வடக்கு பொருளாதாரம்

வடக்கு பொருளாதாரம்

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

யாழ்.மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான நேற்றைய(02) சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள போதிலும் அந்த மாகாணத்தில் பெருமளவு பொருளாதார திறன் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அந்த சந்தர்ப்பங்களை வடக்கு மாகாணம் உட்பட முழு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற கடன் பெற்றதாலேயே நாட்டின் பொருளாதாரமும் அரசியல் கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

அதே தவறு மீண்டும் இடம்பெற அனுமதிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறையில் முன்னேறிச் செல்வதற்கு பங்களிப்பது நாட்டிலுள்ள அனைத்து கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் உட்பட அனைவரினதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கு முதன்மை இடம் கிடைத்தாலும் அனைவரையும் சமமாக நடத்துதல் மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

 

தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன் ஏனையவர்களுக்கு கிடைக்கப்பெறாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

வறுமை ஒழிப்பு, விவசாய நவீனமயமாக்கல் போன்ற பிராந்திய அபிவிருத்திக்காக மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

பெண்களினதும் இளைஞர்களினதும் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில் மாகாண சபைத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்து மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுவதற்கு இடமளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் மூலம் மத்திய அரசும் மாகாண நிர்வாக பொறிமுறையும் இணைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவற்றில் யாழ்ப்பாணம் பெரும் திறனை கொண்டுள்ளதுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்து நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.