லைக்காமோபைல்

லைக்காமோபைல்

போலிச் சாமியார் ஓம் சரவணபவாவுக்கு முண்டுகொடுக்கவில்லை! – தனிமனிதர்களின் நம்பிக்கைகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பல்ல

வர்த்தக ரீதியில் தென்னிந்திய சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ள லைக்காமோபைல் நிறுவனத்துக்கு எதிரான தீவிர செய்திப் பிரச்சாரங்கள் தமிழகத்தில் முடக்கிவிடப்பட்டுள்ளது. அதன் எதிரொலிகள் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கின்றது. “லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் போலிச் சாமியார் ஓம் சரவணபவவிற்கும் எவ்விதமான அமைப்பு ரீதியான தொடர்புகளும் கிடையாது. வியாபார ரீதியாக லைக்காவுக்கு ஓம் சரவணபவவினால் எவ்வித நன்மையும் கிடையாது. ஓம் சரவணபவவுடன் கறுப்பு பணத்தைக் கூட வெள்ளையாக்க முடியாது. லைக்காவின் நிதிப் புரள்வோடு ஒப்பிடுகையில் ஓம் சரவணபவவின் அறக்கட்டளைக் கணக்கு ஒரு பொருட்டானதேயல்ல.
சமூக வலைத்தளங்களில் போலிச் சாமியார் எப்படி லைக்காவுடன் பேசப்பட்டார்?
லைக்காமோபைல் நிறுவனத்தின் துணை நிறைவேற்று பொறுப்பாளரான பிரேம் என்றழைக்கப்படும் பிரேமநாதன் சிவசாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிய காலகட்டத்தில் பிரேமின் நண்பர்களால் முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிரேமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரேமின் குடும்ப நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரேமின் வீட்டினுள் ஓம் சரவணபவ நுழைந்தார். பிரேம் யார் என்பதையும் பிரேமின் நோயையும் நன்கு அறிந்து வைத்திருந்த ஓம் சரவணபவ திறம்பட தனது காய்களை நகர்த்தி ஆடினார். சுவாமி தனது வித்தைகளை செவ்வனே பயன்படுத்தி பிரேம் குடும்பத்தை குறிப்பாக பிரேமின் மனைவியை ஆன்மீகத்துக்குள் இழுத்தார். இத்தம்பதியர் ஹரோ ஓம் சரவணபவ ஆலயத்தில் அம்மனுக்கான ஒரு இடத்தைக் கட்டிக்கொடுத்தனர். அவர்கள் அதனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
பிரேம் ஊடாக சுபாஸ்கரனின் தொடர்பும் கிடைத்தது. சுபாஸ்கரனும் சுவாமிகளின் தீர்த்தம் பெற்றார்.
அதேசமயம் என்புமச்சை சிகிச்சை மூலம் பிரேம் நோயில் இருந்து குணமடைந்தார். இருந்தாலும் நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஓம் சரவணபவ தலையிட்டதால் அன்று அவர் காட்டிய பரிவான கரிசனைக்கு பிரேம் தம்பதியர் நன்றியுடையவர்களாக உள்ளனர். ஓம் சரவணபவ என்ற இந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் இவ்வாறான பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்வந்தர்களை அணுகி அவர்களை வென்றெடுப்பதில் பெரும் கில்லாடி. அந்த வலையில் வீழந்துள்ளதே தெரியாமல் உள்ள பல நூற்றுக்கணக்கானோரில் பிரேம் தம்பதியினரும் அடங்குகின்றனர்.
இது தொடர்பாக இவ்வழக்கோடு தொடர்புடைய சட்டவல்லுநர் ஒருவர் கூறுகையில், பிரேம் தம்பதியினரின் நிலையைத் தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தர். தானும் இவ்வாறு ஓம் சரவணபவவின் கரிசனையில் மயங்கி பல்லாயிரம் பவுண்களை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பிரேமின் குடும்ப நண்பர் மேலும் தெரிவிக்கையில், பிரேமின் மனைவி இப்போதும் அந்த ஆலயத்துக்குச் சென்று தாங்கள் கட்டிய அம்மன் சன்னிதானத்தில் அமைதியாக இருந்து கும்பிட்டு வருகின்றார். இந்த தனிமனித நம்பிக்கைகள், பலவீனங்கள் ஒவ்வொரு மனிதர்களிடமும் உண்டு என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னணியிலேயே லைக்காமோபைல் நிறுவனத்தை ஓம் சரவணபவவுடன் தொடர்புபடுத்தி தங்கள் வியாபாரப் போட்டிகளுக்காகச் செய்வதாக அந்நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
லைக்காமோபைல் ஒன்றும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் கிடையாது. கூகிள், ஸ்ரார்பக், டொனால்ட் ரம் போல் வரிசெலுத்தாமல் டிமிக்கி விகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது நீண்டகாலமாகவே உள்ளது. மேலும் தமிழ் கோப்பிரேட் நிறுவனமான லைக்காமோபைல் ஏனைய கோப்பிரேட் நிறுவனங்கள் போன்று லாபத்திற்காக எதனையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களாகவே உள்ளனர். ஆனால் ஓம் சரவணபவவின் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கும் லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் தொடர்புகளும் கிடையாது எனத் தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக பிரேம் சிவசாமியிடம் கேள்வி எழுப்பிய போது: “ஓம் சரவணபவ – முரளிகிருஸ்ணன் புலிக்கள் குற்றவாளியா இல்லையா என்பதை பிரித்தானியாவின் சட்டத்திடமே விட்டுவிடுவோம். நானோ எனது நிறுவனமோ அவரைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அவருக்கு எவ்வித சட்ட உதவிகளையும் செய்து கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். “அவர் குற்றம் செய்திருந்தால் அவரை இந்நாட்டு நீதிமன்றம் தண்டிக்கும்” என்றும் தெரிவித்தார். பிரேம் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் ஓம் சரவணபவ ரஸ்டிகளிடமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிதியுள்ளது. அவர்களுக்கு நான் சட்ட உதிவியோ நிதியுதவியோ செய்ய வேண்டியதில்லை” என்றும் தெரிவித்தார்.
பிரேம் மேலும் குறிப்பிடுகையில் “தேசம்நெற் இல் வெளியான சில தகவல்கள் தவறானது என்றும் எழுத்தமைப்பு ஆரோக்கியமானதாக அமையவில்லை” என்றும் தெரிவித்தார்.
ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்ததைத் தொடர்ந்து லண்டனில் உள்ள தமிழர்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராகவும் சார்பாகவும் பிளவடைந்துள்ளனர்.
இவ்வழக்கு டிசதம்பர் 5 முதல் ஒரு வாரத்திற்கு நடைபெறவுள்ளது. அதுவரை ஓம் சரவணபவவிற்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. ஓம் சரவணபவ தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி மேற்கொண்ட விண்ணப்பம் யூலை 24 இல் விசாரணைக்கு வருகின்றது.