லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம்

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம்

“நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு கை அடையாள செயற்றிட்டம் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் இலவச தொழிற்கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம் ஒன்று 17.12.2023 அன்று கிளிநொச்சி பிரதான பேருந்து தரிப்பிடம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.

 

கிளிநொச்சி உள்ளிட்ட இலங்கையின் வடபகுதியில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதன் நீட்சியாகவே சமூக சீர்கேடுகள் மற்றும் சமூக வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் அண்மை ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாக செயற்திட்ட ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருந்தனர்.

 

காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்கள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் – பொதுமக்கள் – மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கை அடையாளங்களை போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பதிவு செய்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு செயற்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் “லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கான தொழில்கல்வியையும் அத்துடன் இணைந்த வகையிலான சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்ற ஓர் நிறுவனமாகும்.

 

அண்மையில் நமது இளைஞர்கள் இடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் அனைவருடைய ஆதரவும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நிகழ்வுக்கான அனுமதி தந்து – இன்றைய தினம் பாதுகாப்பும் வழங்கி நமது சமூக மாற்றத்திற்கான முயற்சிக்கு ஆதரவு வழங்கிய கிளிநொச்சி மாவட்ட பொலிஸாருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

“நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் / எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு செயற்திட்டத்துக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினர் அழைப்பு !

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம்.

 

எதிர்வரும் 17.12.2023 அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கிளிநொச்சியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம் ஒன்றை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் கிளிநொச்சி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் தேசம் நெட் இற்கு வழங்கிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார். “அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை இளைஞர்களை தாண்டி நம் சமூக பாடசாலை மாணவர்கள் இடையேயும் ஊடுருவி எதிர்கால சந்ததியை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. எனவே கிளிநொச்சி மக்களாக நாம் விழித்துக்கொள்ள வேண்டிய ஓர் கட்டத்தில் இருக்கிறோம்.

 

எனவே “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான நமது கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டத்தில் கலந்து கொண்டு நமது சமூக மாற்றத்திற்கான செயற்திட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்” என கிளிநொச்சி மக்களுக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இடம் :- கிளிநொச்சி பொதுச் சந்தை – கிளிநொச்சி பொது பேருந்து நிலையம்.

