வடக்கு – கிழக்கு

Friday, December 3, 2021

வடக்கு – கிழக்கு

பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு நகர்த்த பெரும் முயற்சி – ஊடுருவும் சிங்களவர்கள் !

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் தலைவராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.”  என  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிறிதரன் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்திலே இருக்கின்ற குறிப்பாக வடக்கையும், கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ள பனை  அபிவிருத்தி சபை என்பது  இப்போது கொழும்பை நோக்கித் தள்ளப்படுகின்றது. அதனுடைய தலைவராக தற்போது முதன்முதலாக ஒரு சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார். நான் அவர் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், பனை  அபிவிருத்தி சபை தமிழர்களின் பாரம்பரிய தொழிலை அடிப்படையாகக்கொண்டது. எனவே, தயவு செய்து அதனைத் தமிழர்களிடம் விடுங்கள். ஒரு கித்துள் திணைக்களத்துக்கோ அல்லது தென்னை அபிவிருத்தி திணைக்களத்துக்கோ தமிழ்த் தலைவரை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை.

பனை  அபிவிருத்தி சபை கம்பணக்காளர், உத்தியோகஸ்தர்களில் கூட அதிகளவான சிங்களவர்கள் இணைக்கப்படுகின்றனர். பனை அபிவிருத்தி சபையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகினறன. அது வடக்கு, கிழக்குக்கு உரியது. அதில் உள்ள தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று அறிகின்றோம்.  பல பேரின் மாற்றங்களில்  தமிழர் நீக்கப்பட்டு சிங்களவர் நியமிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வடக்கு மாகாண செயலருக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியாத ஒரு சிங்கள மொழி பேசுபவர். நாங்கள்  மொழி ரீதியாக அவருடன் பேச முடியாது. வடக்கு மாகாண ஆளுநரால் கூட தமிழ் பேச முடியாமல் உள்ளது. அவ்வாறான நிலைமைக்குள்தான் நாம் தொடர்ந்தும் தள்ளப்படுகின்றோம்.

ஒரு கல்வி அமைச்சை எடுத்தீர்களேயானால் அங்குள்ள மேலதிக செயலாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. பல அரச திணைக்களங்களில் இதே நிலைதான். தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பதற்கு கூட ஆட்கள் இல்லை. இன விகிதாசாரம் கூட பேணப்படாது நிலைமை மோசமாக இருக்கின்றது. தயவு செய்து இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துங்கள்” – என்றார்.

“9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.” – நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என  நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று சனிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மேலும் கூறுகையில்,

பொருட்களின் விலைகளை குறைக்க குறுங்கால தீர்வுகள் தோல்வியடைந்துள்ளதால் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த அரசும் பொருட்களின் விலைகளைக் குறைத்தது கிடையாது. பொருட்களின் விலையேற்ற பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு தேடி எமது நாடு மட்டுமன்றி ஏனைய நாடுகளும் தோல்வியடைந்தன. உற்பத்தியை அதிகரித்து பொருட்களை சந்தையில் இலகுவாகப் பெறக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேறு அணுகுமுறை  தீர்வையே   முன்வைத்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து தருவிக்கும் பொருட்கள் அடுத்த வருடம் குறையும் என்று கூறு முடியாது. இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது விலைகள் உயரும். பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க ஆவண செய்யப்படும்.

பொருட்களின் விலைகளில் மாற்றம் இருந்தாலும் தட்டுப்பாடின்றி அவை கிடைக்கும். முறையற்ற விதத்தில் பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களைச் சூறையாட வேண்டாம் என வியாபாரிகளிடம் கோருகின்றோம். பின்தங்கிய மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகை வழங்குவதற்காக 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மாதங்களுக்கு நிவாரணப் பொதி வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக ஓரிரு பொருட்களின் விலைகளை குறைப்பதில் பயனில்லை. எரிவாயு  விலையைக் குறைப்பதால் சகல மக்களுக்கும் நன்மை கிடைக்காது. எரிவாயு  பாவிக்காத மக்களும் உள்ளனர். விசேட வர்த்தகப் பண்டவரியின் கீழ் மக்கள் மீது சுமையேற்றப்படமாட்டாது – என்றார்.

இதன்போது வடக்கு, கிழக்கு தொடர்பில் இந்த வரவு – செலவுத்திட்டத்தில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில்  ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பதிலளிக்கையில்,

நாம் ஒரே நாடாகவே இந்த வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு என்று பாராது 9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி இந்த வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

30 வருட போர் காரணமாக அப்பிரதேசங்கள் பின்னடைந்திருந்தன. எமது அரசு  வடக்கின்  வசந்தம் மற்றும் கிழக்கின்  உதயம் திட்டங்களின் கீழ் அப்பிரதேசங்களை ஏனைய மாகாணங்களுக்கு சமமாக அபிவிருத்தி செய்தது. சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 17 மிதவைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டன. வடக்கில் 85 வீதம் வயல் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளன.

