ரோஹினி மாரசிங்க

ரோஹினி மாரசிங்க

“தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் தலைவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை.” – வாசுதேவ நாணயக்கார காட்டம் !

“நாட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் , அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.” என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கருத்திற் கொள்ளாமல் , விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் தலைவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசாங்கம் இவ்வாறு ஏதேனுமொரு நடவடிக்கையை எடுக்குமானால் , அது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே கருதப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கருத்திற் கொள்ளாமல் , நியாயத்தின் பக்கம் உறுதியாகவுள்ளனர்.

தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் , அதனைக் காலம் தாழ்த்த இடமளிக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது ஆணைக்குழுவின் கடமையாகும்.

அதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு தற்போது முன்னெடுத்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக தற்போதைய தேர்தல் ஆணையாளரை பதவி நீக்கி , தமக்கேற்றாற் போல் செயற்படும் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

பக்க சார்பற்ற இவ்விரு தலைவர்களும் நியாயத்தை நிலைநாட்டியுள்ளனர். எனவே இவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் ஏதேனுமொரு நடவடிக்கையை எடுக்குமானால் , அது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே கருதப்படும். அரசாங்கம் அதன் தேவைக்கு ஏற்றாற் போல் தீர்மானங்களை எடுப்பதற்கு இனியொரு போதும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை.

என்றுமில்லாதவாறான புதிய கூட்டணியொன்றை நாம் அமைத்திருக்கின்றோம். இந்தக் கூட்டணியின் ஊடாக அரசாங்கததுடன் எந்தவொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை தம்மிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

அவர் மக்களுக்கு சார்பான தீர்மானங்களை எடுக்காவிட்டாலும் , மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம். நாட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் , அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

இலங்கையில் சிறுவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் முகமாக சிறப்பு பிரிவு ஆரம்பம் !

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு,  சிறுவர்களின் உரிமைகளை  பாதுகாப்பதை உறுதி செய்யும் முகமாக சிறப்பு பிரிவொன்றினை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவின்  தலைமைத்துவத்தின் கீழ், இந்த புதிய பிரிவு, உலக சிறுவர் தினத்தை மையப்படுத்தியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் விதமாக இந்த புதிய பிரிவு பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.