கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடியது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபரை அரசின் கொறடாவாக்கியது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் சொந்தக் கட்சிக்குள்ளேயே பொரிஸ் ஜோன்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது.
அதனையடுத்து ரிஷி சுனக் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்யத் தொடங்கினர். இதனால் பொரிஸ் ஜோன்சன் பாரிய நெருக்கடிக்குள்ளானார்.
இதன் காரணமாக வேறுவழியின்றி தனது பிரதமர் பதவியை கடந்த ஜூலை 7 ஆம் திகதி, பொரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்தார்.
அதனையடுத்து பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவத்துக்காக தன்னுடன் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதன்மூலம் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஆளும்கட்சியில் கடந்த ஏழு வாரகாலமாக இடம்பெற்ற இந்தத் தலைமைத்துப் போட்டியின் முடிவை வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில் வைத்து கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் சேர் கிறகம் பிராடி அறிவித்தபோது லிஸ் ட்ரஸின் ஆதரவாளர்கள் கரவொலியை எழுப்பி ஆரவாரம் செய்திருந்தனர்.
கென்சவேர்ட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அளித்த 82.6 வீத வாக்குப்பதிவில் கிட்டிய வாக்குகளில் லிஸ் ட்ரசுக்கு 81,326 வாக்குகள் கிட்டியிருந்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக்கிற்கு 60,399 வாக்குகள் கிட்டியிருந்தன.
இந்த அறிவிப்பின் பின்னர் கென்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்ட வெற்றியாளரான லிஸ் ட்ரஸ் தனது உரையை வழங்கிய போது பிரித்தானியாவில் உயரும் எரிசக்தி செலவுகளை சமாளிக்க ஒரு திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாளை ராணி எலிசபெத்தை ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையில் சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை வழங்குவார்.
அதன் பின்னர் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ், ராணியின் நியமனத்திற்குப் பின்னர் பிரதமாராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.