வஜிர அபேவர்தன

வஜிர அபேவர்தன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை – வஜிர அபேவர்தன புகழ்ச்சி !

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மக்கள் குப்பைத் தொட்டியில் வீசாமல் இருந்திருந்தால் நாடு இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீழ்ந்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிராமம் கிராமமாக விநியோகிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மீண்டும் வாசிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த வஜிர அபிவர்தன ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை. ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினால் நிச்சயமாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடயங்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருவதாகவும் அதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை ஒவ்வொரு நொடியும் அதிகரித்து வருகின்றது. இன்று ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசிய பொக்கிஷமாக மாறியுள்ளதாகவும், ஆசியாவில் இலங்கையை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த தேசிய பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

“ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதியாகவும் வருவார் ரணில்.”- வஜிர அபேவர்தன

ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என தான் முன்னர் கூறியது இன்று நடந்து கொண்டிருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 

காலியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“அரசியலில் எனக்கு இருக்கின்ற அனுபவங்களை வைத்து நான் ரணில் நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வரும்போது ஒரு விடயத்தை குறிப்பிட்டேன். அதாவது ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் என்று நான் கூறினேன். அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இன்று ரணில் பிரதமராகிவிட்டார். நான் அன்று கூறிய விடயம் அவ்வாறே நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் பதற்றமடையாமல் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருங்கள். நான் கூறியது எல்லாம் நடக்கும்.

அதுமட்டுமன்றி டொலர் இல்லாத ரூபாய் இல்லாத ஒரு திறைசேரியையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டார். அதுவும் மிகவும் தாமதமாகவே ரணிலுக்கு கிடைத்திருக்கின்றது. அப்படி காலியான வெறுமையான திறைசேரி கிடைத்திருந்தாலும்கூட மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பார்.

சிறிய தாமதம் ஏற்படும். ஆனால் பதற்றப்படாமல் அவசரப்படாமல் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருங்கள். பிரச்சினைகளை ரணில் விக்ரமசிங்க தீர்த்து வைப்பார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய தேவை அரசியலமைப்பு மாற்றமல்ல. பொருளாதார முன்னேற்றம்.”- ஐக்கிய தேசியக் கட்சி

இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு காணும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது அரசியலமைப்பின் 19, 20 அல்லது 21வது திருத்தத்தை மக்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

மாறாக, மக்கள் வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஒரு பொதுவான போராட்டத்தின் போது சில அரசியல் கட்சிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்னும் சீராக வழங்கப்படவில்லை. ஒரு சிலிண்டரின் விலை 2,650 ரூபாவாக இருந்த போதிலும், முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க நான்கு வருடங்களுக்கு 1,650 ரூபாவிற்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் தனது பதவிக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிலையான விலையை உறுதி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.