லொஹான் ரத்வத்த

லொஹான் ரத்வத்த

சட்ட விரோதமாக சொகுசு காரை பயன்படுத்திய விவகாரம் – முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கைது !

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்..? – சிறைச்சாலை ஆணையாளர் வெளியிட்ட தகவல் !

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மிரிஹான பொலிஸாரால் லொஹான் ரத்வத்த கடந்த 31ஆம் திகதி கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அன்றிரவு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இருந்து நுகேகொட பதில் நீதவான் முன்னிலைக்கு அழைத்து வரப்பட்ட அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, லொஹான் ரத்வத்த முன்னாள் சிறைச்சாலை அமைச்சராக இருந்ததன் காரணமாக அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கவும், மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் பேரில், கடந்த 31ஆம் திகதி முதல் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி முன்னாள் அமைச்சரின் உடல் நிலை குறித்து சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து அறிக்கை வரவழைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அவர் கல்லீரல், நுரையீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை விசேட மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என்று சிறைச்சாலை மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.