வடக்கு

வடக்கு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது – ஜோசப் ஸ்டாலின் விசனம் !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.
இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது.
அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.
எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

1980க்கு முன்பிருந்ததை போல வடக்கை மாற்றப்போகிறேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியது.

அந்த பலமான பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்.

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், பொருளாதார அபிவிருத்தியம் அவசியம்.

மேலும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் மக்களின் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பில் தங்கியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள 100 ஏக்கர் காணியை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு!

வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இராணுவம் நிலைக்கொண்டுள்ள தமது காணிகளை விடுவித்து தருமாறு வடக்கு மக்கள் நீண்டகாலம் போராடியும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இதனடிப்படையில் குறித்த காணிகளில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரையும் முகாம்களையும் அங்கிருந்து வேறு இடங்களுக்கு நகர்த்தி அந்த காணிகளை உரிய மக்களிடம் வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுபாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ள 100 ஏக்கர் காணியை உரிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த காணி விடுவிப்பு இடம்பெறுவதுடன், நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு தரப்புகளின் பயன்பாட்டில் மேலும் மக்கள் காணிகள் இருப்பின் அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

“வடக்கில் போதைப் பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.” – நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச

போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திர முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை நேற்று (31) திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது வைத்தார்.  இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2 மாதத்திற்குள் யாழில் 508 பேர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வடக்கில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திரம் முடியாது. அனைவரதும் ஒத்துழைப்பும் தேவை. தற்போது வடக்கில் ஒரு புதிய பிரச்சனை உருவாகி வருகிறது. இலங்கை முழுவதும் இந்த போதைப் பொருள் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. ஆனால் வடபகுதியில் அது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.

கடந்த 2 மாதத்திற்குள் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்கால இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயற்பாடு தொடர்பில் ஒரு பொறுப்பாக செயற்பட வேண்டியுள்ளது.

அந்த விடயத்தை தடுப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதாக உள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இந்த போதைப்பொருள் பாவனை மிக அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் போதைப் பொருள்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது அதிகளவாக காணப்படுகின்றது.இது ஒரு விபரீதமான ஒரு செயல்பாடாக காணப்படுகின்றது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் பாரதூரமான செயற்பாடாக காணப்படுகிறது.

அத்தோடு இந்த விடயம் போதைப்பொருள் வியாபாரிகளால் உருவாக்கப்படுகிற செயற்பாடாக காணப்படுகின்றது. அதாவது குறிப்பாக யாழ் மாவட்டம் மிகவும் ஒரு பாதிப்பான நிலையில் காணப்படுகின்றது. இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நாங்கள் உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முப்படையினர் பொலிசார் அனைவரையும் இணைத்து இதனை தடுப்பதற்கான நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.

இந்த போதைப் பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு உபரியான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் நான் ஆராயவுள்ளேன் என்றார்.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை – அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் முன்வைத்த கோரிக்கை !

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக நேற்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகளை நீதிமன்றத்துக்கு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு மையம் ஒன்றை வட பகுதியில் உருவாக்குதல் போன்றவற்றின் அவசியம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்ட நிலையில், குறித்த கருத்தை ஏனைய அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில், பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போணோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணி தொடர்பான பிணக்குகள் உட்பட வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் அடையாளப்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பரிகாரம் வழங்குவதே இக்குழுவின் நோக்கமாகும்.

வடக்கு கடற்கரை பகுதிகளில் தொடர்ந்தும் கரையொதுங்கும் சடலங்களும் – மனித எலும்புக்கூடுகளும் !

தொண்டமனாறு உயரப்புலம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக் கூடென சந்தேகிக்கப்படும் பாகங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மனித எச்சங்களென சந்தேகப்படுவது தொடர்பில் மீனவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாருடைய சடலம் என்பது இதுவரை அடையாளம் காண முடியாத நிலையிலும் ஆணா, பெண்ணா என அடையாளப்படுத்த முடியாத அளவில் இவை காணப்படுகின்றன.

வட கடல் கரையோரங்களில், மனித உடல்கள் கரையொதுங்குவதும் ,மனித எச்சங்கள் கரையொதுங்கும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால், அவ்வாறான சடலங்களில் எந்தவொரு சடலமும் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை.