வரவு செலவு திட்டம் 2025

வரவு செலவு திட்டம் 2025

என்.பி.பியின் வரவுசெலவு திட்டத்திற்கு ரெலோ ஆதரவு  – விளக்கம் தருகிறார் பா.உ செல்வம் அடைக்கலநாதன் !

என்.பி.பியின் வரவுசெலவு திட்டத்திற்கு ரெலோ ஆதரவு

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களுக்கு சாதகமான பல விடயங்கள் உள்ளதால் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்ததாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பா.உ செல்வம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்தமை விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து இது தொடர்பில் அவர் தனது தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவித்த போது,

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடன் மக்களின் ஆணையைக் கோரிய ஜனாதிபதி அநுரவின் முதலாவது வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர்கள் வடக்குக்கு அதிக ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார். அதனைவிடவும், சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை கட்சி அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், அவர்களின் முன்மொழிவுகள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்பது எனது வலியுறுத்தலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் முன்மொழிவுகளை கவர்ச்சிகரமாக முன்வைத்தாலும் அவற்றை செயற்படுத்துவதில்லை.

பொருளாதாரரீதியாக வரவு,செலவுத்திட்டம் முன்னேற்றகரமாக இருந்தாலும் அவற்றை செயற்படுவதில் அரசாங்கம் அதீதமான முனைப்பினைக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதேநேரம், அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டியது அவசியம். இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் தாமதமன்றி முன்னெடுக்க வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

 

“தமிழர்களுக்கு அனுர குமார பிச்சை போடத் தேவையில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் நாங்கள் பிச்சை தருகிறோம் உங்களுக்கு” தனது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத்திலேயே ஆரம்பித்து விட்டார் பா. உ அர்ச்சுனா. வடக்குக்குகான நிதி ஒதுக்கீட்டை வரவேற்றுப் பேசிய அர்ச்சுனா நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தடாலடியாக பல்டி அடித்து எங்களுக்கு பிச்சை வேண்டாம், உங்களுக்கு நாங்கள் பிச்சை போடுகிறோம் என்றார்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கினால் நாட்டிற்கு பில்லியன் கணக்கான முதலீடுகளை எமது சகோதரர்கள் கொண்டு வருவார்கள் என நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மொத்த மூலதனச் செலவில் வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 0.1 வீதம் மட்டுமே ஆகும். இது அநுர அரசாங்கம் தமிழர்களுக்கு போட்ட பிச்சை. 45,000 தமிழர்களை கொன்றுவிட்டு இதுவே எங்களுக்கு போடும் பிச்சை.

இதேவேளை, சுகாதாரத் துறையில் வடக்கிற்கு 0.6 வீதமும் கிழக்கிற்கு 0.8 வீதமும் ஒதுக்கியுள்ளீர்கள். முடிந்தால் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குங்கள். பில்லியன் கணக்கான பணத்தை நாம் நாட்டிற்குள் கொண்டு வருகின்றோம். நான் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.

அடிக்கடி நிறம்மாறும் அர்ச்சுனா விழுகின்ற பக்கம் குறிவைக்கிறார் என்கிறார் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம். பா உ அர்ச்சுனா வெளியிடும் புள்ளிவிபரங்கள் அவர்களுக்கு ஏற்றவகையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் 2009 மே 17 வரை சர்வதேச அளவில் புலி உறுப்பினர்களிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் இருந்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் வருமானம் வந்தகொண்டிருந்தது. அனால் 2009 மே18 இல் தலைவர் வந்து கேட்டால் தான் தருவோம் என்று பா உ அர்ச்சுனா குறிப்பிடும் சகோதரர்கள் அறிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கிய அத்தனை பில்லியன் சொத்துக்களும் ஒரே இரவில் காணாமல் போனது என்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் ஆய்வாளர் சோலையூரான். முடிந்தால் அர்ச்சுனா வேறு யாருக்கும் பிச்சை போட வேண்டாம் அவர் நேசிக்கும் தலைவனுடைய பாசறையில் வழந்தவர்கள் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு 15 வருடங்கள் துன்பத்தில் உளல்கின்றார்கள் அவர்களுக் உதவட்டும். அர்ச்சுனா தன்னுடைய சகோதரர்களைக் கேட்டு உதவச் சொல்வாரா? எனக் கேள்வி எழுப்புகின்றார் பாரிஸில் வாழும் சோலையூரான்.