ராஜபக்ஷக்கள்

ராஜபக்ஷக்கள்

மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். – சாகர காரியவசம்

எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்; மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கூட்டத்தை நடத்த முடியவில்லை.அதே போல் 2022 ஆம் ஆண்டு முறையற்ற போராட்டத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியவில்லை.

பாரிய போராட்டத்துக்கு மத்தியில் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.மே தின கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பை சகல அரசியல் கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எமது மக்கள் பலத்தை நாளைய தினம் கெம்பல் மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் வெளிப்படுத்துவோம்.மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் வெகுவிரைவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள்.

மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான எமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுக்கூட்டங்களை இனி முன்னெடுப்போம் என்றார்.

“சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பையே மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ .” – உதய கம்மன்பில

“சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இடம் பிடித்துள்ளார்.” என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பல்வேறு நோக்கங்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது. ஆகவே 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்த்தோம். இருப்பினும் எமது நிலைப்பாடு இறுதியில் தவறானது.

2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் ராஜபக்ஷர்கள் தான் அதிக ஆதிக்கம் கொண்டிருந்தார்கள்.சிரேஷ்ட அமைச்சர்கள் ராஜபக்ஷர்களின் இளவரசரான நாமல் ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெற வேண்டிய சூழலை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்தினார்.

அமைச்சரவையில் பொருளாதார துறைசார் நிபுணர்கள் அங்கம் வகித்த போதும் நிதி நிலைமை தொடர்பில் அடிப்படை தகைமை கூட இல்லாத பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் 55 அரச திணைக்களங்கள் அனைத்தும் அவரது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ராஜபக்ஷர்கள் அமைச்சரவை முழுமையாக ஆக்கிரமித்தமை தொடர்பில் வாராந்தம் இடம் பெறும் கட்சி தலைவர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டம் ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்களின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது.

தவறான பொருளாதார தீர்மானங்கள் முழு நாட்டையும் சீரழிக்கும் என நாங்கள் எடுத்துரைத்ததை தொடர்ந்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறையிட்டார். சகோதரரின் தவறான ஆலோசனைகளை கேட்டு கோட்டாபய ராஜபக்ஷ எங்களை பதவி நீக்கினார்.எம்மை பதவி நீக்கி விட்டு மூன்று மாதத்திற்கு பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

ராஜபக்ஷர்களின் குடும்ப ஆதிக்கத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமாக்கப்பட்டது.போராட்டத்தின் ஊடாக ராஜபக்ஷர்களை மக்கள் புறக்கணித்தார்கள். ஆனால் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ராஜபக்ஷர்களின் தவறான பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்.மக்கள் படும் துயரத்தை அவர் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைய நேரிடும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார்.  அதனால் தான் தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்கிறார்.கௌரவமான முறையில் செயற்பட்டால் இறுதி காலத்தை கௌரவமாக கழிக்கலாம் என்றார்.

ராஜபக்சக்கள் மீதான தடையின் பின்னணியில் கனேடிய பிரதமர்..?

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்கள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதற்கு தலைமை வகித்தவர்களும் இணைக்கப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் அலுவலகம் கருதுகின்றது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு கனடா பயணத் தடை விதித்திருந்தது.

இதேவேளை கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கையை அவர் பின்பற்றவில்லை என்பதனாலேயே இந்த நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.

உகண்டாவில் ராஜபக்ஷக்கள் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு – வெளியாகியுள்ள அறிக்கை !

இலங்கையில் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுதலித்து உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

Gallery

உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக பல முகநூல் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வெளியான முகநூல் பதிவுகளின் குற்றச்சாட்டுகளை செரினிட்டி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முற்றாக மறுத்துள்ளது.

“வெளிநாட்டு உள்ளாடைகள் தொடர்பில் வெட்கப்படுங்கள்.” – வியாழேந்திரன்

உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ளது.அரிசி உட்பட சிறுதானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் இருந்து மீளவே இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடுகள் முன்னேற கிராமங்கள் முன்னேற்றப்பட வேண்டும். கொரோனாவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.  எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்தை முன்னேற்ற  5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறையுடன் தொடர்புள்ள ஏனைய அமைச்சுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து முன்னேற்ற வேண்டும். காணிப்பிரச்சினைகளை கால இழுத்தடிப்பின்றி விவசாய நடவடிக்கைகளுக்கு  பாதிப்பின்றி முன்னெடுக்கும் வகையில் வழங்குமாறு  அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பணித்துள்ளார்.

விவசாய முன்னேற்றத்துக்கு  72,492 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் ஜனாதிபதி போன்றோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. ஆனால்  எதிர்கால சந்ததியின் உருவ பொம்மைகளே எரிக்கப்படுகின்றன. இரசாயன பசளை பயன்பாட்டால் பாடசாலை மாணவர்களுக்குக் கூட புற்றுநோய் ஏற்படுகிறது.

ஒருநாட்டின் வருமானம் வரி, வெளிநாட்டு முதலீடு, அந்நியச்செலாவணி என்பன ஊடாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்துறை குறித்து நிதி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு கிராமங்களையும் ஒவ்வொரு துறைசார் உற்பத்திக் கிராமங்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை முன்னேற்றுவதற்காக வீதி கட்டமைப்பு,குளம், அணைக்கட்டு என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பாரபட்சமின்றி அனைத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

எமது அமைச்சின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழுந்து, பயறு, இஞ்சி உற்பத்தியை மேம்படுத்தி   மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” – இரா.சம்பந்தன்

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர். இனி ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.

நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் அடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசுக்கு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது”  என்றார்.

பத்து மாதங்களில் ராஜபக்ஷக்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு..? – அம்பலப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி !

தற்போதைய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

மேலும் பேசிய அவர் ,

குறித்த பெ2.3 டிரில்லியன் பணத்தை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது..? என வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை தீர்பதற்கே குறித்த கடன்தொகை பெறப்பட்டது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் தாமரை கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள், விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெரும் தொகை கடனாகப் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.