திகதி:- 17.12.2023

நேரம் :- காலை 10.00 மணி

கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் – கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும் அமரர் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச தொழில்கல்வி நிறுவனமாக கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் – சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் 52ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வு எதிர்வரும் 18.11.2023 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் கல்வி பண்பாட்டு மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான திரு.சி.கருணாகரன் தலைமையில் இடம்பெறும் மேற்குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் 100 ஆளுமைகளை ஆவணப்படுத்தி வெளிவரும் “யார் எவர் – கிளிநொச்சி 2023” என்ற நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன் சிவஜோதி ஞாபகார்த்த விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் கடந்த 19.08.2023 அன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஸ்தாபகர் திரு.தஜெயபாலன் தலைமையில் நடைபெற்றதுடன் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திரு.அ.கேதீஸ்வரன், சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் , திரு.தவச்செல்வம், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கற்றல் நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்திருந்த [பிரிவு 2022/LA/ A, பிரிவு 2022/LA/B, 2023/LA/ A ] 140 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் – சிறப்பு நிலைகளை பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் இணைவினால் உருவாக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களினை ஆவணப்படுத்திய மூன்று மொழிக் கையேடு ஒன்று கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அவள் தேசத்தின் பெருமை ” – லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அவள் தேசத்தின் பெருமை என்ற தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 26.03.2023 கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் – பெண் விடுதலை பற்றிய கருத்துக்களும் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு மகாசக்தி மகளிர் சம்மேளன தலைவி திருமதி சத்தியமூர்த்தி லலிதகுமாரி தலைமை ஏற்று நடத்தி இருந்தார்.
தலைமை உரையில் கருத்து தெரிவித்திருந்த லலிதகுமாரி அவர்கள் ” வழமையாக அரசு நிறுவனங்களோ – அல்லது அதன் துணை நிறுவனங்களோ மட்டுமே இந்த மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இப்படியான ஒரு நிகழ்வு பல மாணவிகள் கல்வி கற்கக்கூடிய ஒரு திறன் விருத்தி மையத்தில் நடைபெறுவதையிட்டு நான் பெருமகிழ்வடைகிறேன். பெண்கள் சார்ந்த மாற்றம் என்பது பெரிய அளவிலான இடங்களில் இருந்து இடம்பெறுவதை காட்டிலும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய ஆண்பிள்ளைகள் ஆக குறைந்தது வீட்டில் உங்களுடைய வேலைகளை அம்மாவுக்கு பொறுப்பு கொடுக்காது நீங்களே செய்வது மாற்றத்திற்கான முதலாவது அடியாகும். கடந்த காலங்களைப் போல் அல்லாது இன்றைய நாட்களில் பெண்கள் முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். சில சமூக தடைகள் அவர்களுக்கு இருந்தாலும் கூட அதனையும் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்து பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை இன்னும் கிராமங்கள் முழுவதும் சென்றடைய வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளைப் பெற்று வன்னி மண்ணின் பெருமையை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி அகிலத்திரு நாயகி ஸ்ரீசெயானந்தபவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் தயார்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகமும் – கலாச்சாரமும் பெண்களை பாதுகாக்கின்றதா ..? அல்லது அடிமைப்படுத்துகின்றதா என்ற தலைப்பிலான பட்டிமன்றம் பலருடைய வரவேற்பையும் பெற்றிருந்தது.
நிகழ்வுகளின் இறுதியில் தேசிய அரங்கிலும் – சர்வதேச அரங்கிலும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல விருதுகளை பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கௌரவிப்புக்கான நிதி அன்பளிப்பை ஹட்டன் நேசனல் வங்கி வழங்கியிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து மகளிர் அணியின் தலைவி நடராசா வினுசா பேசிய போது ” கிளிநொச்சி மாவட்ட மகளிர் இன்று பல்வேறு பட்ட துறைகளிலும் மிளிர ஆரம்பித்துள்ளனர். இருந்த போதும் பெண்கள் என்பதாலோ என்னமோ அவர்கள் எவ்வளவு பெரிய சாதனை படைத்தாலும் அதனை நமது சமூகத்தினர் கண்டு கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் RollBall அதாவது உருள்பந்து விளையாட்டு வீராங்கனைகளாகிய நாம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன் – நமது அணியைச் சேர்ந்த பல வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கிலும் கால் பதித்துள்ளனர். ஆனால் இந்த விளையாட்டு பற்றி கூட எம்மில் பலருக்கு இன்னும் தெரியாது உள்ளது. நாம் விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாது சிரமப்பட்டு கொண்டிருக்கின்றோம். விளையாட வருகின்ற அனைத்து வீராங்கனைகளுமே கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உடையவர்களே. மற்றைய பகுதிகளில் விளையாட்டு வீராங்கனைகள் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்ட அவர்களுக்கான உதவிகள் செய்யப்படுகின்ற போதிலும் கூட எமக்கு கிடைக்கக்கூடிய சமூக மட்டத்திலான ஆதரவு என்பது மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. பயிற்றுவிப்பாளரும் – சில அதிகாரிகளும் மட்டுமே எங்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துகிறார்கள். எங்களுடைய பல வீராங்கனைகளுக்கு விளையாடுவதற்கான சப்பாத்து கூட இல்லாத ஒரு துர்பாக்கிய சூழலே நிலவுகின்றது. விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு தளம் கிடையாது. விளையாடுவதற்கான பயிற்சிகளை கூட நாம் பாடசாலையின் பிரதான மண்டபத்திலேயே மேற்கொள்ள வேண்டிய சூழலே காணப்படுகின்றது. எனவே இந்த இடத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் போல எங்களை ஆதரிக்க கூடிய பலரை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்குமா இன்னும் பல மாணவிகளை சர்வதேச அரங்குக்கு எங்களால் கொண்டு செல்ல முடியும்.” என அவர்  குறிப்பிட்டிருந்தார்.