ரிஷாத் பதியுதீன்.

ரிஷாத் பதியுதீன்.

மஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலவரம் – அடித்து நொறுக்கப்பட்ட ரிசாத் பதியூதீனின் வாகனம் !

வவுனியாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிசாத் பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பம் வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கூட்டத்தின்போது அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

சற்றுநேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.

குறித்த கலவரத்தில் ரிசாத் பதியூதீனின் வாகனத் தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது.

அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொறுக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது.

குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்த பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.

 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.

 

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலவர நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

1990இல், வடக்கிலிருந்து புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக செய்த இனச்சுத்திகரிப்பு இன்றும் தொடர்கிறது.” – பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் !

வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

“வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்தவே முயற்சிக்கின்றனர்.

 

மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்காளர் இடாப்பிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அரச அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும். 1990இல், வடக்கிலிருந்து புலிகள் இதே பாணியில்தான் முஸ்லிம்களை வெளியேற்றினர். இன்னும், இதே சிந்தனையில் அரச அதிகாரிகள் செயற்படுவது வெட்கக்கேடானது.

 

நான் அமைச்சராக இருந்தவேளை, முப்பதாயிரம் தமிழர்களை மீளக்குடியேற்றினேன். ஆனால், முஸ்லிம்களை குடியேற்ற வடக்கிலுள்ள அதிகாரிகள் விரும்பவில்லை. எனினும், அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று பலத்த சவால்களுக்கு மத்தியிலேதான், ஏழாயிரம் வீடுகளை நிர்மாணித்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

 

முல்லைத்தீவில் முஸ்லிம்களை குடியேற்ற காணிகளை துப்புரவு செய்தபோது, எங்களது முயற்சிகளுக்கு குறுக்காக நின்ற சிலர், எங்களை கொன்றுவிட்டுத்தான் முஸ்லிம்களை குடியேற்ற வேண்டும் என்றனர். எங்களிடம் அதிகாரம் இல்லாத நிலையில், முஸ்லிம்களின் காணிகளை இலஞ்சம் பெற்று வேறு பலருக்கு விற்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எனவே, எஞ்சியுள்ள வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற முறையான வேலைத்திட்டத்தை கோருகின்றேன். இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போருக்கே எதிர்வரும் தேர்தலில் எமது ஆதரவு.

 

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஜெனீவாவில் வழங்கப்பட்ட உறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவர்கள் மீள்குடியேறும் வரை எதிர்கொள்ளும் தொழில்ரீதியான சவால்களை தீர்ப்பதற்கும் நடவடிக்ககைள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

“எனக்கு நடந்த அநியாயம் எந்த சிறுபான்மை தலைவருக்கும் ஏற்படக்கூடாது.” – ரிஷாத் பிரார்த்தனை !

எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் சிறுபான்மை சமூகத்தின் எந்தவொரு தலைமைக்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் வந்துவிடக் கூடாது என்பதை பிரார்த்தனையில் கேட்டுக் கொண்டேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் காட்டப்பட்ட பொழுது எங்களை பல சந்தேக பார்வையோடு காட்டுவதற்கான பல சதிகளை பல ஊடகங்கள் திட்டமிட்டு செய்தது. குண்டு வெடித்த தினத்தில் இருந்து சில ஊடகங்கள் குண்டு தாக்குதலோடு எங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததை நாட்டு மக்க்ள அறிவார்கள்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது மிகவும் ஆபத்தான சட்டம் இந்த சட்டத்தினை நீங்குமாறு உலகமே பேசிக் கொண்டிருக்கின்றது. ஜீஎஸ்பிளஸ்ஸை நிறுத்துவோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மோசமான சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன்.

எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பாதுகாப்பு, இருப்பு, காணி பிரச்சனைகள் போன்று பல பிரச்சனைகள் இருக்கின்றது. இவற்றுக்காகத்தான் நாங்கள் அரசியல் செய்கின்றோம் என்றார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி – முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – ரிஷாத் பதியுதீன் அழைப்பு !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்” என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சிறுபான்மை இன மக்களை இலக்குவைத்து இந்த அரசு மோசமான அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருகின்றது. இதற்கு எதிராகவும் ஐ.நாவிடம் நீதி வேண்டியும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆதரவு வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. அத்துடன் இந்தப் பேரணியில் முஸ்லிம் மக்கள் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையூடாக நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

இந்தநிலையில், எமது அழைப்புக்கிணங்கவும் அரசுக்கு எதிரான தங்கள் மனக்குமுறல்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த எழுச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில்  பெருந்திரளான முஸ்லிம்கள் வீதியில் இறங்கி பேரணியில் பங்கேற்று தமது முழு ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழ் மக்களுடன் கைகோர்த்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எனது கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான இந்த எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது.

தமிழ் – முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பேரெழுச்சியைப் பார்த்தாவது இலங்கை அரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு நீதியை வழங்க ஐ.நா. முன்வரவேண்டும். இது ஐ.நாவின் பிரதான கடமையாகும் என்றார்.