வட மாகாண ஆளுநர்

வட மாகாண ஆளுநர்

வடமாகாண சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் சந்திப்பு !

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இயற்கை வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

வடக்கின் புதிய ஆளுநராக பதவியேற்றார் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் – வழங்கியுள்ள உறுதிமொழிகள் என்ன..?

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத்தர முயல்வேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் (22) உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று என்னை வாழ்த்துவதற்கு வருகைதந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத் தருமாறு கூறியிருக்கின்றார்கள். எனவே, அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி, அதற்கு தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பேன்.

இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்குமான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில், அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிக்கின்றேன்.

அதேபோல அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம் அவர்களால் மாகாண மக்களின் குறிப்பாக, யாழ். மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.

ஏற்கனவே, பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும், அதை முன்னெடுத்து செல்லும்படியும் கூறியிருக்கிறார். அது தொடர்பாகவும் நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியில் ஒரு பெரும் பிரச்சினையாக உணர்ந்திருக்கின்றேன். எனவே, அந்த பிரச்சினையை தீர்க்க நிச்சயமாக முக்கிய கவனம் எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றியது தவறு – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு !

வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக வட மாகாண சபை இல்லாத காலத்தில் சட்ட வரம்பை மீறி ஆளுநர் தன்னிச்சையாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்பதை வலியுறுத்தி வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தாக்கல் செய்த தடைகேள் ஆணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பந்துல கருணாரட்ன மற்றும் எம்.மரிக்கார் அமர்வின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மனுதாரரான சீ.வீ.கே.சிவஞானம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மற்றும் நிரான் அன்கிட்டல் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அப்போது ஆளுநரின் நியதிச் சட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தடைவிதித்தும், குறித்த சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தாமல் இருக்குமாறும் எழுத்தாணையை பிறப்பிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், ஆளுநரின் நியதிச்சட்ட வர்த்தமானி அறிவித்தல் தவறானது என்றும் அதனை செயற்பாட்டிலிருந்து நீக்குவதாகவும் மன்றுக்கு அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த செயற்பாடு நடைமுறையில் இடம்பெறுவதை அவதானிப்பதற்காக மீண்டும் மே 24ஆம் திகதி மன்று குறித்த விடயத்தினை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.