவிலும் தெரிவிக்கவில்லை. மாறாக யாழ் நூலகத்தை எரித்தவர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசியல் செய்வதையே இவர்கள் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
பட்டலந்த விவகாரம் சூடு பிடித்தால் ரணிலுக்கு மாமா வேலை செய்த அந்த அர்த்தத்தில் எண்ணக் கூடாது, தமிழ் கட்சிகளுக்கு அது பிரச்சினையாகவே இருக்கும்.