9 மாகாணங்களிலும் வாழும் மக்களையும்  சமமாக கவனிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட 14 ஆயிரத்து 21 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனது கிராம சேவகர் பிரிவுக்கும் 3 மில்லியன் ரூபாதான் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இன, மத மற்றும் பிரதேச பேதமின்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

3 வருடங்களின் பின்னர் சிகரெட் விலை 5 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதி அமைச்சர், “சிகரெட் விலையைக் கூடுதலாக அதிகரிப்பது தொடர்பில் சட்டப் பிரச்சினை உள்ளது. சிகரெட், மதுபானம் மற்றும் சீனிக் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதாரத் தரப்பால்  எமக்கு யோசனை முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், சீனி தவிர  சிகரெட் மற்றும் மதுபானம்  ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய காலம் 5 வருடத்தில் இருந்து 10 ஆக அதிகரிக்கும் யோசனை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் முன்வைக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கும் 10 வருடங்கள் பணியாற்றினாலே ஓய்வூதியம் கிடைக்கின்றது. அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான  காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டது. இந்த யோசனையை  முன்வைத்தபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் கரகோசம் செய்தனர். இது தொடர்பான சட்டத்துக்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவர் என நம்புகிறேன். இளம் நாடாளுமன்ற உறுப்பினர்க்களே கூடுதலாக உள்ளனர். அடுத்த தடவையும் அவர்களுக்குப் நாடாளுமன்றம் வரச் சந்தர்ப்பம் உள்ளது – என்றார்.

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” – இரா.சாணக்கியன்

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. வடக்கின் அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும்.உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பில்லியனர்கள் தமது திறமையால், உழைப்பால் முன்னேறி வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், எமது நாட்டில் மில்லியனர்கள் அதிகளவில் உள்ளனர். திருட்டுகளின் ஊடாக மில்லியனரகள் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் திருட்டுகளுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் உள்ளனர்.  திறமையால் முன்னேறியவர்களும் இருக்கின்றனர். எனினும்,  அரசியல்வாதிகள் உதவியுடன் பணம் சம்பாதித்தவர்களே அதிகளவானவர்கள் உள்ளனர். அண்மைய காலங்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்குள் பில்லியன் கணக்கில் இலாபம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு அவ்வாறு முடியும் என்றால், அரசுக்கு வருமானம் குறைவடைந்தமை குறித்து அரசாங்கம் தேடியறிய வேண்டும்.

அரசு வழங்கிய வரி சலுகைகள் காரணமாக பொதுமக்களை விட நிறுவனங்களே அதிகளவில் நன்மை பெற்றனர். இன்று சீமெந்து, பால்மா, கேஸ் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன. சீனி மோசடி, வெள்ளைப்பூடு மோசடி என்று மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். நான் விமர்சிக்கவில்லை. வரிச்சலுகை வழங்கப்படுவதால் சாதாரண மக்கள் மீதே தாக்கம் செலுத்துகின்றது.  பாரிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் வகையிலான வரிச்சலுகை முறையினரை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ஏப்ரல் பட்ஜட்டில் முன்மொழியப்பட்டது. இன்றுவரை 153 குடும்பங்களுக்கு மாத்திரம் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவும் 2019 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படவில்லை. காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும், அதனை செய்யும் வரை அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அதற்காக மரண சான்றிதல் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே  காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை இந்த தொகை அந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். வடக்கு – கிழக்கில் உள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எம்மிடம் உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு – கிழக்கில் உங்கள் அருகில் வைத்திருந்த அந்த நபர்கள் செய்த மோசடிகள், திருட்டுகள் காரணமாகவே நீங்கள் பாரிய தோல்வியை அந்தப் பகுதிகளில் சந்திக்க நேரிட்டது. இன்றும் அதுதான் நடக்க போகின்றது. நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்.

அடுத்தது, சதாசிவம் மயுரன் வியாழேந்திரனின் தம்பி, அடுத்தது, சிவனேசத்துறை சந்திரகாந்தன். இந்த தகவல்களை நாடாளுமன்றில் தான் நான் பெற்றுக்கொண்டேன். நாங்கள் நிதியமைச்சருடன் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி வேலைத்திடங்களில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எம்மிடம் சிறந்த முன்மொழிவுகள் உள்ளன.

மாவட்ட ரீதியில் சில முன்மொழிவுகளை கூட எம்மால் வழங்க முடியாது உள்ளது. எனவே எமது திட்டங்களை முன்மொழிய எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்கிறது” – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு !

“புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது என பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்து வருகின்றது. இதனை அரசாங்கம் நழறுத்த வேண்டும்” என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தன்னுடைய கோரிக்கையினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்  சுரேஷ் பிரேமச்சந்திரன் . அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது ஒரு வருட நிறைவு விழாவில் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகவும் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஒருவருட சாதனைகளை அவர் பட்டியலிடும் பொழுது, முதலாவதாக கிழக்கிலங்கையில் சிங்கள பௌத்த புராதனச் சின்னங்களை அடையாளமிடுவதற்கான ஆணைக்குழுவை நான் நியமித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரையை கபளீகரம் செய்து, அதனை சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, வடக்கு-கிழக்கின் முக்கியமான பல பகுதிகளை முழுமையாக கபளீகரம் செய்து, அங்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்த பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கையேற்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கோ? அல்லது பிரதேச செயலருக்கோ? எத்தகைய நிர்வாக அதிகாரமும் இல்லாமல் செய்து, அதனை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையேற்பதன் ஊடாக அதனை முழுமையான சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பினும்கூட, அடுத்த கட்டங்களில் என்ன நடக்குமென்று கூறமுடியாது. இதனைப் போன்றே, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ ஒன்பது காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அடையாளமிடப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் 20,2343 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 11ஹெக்டெயர், 7 ஹெக்டெயர், 1ஹெக்டெயர் நிலப்பரப்பு காணிகளும் குச்சவெளி திரியாய் கிராமத்தில் 20ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி கும்புறுபிட்டி கிழக்கு கலப்பையாறு கிராமத்தில் 20 ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 3 பிரதேசத்தில் 6ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 1 நிலப்பரப்பில் 13 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேசத்தில் மற்றொரு பகுதியில் 19 ஹெக்டெயர் நிலப்பரப்பும் பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அரசாங்கம் ஒப்புதலளித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட குச்சவெளி பிரதேச எல்லைப்புற கிராமங்களும் சிங்கள மயமாக்கப்படுவதற்கான அடிப்படையிலேயே புத்த கோயில்களுக்கான காணிகளை கையகப்படுத்துவதும் முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்பேசும் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி போன்ற ஒரே பிரதேச செயலகப்பிரிவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன? சிங்கள மக்களே இல்லாத இத்தகைய பிரதேசத்தில் மிக நெருக்கமான முறையில் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் காணிகளை வழங்க முன்வருவதும், மிகப் பாரிய அளவிலான சிங்கள பௌத்த விஸ்தரிப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இது அந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மை தேசிய இனங்களை சிறுபான்மையாக்கும் முன்னெடுப்பாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, போன்ற எல்லைப்புற பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லைப்புற பிரதேசங்களிலும் அங்கு வசித்து வந்த தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வந்திருக்கின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் கடந்த எழுபது வருடங்களாக முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக காணிகளை நிர்வாகம் செய்வது போன்ற பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவருவதையே மேற்கண்ட நடவடிக்கைகள் தெளிவுபடுத்தி நிற்கின்றது.

இலங்கை அரசாங்கங்களின் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இரண்டு பகுதிகளாக மாற்றுவதற்கான முயற்சியே ஆகும். இதனூடாக தமிழ் மக்களின் இருப்பும் அடையாளமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நீதிமன்றங்களினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தற்காலிகத் தடை உத்தரவுகள் என்பது இவற்றுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. வடக்கு-கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் இத்தகைய கபடத்தனமான சூழ்ச்சிகளை முறியடித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.” என அவர் தன்னுடைய கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கின் அபிவிருத்திக்காக நடப்பு ஆண்டில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை” – பாராளுமன்றில் கஜேந்திரன் !

‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும்”  என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த  விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த தேர்தல் காலத்தின்போது பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

பருத்தித்துறையில் இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவரின் பதவி கடந்த ஓகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாகவும் பின்னர் வந்த பட்டியலில் இல்லையென்றும் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று 600ற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. வடபிராந்திய போக்குவரத்துத் திணைக்களத்தில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் தமக்குப் பணியாற்றியவர்கள் இவ்வாறு பதவியில் இணைக்கப்படுகின்றனர்.

இரண்டு அரசாங்கங்களும் மாறி மாறி இவ்வாறான செயற்பாடுகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் தாண்டிய சட்டவிரோதமான செலவீனங்களுக்கும் சேர்த்து அங்கீகாரம் பெறுவதற்கு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வடமாகாண போக்குவரத்து சபையானது சீரழிந்து வருகிறது. ஏதாவது விபத்தொன்று இடம்பெற்றால் இதற்கான தீர்ப்புக்காக சம்பந்தப்பட்ட சாரதிகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றனர். ஏனைய மாகாணங்களில் அவ்வாறு இல்லை. வடமாகாணத்தின் கல்வி நிலைமை மோசமாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்த்த வடபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்பள்ளிகளை அமைத்து ஆசிரியர்களுக்கு சம்பளங்களை வழங்கி அவற்றை நிர்வகித்து வருகிறது.

மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள விடயம் வேண்டும் என்றே சீரழிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான முறைகேடான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடபகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.