வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ்

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் ஆறுதிருமுருகனினால்  இயக்கப்படும் துர்க்கா சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவினர் மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

 

இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை !

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை புதன்கிழமை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக நாளை முதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளன.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வை திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இவர்களில் தேவைப்படும் மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளன. மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படும் மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலையினை கருத்திற் கொண்டு, மாணவர்களின் பாடசாலை கற்றல் நிறைவு பெறும்வரை தொடர்ச்சியாக இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, ஆளுநரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து இதில் பங்காற்றவுள்ளன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் 06 மாத காலத்திற்குள் இந்த செயற்றிட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவுறுத்தல் !

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் காவல்துறையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த விடையம் தொடர்பில் உடன் நடைமுறையாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் ஆளுநர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.