லக்ஷ்மன் கிரியெல்ல

லக்ஷ்மன் கிரியெல்ல

இலங்கையில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் – லக்ஷ்மன் கிரியெல்ல

”நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபுறம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றார். மறுபுறம் முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.

நாம் இது தொடர்பாக சிந்தித்தே பல விடயங்களை வினவுகின்றோம். தனியார் மயமாக்கல் மறுசீரமைப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதனை புதிய அரசாங்கம் இடைநிறுத்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தார். அந்த பணிகள் புதிய அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அவை கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது” இவ்வாறு லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனச்சாட்சி இருந்தால் சலுகைகளை பெறமாட்டார் – லக்ஷ்மன் கிரியெல்ல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகிய நிலையில் சிறப்புரிமை பெற்று வாழ்வது தார்மீக ரீதியாக சரியானதா என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சரியான முறையில் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறாமல் ஓடிவிட்டார்.எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் அதிபருக்கான சிறப்புரிமைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் அனைத்தும் அரசாங்கம் வழங்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு உதவ சர்வதேசநாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை – கோத்தாபாய என்ன செய்ய போகிறார்..?

மோசமான பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவியில் இருக்கும் வரை அந்த நிதியுதவிகளை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி  இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து  மீண்டு வருவதற்கு தீர்வாக அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர் நிதி உதவி கோரியிருந்தார்.

எனினும் அந்த நிதி உதவி கோட்டாபய ராஜபக்ச இல்லாத அரசாங்கத்திற்கே வழங்கப்படும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதென உங்களுக்கு தெரியுமா? புதிய அரசாங்கத்திற்கே நாங்கள் உதவுவோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது புதிய வைன் பழைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளது. இன்னமும் அமைச்சரவை ஒன்று நியமிக்க முடியாமல் போயுள்ளது. கோட்டாபய இல்லாத அரசாங்கம் ஒன்றிற்கே உதவிகள் கிடைக்கும். எனினும் தற்போது அரசாங்கம் ஒன்றே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சி !

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (06.04.2021) கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அதற்காகவே வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும்” – லக்ஷ்மன் கிரியெல்ல

” பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும்” என லக்ஷ்மன் கிரியெல்p தெரிவித்துள்ளார்.

என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (25.11.2020) இடம்பெற்றுவரும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாததில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிரைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இருப்பினும் தற்போது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதே நிலைமை தொடராது.

மேலும் அதிகார பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

“சிறையில் இருக்கும் ரிஷாத் பதியுதீன் நடத்தப்படுவது போலவே பிள்ளையானும் நடத்தப்பட வேண்டும் ” – லக்ஷ்மன் கிரியெல்ல

“சிறையில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மாதிரி கவனிக்கப்படவேண்டும். பிள்ளையானுக்கு ஒருவிதமாகவும் ரிஷாத் பதியுதீனுக்கு ஒரு வேறுவிதமாகவும் செயற்படமுடியாது” என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

பாராளுமன்றம் நேற்று ( 18.11.2020)  கூடிய போது  எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர அனுமதிக்குமாறு நாங்கள் ஆரம்பத்தில் கேட்டபோது, அதற்கு சபாநாயகரான நீங்கள், சிறைச்சாலையில் கொரோனா பிரச்சினை இருப்பதால் சிறைச்சாலைகளில் இருப்பவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவதால் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கட்சி தலைர்கள் கூட்டத்தின்போது தெரிவித்தீர்கள். ஆனால் ரிஷாத் பதியுதீன் தற்போது இருப்பது கொரோனா குவியலிலாகும்.

அத்துடன் சிறைச்சாலைகளில் இருக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வைபவங்களுக்கு செல்கின்றனர். சிறையில் இருக்கும் பிள்ளையான் மட்டக்களப்பில் ஒரு வைபவத்துக்கு சென்று அங்கு திறப்பு விழாவொன்றில் கலந்துகொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். அவர் மட்டக்களப்பில் இருந்தாலும் சிறையிலே இருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உங்களிடமே இருக்கின்றது. இதனை தெரிவிப்பதற்கு எங்களுக்கு வேறு யாரும் இல்லை.

சிறையில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மாதிரி கவனிக்கப்படவேண்டும். பிள்ளையானுக்கு ஒருவிதமாகவும் ரிஷாத் பதியுதீனுக்கு ஒரு வேறுவிதமாகவும் செயற்படமுடியாது. அதனால் சுகாதார வழி முறைகளை கடைப்பிடித்தேனும் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மட்டக்களப்பிலே இருக்கின்றார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம். அத்துடன் இதில் இருக்கும் பிரச்சினை தொடர்பாகவும் நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றோம் என்றார்.